Friday, February 21, 2020

நிம்மதியின்றி தவிக்கும் செந்தில்பாலாஜி... குடைந்தெடுக்கும் மத்திய குற்றப்பிரிவு.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்பாலாஜி மீதான பணமோசடி வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் குடைந்து எடுத்து வருகிறது.
இதனால் அவரால் கட்சிப்பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த 2011-2016 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பண மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
81 பேரிடம் ரூ.2.80 கோடி வரை பணம் வசூலித்து வேலை பெற்றுத்தரவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தர்வர்கள் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு, 12 பேரை கைது செய்தது.
மேலும், கரூரில் உள்ள செந்தில்பாலாஜி இல்லம் மற்றும் அலுவலகம், அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், சென்னையில் உள்ள செந்தில்பாலாஜியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
அப்போது ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். இதனிடையே தாம் கைது செய்யப்படலாம் என கருதிய செந்தில்பாலாஜி உயர்நீதிமன்றத்தை நாடி முன் ஜாமின் பெற்றார்.
ஆனால் மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்றும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட 14-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி செந்தில்பாலாஜி விளக்கம் அளித்தார்.
மீண்டும் கடந்த திங்கள்கிழமை ஆஜராகி பல மணி நேரம் அமர்ந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பற்றி விளக்கம் கொடுத்தார்
இதனால் சென்னையில் இருந்தும் கூட செந்தில்பாலாஜியால் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒருநாள் கூட கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதை தனக்கு ஏற்பட்ட பெரிய அவமானமாக கருதுகிறார் செந்தில்பாலாஜி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மத்திய குற்றப்பிரிவு கிடுக்கிப்பிடி போடுவதால், கட்சிப் பணிகளில் கூட செந்தில்பாலாஜியால் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை எனக் கூறுகின்றனர் கரூர் மாவட்ட திமுக நிர்வாகிகள்.
கைது நடவடிக்கையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் செந்தில்பாலாஜி, கரூர் மாவட்டத்தில் எப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...