வேலூரில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய ஒரு லட்சம் பேப்பர் கவர்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை எதற்காக வாங்கப்பட்டன என்று மோப்பம் பிடித்தபோதுதான், மாஜி அமைச்சர் துரைமுருகனின் மகன் போட்டியிடும் வேலுார் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக கவர்கள் வாங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.டி.,ரெய்டில் இதுவரை சுமார் ரூ.36 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வேலூர் தொகுதியில் திமுக சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார் . இத்தொகுதியில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக வருமான வரித்துறையினர் துரைமுருகன் வீட்டில் ரெய்டு நடத்தினர். இதில் பணம் ஏதும் சிக்கியதா என்ற விவரம் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் பூஞ்சோலை சீனிவாசன் என்ற திமுக கட்சிக்காரரின் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இவர் துரைமுருகனின் பள்ளி தோழர் என்று கூறப்படுகிறது. துரைமுருகன் நண்பர் வீட்டில் ரெய்டு நடப்பதாக தெரிகிறது. இவர் திமுகவின் பகுதி செயலரும் ஆவார்.

இதற்கிடையே வேலூர் சிமென்ட் குடவுனில் கவர் போட்டு வைத்த பணம் சிக்கியது. வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு கவரில் பணம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கவர்கள் பல மூடைகளில் இருந்ததாகவும் தெரிகிறது. ஆனால் வருமான வரித்துறை சார்பில் யாரும் உறுதிப்படுத்தவில்லை. பணம் எண்ணும் பணி நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
கவர்கள் மூலம் கண்டுபிடிப்பு
நேற்று வேலுாரில் ஒரு கவர் தயாரிக்கும் நிறுவனத்தில் சிலர் ஒரு லட்சம் கவர்கள் வாங்கி உள்ளனர். இவற்றை கொண்டு செல்லும்போது அங்கிருந்த பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். சொந்த பயன்பாட்டுக்காக கவர்கள் வாங்கிச் செல்வதாக அவர்கள் கூறியதும் அதிகாரிகள் வாகனத்தை விடுவித்தனர். பின் அந்த வாகனம் துரைமுருகன் வீட்டுக்கு சென்றுள்ளது. அங்கிருந்து வாகனம் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டுக்கு சென்றுள்ளது.இந்த தகவல் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தான் ஐ.டி., ரெய்டில் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது. சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சிக்கியதாக தகவல் தெரிவிக்கிறது.

ஐகோர்ட்டில் முறையீடு
இதற்கிடையே தனது தேர்தல் பிரசாரத்தை தடுப்பதற்காக ரெய்டு நடப்பதாக சென்னை ஐகோர்ட்டில் துரைமுருகனின் மகன் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.24 கோடி பறிமுதல் ?:
இந்த பணம் போக சீனிவாசனின் அக்கா கணவர் தாமோதரன் என்பவர் வீட்டில் இருந்து ரூ.19 கோடியை ஐ.டி., அதிகாரிகள் அள்ளி உள்ளதாக இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. துரைமுருகனின் உதவியாளர் அப்சல் அலி என்பவரது வீட்டில் இருந்து ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இந்த பணம் அனைத்தும் கவர்களில் போட்டு வாக்காளர்களுக்கு தருவதற்காக வைக்கப்பட்டிருந்தன. தொடர்ந்து அப்சல் அலி தொடர்பான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதற்கிடையே, ஐ.டி., சோதனை பற்றி கேள்விப்பட்ட திமுகவினர், காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீடு முன்பு கூடி உள்ளனர்.
No comments:
Post a Comment