Sunday, January 23, 2022

ஜப்பானில் சவால் விட்டு ஜெயித்த எம்.ஜி.ஆர்.!

 ஸ்ரீதர் இயக்கத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆர். ‘மீனவ நண்பன்’ படத்தில் நடித்துக்கொண்டிருந்த நேரம். அந்த சமயம் கவிஞர் முத்துலிங்கம் சென்னையை விட்டு விலகி கொஞ்ச காலம் வெளியூரில் இருந்து விட்டு வீடு திரும்பி இருந்தார். அவர், எம்.ஜி.ஆரை சந்தித்து பல மாதங்கள் இருக்கும்.

விசாரித்தார்.
சத்யா ஸ்டூடியோவில் ‘மீனவ நண்பன்’ படப்பிடிப்பில் இருப்பதாகச் சொன்னார்கள். சத்யா ஸ்டூடியோ கிளம்பிப் போனார் முத்துலிங்கம். உணவு இடைவேளையில் எம்.ஜி.ஆரைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.
வழக்கமான சம்பிரதாய பேச்சுகளுக்கு பிறகு, “இந்தப் படத்தில் என்ன பாட்டு எழுதி இருக்கீங்க?” எனக் கேட்கிறார் எம்.ஜி.ஆர்.
தனது படத்தில் ஈ, கொசு தலைகாட்டுவதாக இருந்தால் கூட அதனை எம்.ஜி.ஆர். தெரிந்து வைத்திருப்பார்.
மீனவ நண்பனில் முத்துலிங்கம் பாடல் எழுதவில்லை என்பது அவருக்கு தெரியும். இருந்தாலும், தெரியாத மாதிரி காட்டிக்கொண்டார்.
“அண்ணே! ஒரு பாடலும் எழுதல..” – பவ்யமாக பதில் சொல்கிறார் முத்துலிங்கம்.
வியப்போடு அவரை பார்க்கிறார் எம்.ஜி.ஆர்.
“ஏன்?”
“வெளியூர் போயிட்டேன்..”
புருவம் உயர்த்தி சில விநாடிகள் யோசிக்கிறார். படத்தின் புரொடக்ஷன் மானேஜரை அழைத்துப் பேசுகிறார்.
“இந்தப் படத்துக்கான அனைத்து பாடல்களும் பதிவாகி விட்டது. எல்லா பாடல்களின் ஷுட்டிங்கும் முடிந்து விட்டதய்யா” என்கிறார் மானேஜர்.
“இயக்குநரை வரச்சொல்லுங்க..” என எம்.ஜி.ஆர். சொல்ல – ஸ்ரீதர் ஆஜர்.
‘’கவிஞர் முத்துலிங்கம் சென்னையில் கொஞ்ச நாள் இல்ல. இப்போதான் வந்திருக்கார்.. அவருக்கு ஒரு பாடல் கொடுங்க..” – என்கிறார் பொன்மனச்செம்மல்.
“எல்லா பாடல்களையும் முடிச்சிட்டோம். புதுசா பாட்டு கொடுக்கலாம்ணா பாட்டுக்கு சிச்சுவேஷன் இல்லையே..” – என்றார் ஸ்ரீதர்.
தாடையில் கை வைத்து யோசிக்கிறார் எம்.ஜி.ஆர்.
“சிச்சுவேஷன் எதுக்கு? கனவுப் பாடல் வைக்கலாமே! உங்களோட ‘உரிமைக்குரல்’ படத்தில் ”விழியே.. கதை எழுது”ன்னு ஒரு பாடல் வைச்சீங்களே.. அதே மாதிரி இதிலேயும் ஒரு கனவுப் பாடல். அதை முத்துலிங்கம் எழுதுவார்’’ தீர்ப்பு வாசித்தார் தலைவர்.
அப்பீல் ஏது?
எம்.ஜி.ஆருக்காக ‘மீனவ நண்பன்’ படத்தில் முத்துலிங்கம் எழுதிய “தங்கத்தில் முகம் எடுத்து, சந்தனத்தில் உடல் எடுத்து’’ பாடல் உருவான விதம் இப்படித்தான்.
எம்.ஜி.ஆர். சவால்
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ‘எக்ஸ்போ- 70’ உலக பொருட்காட்சியில் எடுக்கப்பட்டது.
சர்வதேச நாடுகளில் வாழும் தமிழர்களை எல்லாம் இந்தப் பொருட்காட்சியில் எம்.ஜி.ஆர். சந்தித்தார். எக்ஸ்போவை காண தமிழகத்தில் இருந்தும் விஐபிக்கள் சென்றிருந்தார்கள்.
அவர்களில் ஒருவர் கல்கண்டு ஆசிரியர் தமிழ்வாணன. தனது பத்திரிகையில் எம்.ஜி.ஆரை தொடர்ந்து விமர்சித்து வந்தவர்.
அப்போது, புரட்சித் தலைவர் தனிக்கட்சி தொடங்கக்கூடும் என்ற செய்தி பரவி இருந்த காலக்கட்டம். பொருட்காட்சி அரங்கில் எம்.ஜி.ஆரை சந்தித்த தமிழ்வாணன், தனிக்கட்சி தொடங்குவீர்களா? என நேரடியாக கேட்கவில்லை.
“தனித்து அரசியலில் இறங்கினால் ஜெயிப்பீர்களா?” எனக் கேட்கிறார்.
எம்.ஜி.ஆர் யோசிக்கவே இல்லை.
“நிச்சயம் ஜெயிப்பேன்’’ – உறுதியாக பதில் சொல்கிறார்.
அடுத்த இரண்டே ஆண்டில் அதனை செய்து முடித்தார் எம்.ஜி.ஆர். ஜப்பான் சபதத்தை திண்டுக்கல்லில் நிறைவேற்றிக் காட்டினார். அதனால் தான் எம்.ஜி.ஆரை ‘நினைத்ததை முடிப்பவன்’ என்றார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...