திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வர் கோயில் உள்ளது. கடன்நிவர்த்தி ஸ்தலமாக விளங்கும் இக்கோயிலில் ஒரே சன்னதியில் சிவ துர்க்கை,விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவ துர்க்கை என 3 துர்க்கைகள் அருள்பாலித்து வருகின்றனர். தேவார பாடல் பெற்ற பைரவ சன்னதியும் உள்ளது. இத்தலத்தில் பிரார்த்தனை தெய்வமாகவும், எல்லா வகை கடன்களையும் நிவர்த்திசெய்கின்ற கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகவும் ரிணவிமோசன லிங்கேஸ்வரர் தனிசன்னதி கொண்டு உள்ளார்.
இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் தற்போது காலை,மதியம்,மாலை என மூன்றுவேளைகளிலும் விசேஷ அபிஷேக ஆராதனையும் சிறப்பு கூட்டு மலர் பிரார்த்தனையும் நடைபெற்று வருகிறது. வாரம்தோறும் கோயில் வாகன மண்டபத்தில் சிறப்பு யாகம் நடைபெற்று பின்னர் மேளதாளங்கள் முழங்க புனித தீர்த்தம் கோவில் உலாவந்து தொடர்ந்து ரிணவிமோசன லிங்கேஸ்வரருக்கு மாபொடி, திரவியபொடி, பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், பால், தயிர் என பல்வேறு திரவியங்களைக் கொண்டு அபிஷேகம் நடைபெறும். புனித நீரை கொண்டும் மகாஅபிஷேகம் நடைபெறும். பின்னர் பக்தர்களுக்கு மலர்கள் கொடுக்கப்பட்டு சிறப்பு கூட்டு பிரார்த்தனை நடந்து மலர் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

No comments:
Post a Comment