மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலரும், திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட்டவருமான முருகானந்தம், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிஉள்ளார்.

திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:சட்டசபை தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு இருக்க வேண்டும் அல்லது வெற்றி பெறும் கட்சியோடு கூட்டணி அமைத்திருக்க வேண்டும்.அப்போது தான் கட்சியை வளர்க்க முடியும். குறிக்கோள் இல்லாமல் கட்சி நடத்தும் தலைவரை முதல் முறையாக பார்க்கிறோம்.தேர்தல் தோல்விக்கு தார்மீக பொறுப்பை ஏற்காமல், நிர்வாகிகள் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறியதை, என் சுயமரியாதைக்கு ஏற்பட்ட இழுக்காகவே நினைக்கிறேன்.
இ.பி.எஸ்., ஸ்டாலின் ஆகியோர் கொண்ட முதல்வர் வேட்பாளர் வரிசையில், மூன்றாவதாக மக்கள் எதிர்நோக்கி இருந்த நிலையில், எதற்காக, கூட்டணி கட்சிகளுக்கு, 100 தொகுதிக்கு மேல் ஒதுக்கீடு செய்தார் என்று இன்று வரை தெரியவில்லை.எந்த சூழ்நிலையிலும், கட்சி வளர்வதற்கான வாய்ப்பு இல்லை என்பதை விட, வாய்ப்புகளை தடுக்கும் சூழல் இருப்பதால், இது சரியான தளமாக இருக்காது.அடுத்த தளத்துக்கு செல்ல வாய்ப்பு இருந்தால், செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு, அந்த கட்சியில் இருந்து முழுதுமாக விலகுகிறேன்.புகழுக்காகவோ, பணத்துக்காகவோ, கமல் அரசியலுக்கு வந்ததாக எண்ணத் தோன்றுகிறது.
வெற்றி வாய்ப்போ, எழுச்சி உள்ள இயக்கத்துக்கோ வேலை செய்யும் பிரசாந்த் கிஷோர் வந்தபோது, பயன்படுத்தாமல் விட்டிருக்க தேவையில்லை.இது, தி.மு.க.,வின் வெற்றிக்கு மறைமுகமாக உதவியதாகவே தெரிகிறது. ம.நீ.ம.,வை பலமான கூட்டணியோடு இணைந்திருந்தால், 16க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ., க்களை மக்கள், சட்டசபைக்கு அனுப்பி இருப்பர்.இதில், இரண்டையும் செய்யவில்லை. வேறு இயக்கத்தில் சேர்ந்து, மீண்டும் திருவெறும்பூர் தொகுதியிலோ, ஆலந்துார் தொகுதியிலோ போட்டியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment