Saturday, February 10, 2018

விஜயா ஏகாதசி.....!!!



இந்த விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் தடைகள் நீங்கி வெற்றி கிட்டுகிறது. மேலும் மகிமை வாய்ந்த இந்த விரதத்தின் மகாத்மியத்தை படிப்பதாலோ, கேட்பதாலோ கூட அனைத்து பாவங்களும் அழிந்து விடுகிறது.
ஒருசமயம் தேவரிஷி நாரதர் தனது தந்தையிடம், இந்த விஜயா ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்ட போது, அவர் கூறியதாவது :
மகனே! விஜயா ஏகாதசி விரதத்தின் புண்ணியத்தால் முற்பிறவியின் பாவங்களும், இப்பிறவியின் பாவங்களும் அழிவதோடு, அவர்களுக்கு அனைத்திலும் வெற்றியை அளிக்க வல்லது. எனவே இதன் மகிமையை மிக கவனமாகக் கேள், என்றார்.
திரேதாயுகத்தில் புருஷோத்தமனான பிரபு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனது 14 வருட வனவாசத்தின் போது, பஞ்சவடியில் அன்னை சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடனும் வசித்து வந்தார். அப்போது இலங்கை வேந்தன் இராவணன் அன்னை சீதையை கடத்திச் சென்றான். அவர்கள் துக்கத்தில் அன்னையை தேடிக் கொண்டிருந்த போது, ஜடாயுவின் மூலம் சீதையைப் பற்றி அறிகின்றனர்.
அவர்கள் அன்னையை தேடும் பயணத்தின் போது, சுக்ரீவனுடன் நட்பு கொண்டு வாலியை வதம் செய்கிறார். அதன் பிறகு, அனுமன் கடல் கடந்து சென்று அன்னை சீதையிடம் விவரத்தைக் கூறி சமாதானம் செய்கிறார். மீண்டும் திரும்பி வந்து பிரபு ஸ்ரீராமரிடம் அன்னை அசோகவனத்தில் இருப்பதாகக் கூறுகிறார்.
அதனை அறிந்ததும் பிரபு ஸ்ரீராமர், அவரை மீட்பதற்காக சுக்ரீவனின் வானர சேனைகளுடன் இலங்கையை நோக்கிப் பயணித்தனர். அவர்களின் பயணம் தென்கோடி சமுத்திரத்தில் வந்து முடிந்தது. அதைக் கண்ட ஸ்ரீராமர் தனது தம்பியிடம், “ஹே லக்ஷ்மணா! முதலைகள், சுறா மீன்கள் போன்ற கொடிய நீர்வாழ் பிராணிகள் நிறைந்த ஆழமான வருண தேவனின் இந்த சமுத்திரத்தை எங்கனம் கடப்பது ?” என்று வியந்து நின்றார்.
அதை கேட்ட லக்ஷ்மணன், “அண்ணா, இங்கிருந்து அரை யோஜனை தூரத்தில் உள்ள குமரி தீபம் என்ற இடத்தில், அனேக பிரம்ம ஜனனங்கள் கண்ட வக்தாலப்ய ரிஷியின் ஆஸ்ரமம் உள்ளது. அவரை அணுகினால் இதற்கொரு உபாயம் கிடைக்கும்” என்று கூறியதை அடுத்து அனைவரும் அங்கே சென்று அவரைப் பணிந்து நின்றனர்.
பிரபு ஸ்ரீராமரை அடையாளம் கண்டு கொண்ட ரிஷி, “ராமா! நீ இங்கு வந்ததன் நோக்கம் என்ன ? “ என்று வினவினார். அதற்கு பிரபு ஸ்ரீராமர், தனது நிலையை எடுத்துக் கூறி, இந்த சமுத்திரத்தைக் கடக்கும் வழியினைக் கேட்கிறார்.
அதற்கு அந்த ரிஷி, “ராமா, இந்த சமுத்திரத்தினைக் கடக்க மட்டுமின்றி யுத்தத்திலும் வெற்றி பெற உனக்கு போதிய புண்ணியம் கிடைக்க மகத்துவம் மிக்கதொரு விரதத்தினைப் பற்றிக் கூறுகிறேன் கேள்” என்று கூறி விஜயா ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறினார்.
அதன்படியே, பிரபு ஸ்ரீராமரும் விஜயா ஏகாதசியினை முறையாகக் கடைபிடித்ததால், அவர்கள் சமுத்திரத்தைக் கடந்து சென்று ராவணனை வதைத்து, சீதையை மீட்டு வந்தார் என பிரம்மதேவர் நாரதருக்கு கூறினார்.
அதோடு, எவரொருவர் இந்த நாளில், இந்த விரதத்தின் மகாத்மியத்தை படிக்கிறாரோ / கேட்கிறாரோ / சொல்கிறாரோ அவருக்கு வாஜ்பேய யக்ஞம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்று கூறி முடித்தார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...