கிராமங்களில், ஒரு சொலவடை உண்டு... 'வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதை' போல் தான், 'அண்ணன்' அழகிரியால் கடந்த சில தேர்தல்களில், தென் மாவட்டங்களில், தி.மு.க., சறுக்கிய கதை, உடன்பிறப்புகளுக்கு தெரியும்.

கருணாநிதி உயிருடன் இருந்த காலத்திலேயே, தேர்தலில், கூட்டணி முடிவு, தொகுதி பங்கீடு போன்ற சம்பிரதாயங்கள் முடிந்த பின், சில வார்த்தைகளில் அழகிரி கொடுக்கும், 'மைக்ரோ' பேட்டி, மெகா சப்தத்துடன் வெடித்து சிதறி, கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரை பதற வைத்து விடும். கருணாநிதி மறைவிற்கு பின், தற்போது அண்ணனை கேட்கவா வேண்டும்!
கட்சிக் கதவு திறக்கும் என எதிர்பார்த்த அழகிரிக்கு, ஏமாற்றம் மிஞ்சியதால், தன் ஆதரவாளர்களை, சென்னையில் கூட்டி, அமைதி ஊர்வலம் நடத்தி, மெகா, 'கெத்து' காட்டினார். பின் லோக்சபா தேர்தல் வரும்போது, அழைப்பு வரும் என, காத்திருந்த அழகிரிக்கு, அதுவும், 'நெகட்டிவ்' ஆக அமைந்தது. அ.தி.மு.க.,- பா.ம.க.,வுடன் கூட்டணி ஏற்பட்ட பின், 'கடந்த தேர்தலில், தே.மு.தி.க.,வை கைவிட்டு, தி.மு.க., எப்படி தோல்வியுற்றதோ, அதுபோல் இந்த தேர்தலில், பா.ம.க., - தே.மு.தி.க., என, இரண்டையும் கைவிட்டு, மீண்டும் தோல்வியை தழுவும்' என, அண்ணன் தரப்பு ஆரூடம் சொல்லி, 'கமென்ட்' அடித்தது.
இந்நிலையில், வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், பல தொகுதிகளை, கூட்டணிக்கு தாரை வார்த்தது, ஸ்டாலினுக்கு அண்ணன் மீதிருந்த அச்சம் தான் என, கட்சியினரே விமர்சனம் செய்த நிலையில், அதற்கும் ஸ்டாலின், இதுவரை பதில் சொல்ல வில்லை. இந்நிலையில் தான் மீண்டும், 'குண்டு மழை'யை பொழிய ஆரம்பித்துள்ளார் அண்ணன்.

மதுரையில் அவரது ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், 'பினாமி மாவட்ட செயலர்களாக இருந்தால், கட்சி எப்படி ஜெயிக்கும்?' என, கொதித்து விட்டார். மேலும், 'ஒரு மாவட்ட செயலருக்கு, 'பாஸ்' ஆக, மற்றொரு மாவட்ட செயலர் உள்ளார். சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் போல் தான், இப்பகுதி மா.செ.,க்கள் உள்ளனர். 'பலர் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சி, தி.மு.க., இந்த நிலை மாற வேண்டும் என, பொறுமையாக உள்ளேன்' என, பொங்கி எழுந்து விட்டார். அண்ணனின் ஆக்ரோஷ பேச்சை, சில முன்னணி, தி.மு.க., நிர்வாகிகளும் ரசித்துள்ளனர் என்பது, ஸ்டாலின் முகாமை சூடாக்கியுள்ளது.
ஏற்கனவே, அ.தி.மு.க.,வின் ராட்சத கூட்டணியை எதிர்கொண்டு திணறி வரும், தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள், 'அவரும் ஆரம்பிச்சுட்டாருய்யா... விபரமா தான் நம்மட்ட தொகுதியை தள்ளி விட்டுருக்காங்க' என, புலம்ப ஆரம்பித்து இருக்கின்றனர்.
No comments:
Post a Comment