Tuesday, February 27, 2018

எது ஆன்மீகம்? எது பகுத்தறிவு.

பொதுவாக எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலோருக்கு “தான்” என்கின்ற எண்ணமே முன் வந்து நிற்கிறது. “எதுவாக இருந்தாலும் நாங்கள் உணர்ந்தால் தான் நம்புவோம், நாங்கள் கண் கூடாகப் பார்த்தால் தான் நம்புவோம். நாங்கள் பகுத்தறிவுவாதிகள். பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட எதையுமே ஏற்க இயலாது” – இதுதான் பலரது உரத்த குரலாக இருக்கிறது.
சரி. எது பகுத்தறிவு? மனிதன் மட்டுமே பகுத்தறிவு படைத்தவன் என்று எந்த உறுதிப்பாட்டில் கூற முடியும்? மிருகங்களுக்கு பகுத்தறிவு இல்லை என்று நிச்சயமாகக் கூற முடியுமா?
ஒளி வட்டம்
மனிதன் மட்டுமல்ல; எல்லா உயிரினங்களுக்குமே ‘பகுத்தறிவு’ உள்ளது என்பதுதான் உண்மை. அந்தந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்றவாறு அந்த அறிவு அமைந்துள்ளது. ஒரு நாயைப் பார்த்து கல்லை விட்டு எறிந்தால் அது ஏன் ஓடுகிறது? நாம் அடிக்கப் போகிறோம் என்று தெரிந்து கொள்வதினால் தானே! அந்த உணர்வுக்குப் பெயர் என்ன? ‘அனிச்சைச் செயல்’ என்றா சொல்ல முடியும்? அதே போல் ஒரு காகத்தை விரட்டினாலும், குருவியை அதட்டினாலும் அவை பறந்து சென்று விடுகின்றனவே ஏன்? இவன் நம்மை விரட்டுகிறான், தாக்க வருகிறான் என்று அவற்றால் உணர முடிவதால் தானே, அந்த உணர்விற்குப் பெயர் என்ன? – பகுத்தறிவாகத் தானே இருக்க முடியும்? அவை வாழும் உணர்வு உலகத்திற்கேற்ப அந்தப் பகுத்தறிவானது செயல்படுகிறது. அவ்வளவுதான். அதே சமயம் அவற்றின் பகுத்தறிவை மனிதனின் பகுத்தறிவோடு ஒப்பிடுவது மதியீனம். ஏனென்றால் மனிதன் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவன். அவன் அறிவை, அவனை விடக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட உயிரினங்களுடன் ஒப்பிட இயலாது. எப்படிக் குறைவான பரிணாம வளர்ச்சி கொண்ட குழந்தையின் அறிவுடன், நன்கு வளர்ந்த இளைஞனின் அறிவை ஒப்பிட முடியாதோ அப்படித்தான் இதுவும்.
உண்மையைப் பார்க்கப் போனால் ஐம்புலன்களுக்குத் தான் ஐந்தறிவு. புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவான ஆறாம் அறிவைக் கொண்டவன்தான் மனிதன். ஆனால் அவற்றை உணராமல், அதைப் பயன்படுத்தத் தெரியாமல் ஐந்தறிவு படைத்த மிருகங்களைப் போலவே அவன் நடந்து கொள்கிறான். வாழ்கிறான்.
அறிய அறிய விரிவது தான் அறிவு. அறிந்து கொண்ட உண்மைகளை முன் தரவாக வைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து, அதன் முடிவுகளைப் பற்றிப் பேசுவது தான் அறிவியல். அறியாத அல்லது அறிய இயலாத உண்மைகளைப் பற்றி அதனால் எப்போதும் முடிவு கூற இயலாது. அதனால் தான் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞ்ஞானத்திற்கும் அடிக்கடி சச்சரவு ஏற்படுகிறது. ஆனால் ஒரு உண்மையை நாம் முற்றிலும் மறந்து விடுகின்றோம். புத்தம் புதியதாக, இல்லாத ஒன்றை நாம் உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே வேறு ஒரு ரூபத்தில் இருந்ததை தற்போழுது வெளிக் கொணருகின்றோம், அவ்வளவுதான்.
“இயற்கைக்கு மாறாக எதுவுமே இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது நிச்சயம் பொய். யாராவது நிரூபித்தால் நான் ஒரு இலட்சம் ரூபாய் தருகின்றேன்.” அறைகூவல் விடுத்தார் திரு. ஆபிரகாம். டி. கோவூர். ஆனால் அவரது அறைகூவலை யாரும் ஏற்கவில்லை. அவரும் நிறைய ஆராய்ச்சிகள் செய்து, பேய், பிசாசுகள் ஆவிகள் இல்லை, எல்லாம் மனநோயின் பல்வேறு வடிவங்களே என்று சிலவற்றை நிரூபிக்கவும் செய்தார். கடவுள் என்ற ஒன்று இருக்கவே முடியாது. ஆத்மா என்ற ஒன்றெல்லாம் கிடையவே கிடையாது என்பது அவர் வாதம். ஆனால் நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்முடைய அளவிடும் திறன் என்ன? கடவுளைக் கண்ணால் காண முடியவில்லை. ‘ஆத்மா’ என்பதை உணர முடிவதில்லை. உடனே ‘எதுவுமே இல்லை’ என்று கூறிவிடுகின்றோம். நாம் பார்க்க முடியாததெல்லாம் உலகில் இல்லாத பொருள்களா என்ன?
சரி, ஒரு நாயின் கண்களுக்கு, ஒரு மாட்டின் கண்களுக்குத் தெரிவதை உங்களால் காண இயலுமா?( ஓ, மிருகங்களோடு ஒப்பிடக் கூடாது இல்லையா? மன்னியுங்கள். ஆனால் இங்கே வேறு வழியில்லை. அப்படிப் போய்த் தான் உண்மையை ஆராய வேண்டியுள்ளது.) சில வருடங்களுக்கு முன்னால் ஏற்பட்ட சுனாமியின் போது பல இடங்களில் பறவைகளும், ஆடு, மாடுகளும் அதை முன்னரே உணர்ந்து கொண்டு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று தம்மைக் காப்பாறிக் கொண்டன என்ற செய்தி நாளிதழ்களில் வெளியாகி இருந்தது. பறவைகளும், விலங்குகளும் அதை எப்படி முன்னரே உணர்ந்து கொண்டன? அந்த உணர்விற்குப் பெயர் என்ன? மிருகங்களை விட மிக உயர்ந்த “பகுத்தறிவு” படைத்த மனிதனால் ஏன் அதை முன்னரே உணர முடியவில்லை? உணர்ந்து ஏன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயலவில்லை?
சில சமயம் நாய் போன்றவைகள், காதினை விடைத்துக் கொண்டு அங்கும் இங்கும் குரைத்துக் கொண்டு ஓடுவதைப் பார்க்கலாம். அவை ஏன் அப்படிச் செய்கின்றன, நமக்குத் தெரியாது. ஆனால் நம் கண்ணுக்கு எதுவும் தெரிவதில்லை. அது போன்றே மாடுகளும் சில சமயம் மிரளும். ஆனால் நம்மால் அதன் சரியான காரணத்தினை உணர இயலாது. அது ஏன்? இவ்வாறு சில மிருகங்களின் கண்ணுக்குத் தெரிவது, அவை கேட்பது, அவை உணருவது, மற்றும் சில பறவைகளின் கண்களுக்குத் தெரிவது, நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கேட்பதில்லை. நம்மால் உணர முடிவதில்லை. அது ஏன்? ஆராய்ச்சி செய்திருக்கிறோமா, இல்லை.
நாம் உயர்ந்த பகுத்தறிவு கொண்டவர்களாக இருந்தால் மிருகங்களை விட உயர்ந்த அறிவு நிலையில் இருப்பவர்கள் என்பது உண்மையானால் நம்மால் சுனாமி போன்ற பேரழிவுகளில் இருந்து ஏன் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விட்டது? மிருகங்களை விட நாம் மட்டமா? அல்லது நமது அறிவுத்திறனில் ஏதாவது குறைபாடு உள்ளதா?
ஆம். அதுதான் உண்மை. சில விஷயங்களில் நாம் ஐந்தறிவு உயிரினங்களை விட மிக மிக மேம்பட்ட நிலையில் இருந்தாலும், சில விஷயங்களில் அவற்றை விட மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். அதற்கு காரணமும் உள்ளது. முக்கிய காரணம் ஒருகாலத்தில் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டிருந்த நாம், காலச் சூழல் காரணமாக அதற்கு மாறான வாழ்க்கையை நடைமுறையில் வாழ்ந்து கொண்டிருப்பது தான்.
நம்முடைய கேட்கும் திறன் 20-20000 டெசிபல் தான். அதற்கு மேற்பட்ட ஒலியையோ, கீழான ஒலியையோ நம்மால் கேட்க இயலாது. [இப்போதுதான் EVP (Electronic Voice Phenomenon) முறையில் இது போன்ற ஒலிகளைப் பதிவு செய்யும் முறையில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று வருகிறார்கள்]. நுண்ணோக்கி இல்லாமல் சிலவற்றைப் பார்க்க முடியவில்லை. உடல் உறுப்புக்களைப் பார்க்க எக்ஸ்ரேயை, ஸ்கேனைப் பயன்படுத்துகின்றோம். இன்னும் தொலைநோக்கி, லேசர் என்று பல வகைகளைப் பயன்படுத்தித் தான் சிலவற்றைப் பார்த்து இன்னதென்று அடையாளம் கண்டுபிடிக்கின்றோம்.
இப்படி பார்வைத்திறனிலே குறைபாடு, கேட்கும் திறனிலே குறைபாடு என்று பலவற்றை நமக்குள் வைத்துக் கொண்டு, அமானுஷ்ய விஷயங்களை, கடவுள் போன்றவற்றை நாம் அளக்க முயன்றால் எப்படிச் சரியான விடை கிடைக்கும்? தவறான அளவு கோலால் அளக்கப்படுவது எதுவானாலும் தவறான முடிவினைத்தானே தரும்?.
ஒருகாலத்தில், இயற்கையோடு இயைந்த வாழ்வு மேற்கொண்டிருந்த காலத்தில் நமக்கு இத்தகைய திறமைகள் இயற்கையாகவே இருந்து, தற்போது பரிணாம வளர்ச்சியின் காரணமாக அவை நம்மை விட்டு நீங்கியிருந்தால்..?? இயற்கைக்கு மாறாக வாழ்ந்து நாம் அவற்றை இழந்திருந்தால்…. நம்மால் எதையும் சரிவர உணர முடியாது அல்லவா?
பரிணாம வளர்ச்சியின் காரணமாக, படிப்படியாக வால், உடலெங்கும் முடி, மிக நீண்ட கூரிய நகங்கள் போன்றவற்றை இழந்த நாம் இது போன்ற பல் வகை ஆற்றல்களையும் இழந்திருந்தால் நம்மால் எந்த விதக் கருவி, உபகரணம் ஏதும் இல்லாமல் எதையுமே தெளிவாகக் காண முடியாது அல்லவா?
ஒரு வேளை கடவுள், ஆவிகள், தேவதைகள் போன்றவர்கள் காலம், இடம், பொருள் என்று எல்லாவற்றையும் கடந்த, வேறு பரிமாணத்தில் இருக்கின்றவர்களாக இருந்தால்! (அது தான் உண்மையும் கூட). நம் தவறான அளவுகோலால் எப்படிச் சரியான மதிப்பீடு பெற முடியும்? ஆகவே இதற்குத் தேவை நுண்ணிய ஆராய்ச்சி மட்டுமே. அதை விடுத்து அரை குறைக் கருவிகளை வைத்துக் கொண்டு அளப்பதால் எந்தப் பயனும் ஏற்படாது.
உடலின் ஏழு சக்கரங்கள்
நிலவில் நீர் இருப்பதை இன்று தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால் நமது இந்திய வானியல் சாத்திரத்தில் இதையெல்லாம் முன்பே சொல்ல்யிருக்கிறார்கள்.
ஆகவே, சாதாரண மானுடர்களால் ஒரு செயல் முடியாது என்றால் அது நிகழவே நிகழ முடியாது என்பது பொருளல்ல. நம் மூளையின் ஆற்றலை நாம் வெறும் 8% சதவிகிதம் கூட சரிவரப் பயன்படுத்துவதில்லை. மீதிப் பகுதியையும் நாம் உணர்ந்து, அறிந்து, தெளிந்து பயன்படுத்த ஆரம்பித்தால் நாம் கடவுளை அடையலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...