Monday, April 9, 2018

பஞ்சலிங்கங்களம் .

திருச்செந்தூர் கடற்கரையில் சிறிய குன்றுகள் இருந்தன. அவற்றிற்குக் கந்தமாதன பர்வதம் என்பது பெயர். இது சந்தணக் கற்களால் ஆனது. இதையொட்டி கந்தமானகிரி என்றும், சந்தன சைலம் என்றும் அழைக்கப்படுகின்றது. இம் மலைகளில் இருந்து எப்போதும் இனிய மணம் கமழ்ந்து கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். இந்தச் சிறிய மலையில் ஆதியில் சிவ பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட குகையும், அதனுள் பஞ்சலிங்கங்களும் இருந்து வருகின்றன.
தேவர்களின் வேண்டுகோளை ஏற்றுச் சிவபெருமான் ஐந்து முகங்களுடன் காட்சியளித்த பின், பஞ்ச பிரம்ம லிங்கமாக ஐந்து லிங்கங்களின் வடிவில் எழுந்தருளியதாகக் கூறுகின்றனர். அசுரர்களை அழித்ததால் உண்டான பெரும் பாவம் தீர, முருகன் இங்கு வந்து குகையிலுள்ள பஞ்ச லிங்கங்கங்களை வழிபாடு செய்தார். அதனால் அவருக்குண்டான பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதாகக் கூறுகின்றனர். திருச்செந்தூரில் முருகன் எழுந்தருளியிருக்கும் சந்நதிக்கு இடப்புறம் சிறிய வாசல் உள்ளது. இதன் வழியாக உட்சென்றால் முருகனுக்கு வலது பக்கம் உள்ள அறையை அடையலாம். இங்குள்ள மேடையில் ஐந்து லிங்கங்கள் வரிசையாக உள்ளன. இவற்றிற்கு லிங்கங்கள் ஆவுடையார் என்னும் சக்திபாகம் இல்லை. உருத்திர பாகமான மேல் பகுதி மட்டுமே உள்ளது. இவற்றிற்கு தினப்பூசை செய்யப்படுவதில்லை.
இந்த லிங்கங்களுக்கு நேராக மேலே துளை இருக்கிறது. நாள் தோறும் நள்ளிரவில் தேவர்கள் இவ்வழியாக வந்து இந்தப் பஞ்சலிங்கங்களைப் பூசிப்பதாக கூறுகின்றனர். குடமுழுக்கின்போது மட்டும் இந்த லிங்கங்களுக்கென யாகசாலை அமைத்து, வேள்விபுரிந்து வேள்விக் கலச நீரால் அபிஷேகம் செய்கின்றனர். சிறப்பு நாட்களில் மட்டும் பஞ்சலிங்கங் களுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த லிங்கங்கள் உள்ள இடத்தைப் பாம்பறை என்கின்றனர். இந்தப் பஞ்சலிங்கத்திற்கு உரிய சக்தியான பராசக்தி ஆவுடை நாயகி என்ற பெயரில் எழுந்தருளியுள்ளாள். இவளது திருவுருவம் உலோகத் திருமேனியாகும். திருச்செந்தூரின் அமைப்பை ஒட்டியே கொங்கு நாட்டு முருகன் கோயில்கள் அனைத்திலும் பஞ்சலிங்க வழிபாடு நடத்தப்படுகிறது என்கின்றனர். கொங்கு நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களிலுமே பஞ்சலிங்க வழிபாடு இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இனி பஞ்சலிங்கங்களைப் பற்றித் தல புராணம் கூறுவதைக் காண்போம். திருச்செந்தூரில் கருவறையின் முன்புறம் அமைந்துள்ள பெரிய மணிகள் இருக்கும் மண்டபமான மணியடியில் வீரமகேந்திரருக்கு இடப்புறம் ஒரு வாயில் உள்ளது. அதன் வழியே உள்ளே சென்றால் குகையைக் காண்கிறோம். இதனைப் பாம்பறை என்கின்றனர். (மூலவரை இடப் புறமாகச் சுற்றிச் செல்லும் வழி) மூலவருக்கு வலப்புறம் அமைந்துள்ள இந்தப் பாம்பறைக் குகையில் ஒரே பீடத்தில் இருக்கும் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இந்த லிங்கங்களை நாள்தோறும் தேவர்களும், முருகனும் பூசிப்பதால் இவற்றிற்கு மானிடர் பூசையில்லை. மேலே நோக்கினால் தேவர்கள் வரும் வழி தெரியும். மகா கும்பாபிஷேக காலத்தில் மட்டும் அபிஷேக ஆராதனை நடைபெறும். இதைப் பற்றிய நாடோடிக் கதை வருமாறு: குலசேகரன்பட்டினத்தை ஆண்ட குறுநில மன்னன் வீரசெந்திக்காத்தான் செட்டி வீட்டுக் காரம்பசு சீவ சங்க வருடம் 4849இல் ஆவணி மாதம் இரவில் நாழிகை 28க்கு மேல் கட்டுக் கயிற்றை அறுத்துக் கொண்டு வெளியே சென்றது.
காலையில் 7 மணிக்குத் திரும்பி வந்தது. பசுவின் பால் கறக்கும்போது பால் கறவையில்லை. அடுத்த நாள் இரும்புச் சங்கிலியில் பசுவைக் கட்டினான். அன்றிரவில் இரும்புச் சங்கிலியையும் அறுத்துக் கொண்டு போய்விட்டது. இதையறிந்த வீரசெந்திக் காத்தான் செட்டி மறுநாள் வேலையாட்களை ஏவி பசு எங்கு செல்கிறது எனப் பார்க்கச் சொன்னார். வேலையாட்கள் பசு வெகு தூரம் சென்று கற்றாழைக் காட்டுக்குள் நுழைந்துவிட்டது என்றனர். அடுத்த நாள் அவர் கற்றாழைகளை வெட்டி பல்லக்கில் ஏறி பசு சென்ற வழியே சென்றார். திருச்செந்தூர் சந்தன மலை அடிவாரத்தில் பஞ்சலிங்கத்திற்குப் பசுபால் சொரிவதைக் கண்டார். செட்டி, புரட்டாசி மாதம் அனுஷ நாளில் பஞ்சலிங்கத்திற்கு ஆலயம் கட்டினார். இந்தச் செய்தி குலசேகரன்பட்டினத்து ஏட்டில் உள்ளது. கரிய மாணிக்கப் பிள்ளையார் முன்புள்ள தூணில் ஒரு பசு லிங்கத்திற்குப் பால் சொரியும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழ்வேளூர் மற்றும் பஞ்சக் கடம்பனூர்களிலும் முருகன் பஞ்சலிங்க வழிபாடு செய்திருக்கிறான். சூரபத்மனை அழித்தபின் திருச்செந்தூரில் முருகப் பெருமான் பஞ்சலிங்க வழிபாடு செய்தது. எல்லோரும் அறிந்ததாகும். மேலும், அவர் நல்லூர், கடம்பன் துறை போன்ற தலங்களிலும் பஞ்சலிங்க வழிபாட்டைச் செய்து பேறுபெற்றுள்ளார் என்பதை வரலாறுகள் கூறுகின்றன. இப்பகுதியில் நாகப்பட்டினம், சிக்கலை அடுத்த கீழ்வேளூரில் அவர் செய்த சிவலிங்க வழிபாட்டைப் பற்றி அறிந்து மகிழலாம். வேள் என்ற சொல் பேரழகைக் குறிக்கும் சொல்லாகும். பேரழகனாக விளங்கும் முருகன் முருகவேள் எனப்படுகிறான். அழகிற் சிறந்தவனான மன்மதனுக்கும் வேள் என்ற பெயர் வழங்குகிறது. அவனை மதவேள் என்றும், காம வேள் என்றும், இலக்கியங்கள் போற்றுகின்றன. முருகன் அழகிய சிவந்த நிறத்துடன் விளங்குவதாலும், செம்மைப் பண்புகளுடன் இருப்பதாலும், செவ்வேள் எனப்படுகிறான். காமன் தன் தந்தையான திருமாலைப் போலவே கருப்பு நிறத்துடன் அழகனாக இருப்பதால் கருவேள் எனப்படுகிறான்.
செவ்வேளாகிய முருகன் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்க பூசித்த தலம் வேளூர் எனப்படுகிறது. இவ்வகையில் வேளூர்கள் பலவகை இருக்கின்றன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களாகப் பெருவேளூர், கீழ் வேளூர், புள்ளிருக்கு வேளூர் ஆகியவை இருக்கின்றன. திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில் கீழ்வேளூர் அமைந்துள்ளது. இத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் கேடிலியப்பர் என்பதாகும். வடமொழியில் இது அட்சயலிங்கம் என்று வழங்குகிறது. இங்குள்ள சோமாஸ்கந்தத் திருமேனிக்கு அட்சயவிடங்கர் என்பது பெயராகும். இங்கு முருகப் பெருமான் சிவபெருமானைப் பூசித்தவாறு வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். அவரால் பூசிக்கப்படும் கேடிலியப்பர் கட்டுமலை மீது எழுந்தருளியுள்ளார். முருகன் கேடிலியப்பரை வணங்குவதுடன் பாவங்களை போக்கி புனிதம் நல்கும் பஞ்சலிங்க வழிபாட்டையும் இத்தலத்தில் செய்கிறார். பிராகாரத்தில் தல மரமான இலந்தை மரமும் பஞ்சலிங்கங்களும் இருக்கின்றன.
முருகன் சிவபூசை செய்யும்போது அசுரர்களால் அவருக்குத் தீங்கு நேராதிருக்கவும், சிவபூசை தடைபடாதிருக்கவும் அன்னை காளிதேவி காவலாக இருக்கிறாள். பிராகாரத்தில் வடக்கு நோக்கிக் கோயில் கொண்டுள்ள இக் காளிதேவியை அஞ்சுவட்டத்தம்மன் என்று அழைக்கின்றனர். முருகப் பெருமான் கேடிலியப்பரை வணங்கி பஞ்சலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதுடன் நில்லாது கீழ்வேளூரைச் சுற்றியுள்ள ஐந்து தலங்களில் ஐந்து லிங்கங்களை அமைத்து வழிபாடு செய்தார். அந்த ஐந்தும் பஞ்சகடம்பனூர் என்று அழைக்கப்படுகின்றன. இவை, கோயில் கடம்பனூர், ஆழிக்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர் வாழ்க்கை, அசுரக் கடம்பனூர் என்னும் பெயரில் இருப்பதாகும். இங்குள்ள கோயில்களில் முருகன் சிவவழிபாடு செய்து கொண்டிருப்பதைக் குறிக்கும் வகையில் அவர் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கீழ்வேளூர் முருகன் வழிபட்ட பஞ்சலிங்கத் தலமாக விளங்கி வருகின்றது.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரு கோயில்இதுவாகும். இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” என முன்னர் அழைக்கப்பட்டது.
150 அடி உயரம் கொண்ட கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது.முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
"பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
ராஜகோபுரம்தொகு
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
திருச்செந்தூரில் மாத பூஜையும் -பலன்களும்
தை
தை மாதம் அகில் தூபமிட்டு வழிபட்டால் சிவ தரிசனம்
காணலாம்.அனைத்து சங்கராந்திகளிலும் முகாரம்ப தீர்த்தத்திலும் ,கந்த புஷ்கரணி தீர்த்தத்திலும் நீராடி விட்டு சிறு பயறு கலந்த செந்நெல் அரிசிச் சோற்றை முருகனுக்குப் படைத்து வழிபட்டால் நூறு யாகம் செய்த பயனடையலாம்.
மாசி மாதம்
வதனாரம்பத்தீர்த்தத்தில் நீராடி செந்திலாண்டவரை வழிபட்டால் இப்பிறவி கடைசியாகும்.
பங்குனி
பங்குனி மாதம் உத்திர நட்சத்திரம் அமரபட்சத்து நவமி திதிகளில் கடலில் நீராடி கந்தனை வழிபட்டால் எல்லா பாவங்களும் அகலும்.
சித்திரை
சித்திரை மாதம் முகாரம்பத் தீர்த்தத்தில் குளித்து
பூரணச் சந்திரன் காலத்திலும்,உத்திர, தட்சிணாயக் காலங்களிலும் வேலவனைத் தொழுது நின்றால் முருகனருளை உடனே பெறலாம்.
வைகாசி
வைகாசி மாதம் சுக்கிலபட்சம் மூன்றாம் திதியிலும் விசாக நட்சத்திரத்தின் போதும் வள்ளிமணாளனை திருச்செந்தூரில் வழிபட்டால் துக்கங்கள் அகலும்,நோயற்ற
வாழ்வு பெறலாம்.
ஆனி
ஆனி மாதத்தில் பூரணச் சந்திரன் காலத்திலும் கிருத்திகை நாளிலும் வழிபட்டால் தொலையாத பாவங்கள் தொலைந்து போகும்.
ஆடி
எல்லா வெள்ளிக் கிழமைகளிலும் பசுந்தயிர் கலந்த சோற்றை ஜெயந்தினாதருக்குப் படைத்து வழிபட்டால்
முருகனுடைய பாதங்களை அடையலாம்.
ஆவணி
ஆவணி மாதம் ஒவ்வொரு நாளும் வழிபடுவோர் நூறு
யாகம் செய்த நற்பயனைப் பெறுவர்.
புரட்டாசி
புரட்டாசி மாதம் திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்க்குத் திதி கொடுத்தால் முன்னோர்கள் தேவருலகை அடைவார்கள்.
ஐப்பசி
இம்மாதம் உத்திர தட்சிணாயக் காலங்களில் கந்தபுஷ்கரணியில் நீராடி வழிபட்டால் மறு பிறவி கிடையாது.
கார்த்திகை
கார்த்திகை மாதம் முப்பது நாளும் பசு நெய்யில்தீபமிட்டால் முருகனின் பாதத்தை அடைவர்.கார்த்திகைநட்சத்திரத்தன்று நெல்லி இலையால் முருகனை அர்ச்சனை செய்து வழிபட்டால் வேண்டியதைப் பெறலாம்.
மார்கழி
மார்கழி மாதம் அமர பட்சத்து சப்தமி,நவமி திதிகளில்அர்ச்சனை செய்து வழிபட்டால் முருகனின் மாமாவான மாயவனின் அருளைப் பெறலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...