Saturday, February 22, 2020

பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு வாகனங்களில் செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதி.

22/02/2020, 
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடத்திய பேரணியால் திருச்சியில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகனங்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் பேரணி நேற்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் இருந்து கிராப்பட்டி வரை நடைபெற்றது.
இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான தொண் டர்கள் வந்திருந்தனர். அவர்களின் வாகனங்கள் முறைப்படுத்தப்படாமல் ஆங்காங்கே சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால் மதுரை- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொன்மலை ஜி கார்னரில் இருந்து பஞ்சப்பூர் வரையிலும், மன்னார்புரத்திலிருந்து ரயில்வே ஜங்ஷன் வரையிலும் அரசு பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
அதேபோல, எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் இருந்து கிராப்பட்டி வழியாகச் செல்லும் பழைய மதுரை சாலையில் இப்பேரணி நடைபெற்றதால், அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதனால் நேற்று மதியம் 2 மணியிலிருந்து பேரணி முடிந்து, கட்சியினர் கலைந்து சென்ற இரவு 8 மணி வரை அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக, பள்ளி, கல்லூரி சென்று வந்த மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் பரிதவித்தனர்.
பொதுமக்கள் அதிகளவில் வசிக்கக்கூடிய பகுதியில் பேரணி நடத்த அனுமதி கொடுத்த காவல்துறையினர், அப்பகுதியினர் பாதிக்கப்படாத வகையில் போதிய மாற்று ஏற்பாடுகளைச் செய்யாதது குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோர்ட் எம்ஜிஆர் சிலையிலிருந்து உழவர் சந்தை மைதானம் வரை பேரணி நடத்த அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு முஸ்லிம்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், வேறு வழியின்றி இந்த சாலையை தேர்வு செய்ய நேர்ந்தது. பஞ்சப்பூர் பிரிவு சாலை அருகே பார்க்கிங் வசதி செய்து கொடுத்திருந்தோம். ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதை பயன்படுத்தாமல் சாலைகளிலேயே நிறுத்தியதால் தேசிய நெடுஞ்சாலையிலும் நெரிசல் ஏற்பட்டுவிட்டது’’ என்றனர்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...