Tuesday, December 18, 2018

நல்லதெது? #கெட்டதெது?

கம்ப ராமாயணத்தில் ஒரு காட்சி. ராமன் எய்த அம்பு, அரக்கி தாடகையின் உடலுள் பாய்ந்து வெளியேறுகிறது. இதனைக் காட்சிப்படுத்தும் கம்பர் இங்ஙனம் பாடுகிறார் " கல்லா புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்று ... " அதாவது கல்வி கற்காததால் நல்லது எது ? கெட்டது எது ? எனப் பகுத்தறியத் தெரியாத ஒருவருக்கு நல்லவர் கூறிய பொருள் செவிவழிப் புகுந்து மனத்தில் பதியாமல்,வெளியேறிக் காற்றில் கலப்பதைப்போல் அரக்கியின் உடல் புகுந்த அம்பு வெளியேறியதாம்.
இங்கு நாம் கருதவேண்டியது முக்கியமாக இருசொற்கள்;
1) நல்லோர் 2 ) பொருளென
கல்லாதவருக்குக் கற்றவர்தானே கற்பிக்கவேண்டும் ? ஆனால் கம்பரின் கூற்றுப்படி நல்லவர்தான் கற்பிக்க வேண்டுமாம். கற்றவரெல்லாம் கற்றவரில்லையாம். யாரொருவர் தான் கற்ற கல்வியின்படி நிற்கிறாரோ, வாழ்கிறாரோ அவர்தான் உண்மையில் கற்றவராம். அப்படிப்பட்டவரைத்தான் 'நல்லோர்' என விளிக்கிறார்.
மேலும் 'சொல்லென போயிற்று' எனச் சொல்லாமல் 'பொருளெனப் போயிற்று' என்கிறார். இதிலிருந்து கம்பரைப் பொறுத்தவரை பொருள் தராத எந்த ஓரு சொல்லும் வெறும் ஓசையே ஆகும்.
பத்தாயிரம் பாடல்களுக்கும்மேல் எழுதிய கம்பர் நிச்சயம் ஓராயிரம் திருக்குறளைக் கரைத்துக் குடித்திருக்க வேண்டும். மேற்காணும் கருத்தோடு பின்வரும் குறட்பாக்களின் கருத்துகளை ஒப்புநோக்கினால் கம்பனின் 'குறள்திறம்' விளங்கும்.
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்
பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...