கருத்து கணிப்புகள் எதிராக உள்ளதால், 'இடைத்தேர்தல் நடக்கவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கு உடனடியாக செல்லுங்கள்' என, அ.தி.மு.க., மாவட்டச் செயலர்களுக்கு, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு இன்னும், ஏழு நாட்களே உள்ள நிலையில், பல கருத்து கணிப்புகளின் முடிவுகள், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிராகவே உள்ளன. மேலும், உளவுத்துறை அதிகாரிகளும், 'இடைத்தேர்தல் நடக்கவுள்ள, 18 சட்டசபை தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., தலைமைக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள, மாவட்டச் செயலர்களை, இடைத்தேர்தல் நடக்கும் சட்டசபை தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படி, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: கூட்டணியில், பா.ம.க., - தே.மு.தி.க., - பா.ஜ., இடம் பெற்றுள்ளதால், ஓட்டு சதவீத கணக்குப்படி, 30க்கும் மேற்பட்ட லோக்சபா தொகுதிகள், 10 சட்டசபை தொகுதிகளில், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்தோம். ஆனால், கள நிலவரமும், கருத்துக் கணிப்புகளும் அதற்கு மாறாக உள்ளன. தினகரன் கட்சி பிரிக்கும் ஓட்டுகளால், அ.தி.மு.க.,வின் வெற்றி பாதிக்கப்படும் என தெரிகிறது.
இதனால், லோக்சபா தேர்தலை, மற்ற நிர்வாகிகள் பார்த்து கொள்ள செய்துவிட்டு, இடைத்தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, மாவட்டச் செயலர்களை, கட்சித் தலைமை முடுக்கி விட்டுள்ளது. கூட்டணி கட்சி நிர்வாகிகளை அனுசரித்து, பலமாக கவனிக்கவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்தியில், பா.ஜ., தான் மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என்ற தகவலால், ஆட்சியை காப்பாற்றி கொள்ள, வாக்காளர்களுக்கு 'தாராளம்' காட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment