கடந்த சில ஆண்டுகளில் புதிது புதிதாக படக் கம்பெனிகள் தொடங்கப் படுவதைப் பார்த்திருப்பீர்கள். ரெட் ஜெயின்ட் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் பிக்சர்ஸ், சன் பிக்சர்ஸ். இந்தப் பட நிறுவனங்களின் உரிமையாளர்கள், கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த இளைஞர்கள்.
இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் பில்லக்கா பசங்க. இவர்களுக்கு ஏது இந்த அளவுக்கு பணம் என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்பதில்லை. அவர்களும் வெட்கமேயில்லாமல் திரைப்படம் எடுத்து வெளியிட்டு, பணமும் சம்பாதித்துக் கொண்டுள்ளார்கள்.
இந்த அத்தனை பட நிறுவனங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, இந்த பட நிறுவனங்கள் எல்லாம், கருணாநிதி குடும்பத்தாரால் நடத்தப் படுபவவை. கல்லூரியிலிருந்து இப்போதுதான் வெளி வந்த இளைஞர்களுக்கு படத் தயாரிப்பில் ஈடுபடும் அளவுக்கு பணம் எங்கிருந்து வந்தது என்றெல்லாம் கேட்கக் கூடாது. அது அப்படித்தான்.

அவர்களும் படம் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுவும் சின்னத் திரையில் முதன் முறையாக வெளியாகிக் கொண்டுதான் இருக்கிறது. நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இதற்கெல்லாம் முன்னோடி இருக்கிறது. அதுதான் அஞ்சுகம் பிக்சர்ஸ். கருணாநிதி எம்ஜிஆரின் அசுர வளர்ச்சியைப் பார்த்து பயந்தார். எம்ஜிஆருக்குப் போட்டியாக, தனது முதல் மனைவியின் மகன் மு.க.முத்துவை கதாநாயகனாக போட்டு, “பிள்ளையோ பிள்ளை” (பொறுத்தமான பெயர்தான்) என்ற திரைப்படத்தை தயாரிக்கிறார்.
இந்தப் படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெறாமல், பெட்டிக்குள் சுருண்டது. நல்ல நல்ல ஹீரோக்கள் நடித்த படங்களே தோல்வியைத் தழுவும் போது, கருணாதியின் பிள்ளையை ஹீரோவாகப் போட்டால், என்ன ஆகும் ? பிள்ளையோ பிள்ளையின் தொடர்ச்சியைத் தான் இன்று நாம் “வம்சம்” பார்த்தோம்.
பிள்ளையோ பிள்ளை படத்தில் ஒரு காட்சி
இந்தப் படத்துக்கான மொத்த தயாரிப்புச் செலவு 15 லட்சம். அஞ்சுகம் பிக்சர்ஸின் மொத்த முதலீடே 10 ஆயிரம் ரூபாய்தான். பிறகு எப்படி 15 லட்சம் செலவில் திரைப்படம் எடுக்க முடியும். அதுதான் திமுக. இதற்காக 1.25 லட்சம் வெளியிலிருந்து வாங்கிய கடன்.
மீதம் உள்ள 14.23 லட்சம், விநியோகஸ்தர்களிடமிருந்து வசூல் செய்யப் பட்ட அட்வான்ஸ். ரஜினியின் எந்திரன் படத்துக்குக் கூட, இப்படி போட்டி போட்டுக் கொண்டு அட்வான்ஸ் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே….
ஒரு புதிய நடிகர் நடிக்கும் படத்தை, அதுவும், எம்ஜிஆருக்கு போட்டியாக, எம்ஜிஆரை காப்பி அடிக்கும் ஒரு புதுமுக நடிகரின் படத்தை வாங்குவதற்காக 14.23 லட்சம் அட்வான்ஸ் கொடுப்பார்களா என்பது ‘மில்லியன் டாலர் கேள்வி’. இன்றைக்காவது திரைப்படத்துறையில் கார்ப்பரேட்டுகள் நுழைந்து, பல கோடி ரூபாய்களை முதலீடு செய்கிறார்கள்.
ஆனால் அன்றைக்கெல்லாம் வெகு சில திரைப்பட நிறுவனங்களே களத்தில் இருந்தன. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இருவரைத் தவிர்த்து வேறு எந்த நடிகரின் திரைப்படத்துக்கும் முன் பணம் தந்து படத்தை வாங்கும் வழக்கமெல்லாம் கிடையாது.
இந்த 14.23 லட்சத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை ராசி அன்ட் கோ, கிரெசென்ட் மூவீஸ், மற்றும் சேது பிலிம் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் வாங்குகின்றன.
இந்த மூன்று நிறுவனங்களிலும் பங்குதாரர் முகம்மது யாசின் என்கிற கட்டுமானக் கம்பெனி நடத்துபவர் என்பது யதேச்சையான நிகழ்வாக கருத முடியாது. அதிலும், சென்னையிலுள்ள அண்ணா மேம்பாலத்தை கட்டுவதற்கான கான்ட்ரக்ட், அவரிடம் தான் வழங்கப் பட்டுள்ளது என்பதும் யதேச்சையான நிகழ்வு அல்ல. சரி எப்படித்தான் இது நடந்தது ?
இதை சம்பந்தப்பட்ட சாட்சி ஏ.எம்.அஹமது யாசீன் வாயாலேயே கேட்போமா ?
“சாதாரண சமயமாக இருந்தால் ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்டத்திற்கான விநியோக உரிமைகளை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நான் முன்வந்திருக்கவே மாட்டேன். இருப்பினும், அப்போது, சென்னையிலுள்ள ஈஸ்ட் கோஸ்ட் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்தின் கூட்டுப் பங்குதாரராக இருந்தேன்.
இந்த நிறுவனம் தமிழ்நாடு அரசிற்காக அண்ணா மேம்பாலம் கட்டும் முக்கிய ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்தது. வேறு சில ஒப்பந்தங்களை நிறைவேற்ற முயன்று கொண்டிருந்தது. குறிப்பிட்ட சில வரையறுக்கப் பட்ட சலுகைகளுக்காக சென்னைக்கு தெற்கிலுள்ள பகுதிகளுக்கு இத்திரைப்பட விநியோகஸ்த உரிமையை வாங்கிக் கொள்ளுமாறு நான கேட்கப் பட்டேன்.
திரு.கருணாநிதியின் மகன் திரு.மு.க.முத்து தனது திரைப்பட வாழ்வில் முதன் முறையாக கதாநாயகனாக நடித்துள்ளதாலும், திரு.கருணாநிதியின் குடும்பத்தினரால் ‘பிள்ளையோ பிள்ளை’ தயாரிக்கப் பட்டுள்ளதாலும், நான் அதை மறுக்கவில்லை. விதிக்கப் பட்ட அந்த உயர்ந்த விலை வீதத்தில் அப்படத்திற்கான விநியோக உரிமையை வாங்கிக் கொண்டு திரு.மு.கருணாநிதியை திருப்திப் படுத்துவதைத் தவிர வேறு மாற்று வழியேதும் எனக்கு இல்லை.”
பிள்ளையோ பிள்ளைக்கும் கருணாநிதிதான் கதை வசனம். நீங்கள் இதையும், கருணாநிதி கதை வசனத்தில் வெளி வந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதாக அறிவிக்கப் பட்டுள்ள, ‘இளைஞன்’ படத்தைத் தயாரித்த, லாட்டரி அதிபர் மார்ட்டினின் செயலையும் முடிச்சுப் போடக் கூடாது.
பிள்ளையோ பிள்ளை படமும், டப்பாவுக்குள் சுருண்டு, படு நஷ்டத்திற்கு உள்ளானது. ஆனால், மேம்பாலம் கட்டுவதற்கு வழங்கப்பட்ட காண்ட்ராக்டுக்கு ஈடாகத்தான், லஞ்சத் தொகையாகத்தான் அந்தப் பணம் தரப்பட்டுள்ளது.
திமுக அரசு, பத்திரிக்கையாளர்களை மிரட்டுவதும், வேண்டாத செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்களை வழக்கு போட்டு மிரட்டுவதும், பிறகு சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் அரசிடம் பணிந்ததும், அந்த வழக்குகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும், நாம் பார்த்து பழகிப் போன ஒரு விஷயம்.
ஆனால், இது போன்ற நடவடிக்கைகளெல்லாம், திமுக அரசால், 1969லேயே துவங்கப் பட்டது என்பது ஆச்சர்யம் அளிக்கிறது.
“பிராட்வே டைம்ஸ்“ என்பது ஒரு ஆங்கில வார இதழ். பொதுவாழ்வில், தந்தையும் மகனும் தங்களுக்கென விதியை உருவாக்கிக் கொள்கிறார்கள், என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. வர்கீஸ் என்ற ஐசிஎஸ் அதிகாரி, தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
ஓய்வு பெற்ற பிறகு, அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் ஆணையராகவும் பணியாற்றி வந்தார். அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவில் இறக்குமதி செய்வதில், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகத் தான் பிராட்வே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்தச் செய்தியை அடுத்து ஐசிஎஸ் அதிகாரி வர்கீஸ் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில், கார் இறக்குமதி செய்வது தொடர்பாக சரியான நடைமுறைகள் பின்பற்றப் பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால், அந்தப் பத்திரிகை மீது, அரசு அவதூறு வழக்கு தொடர வேண்டும் என்றும் கடிதம் எழுதுகிறார்.
இந்தக் கடிதம் கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப் பட்டது. அந்தப் பத்திரிக்கையாளர் மீது வழக்கு தொடர அனுமதி அளிக்கப் படுகிறது. ‘அப்போது நானே ஒரு பத்திரிக்கையாளர்’ என்பது மறந்து மறந்து விட்டதா என்பது தெரியவில்லை.
வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம், பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கைக்கு சம்மன் அனுப்பியதும், பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. முதலமைச்சரின் செயலாளர், அந்தப் பத்திரிகையின் அதிபரை தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம், வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும் படி முறையீடு செய்யப் பட்டதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்று தகவல் தெரிவிக்கப் படுகிறது.
அந்த பத்திரிக்கையின் அதிபரும் ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல், “பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப் பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிக்கைக்கும் முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் (??????) இடையில் நெருங்கிய உறவு நிலவுவதால் வழக்கை வாபஸ் பெற்றக் கொள்கிறேன்” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப் படுகிறது. இக்கடிதத்தை படித்த கருணாநிதி, அக்கடிதத்தின் மீதே, “வழக்கு வாபஸ் பெறப்படலாம்” என்று உத்தரவிடுகிறார்.
ஆனால் பிராட்வே பத்திரிக்கை அதிபர் செரியன் வழங்கிய கடிதத்தில் மன்னிப்பு கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.
மேலும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்கு தொடருவதற்கு முன்பு விரிவாக நடந்த ஆலோசனை, சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை எதுவுமே, வாபஸ் பெறும் போது கவனிக்கப் படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்ட அதே வேகத்திலேயே, அந்நிறுவனம், கருப்புப் பட்டியலில் இருந்தும் எடுக்கப் பட்டிருந்தது.
இந்த வழக்கின் மூலமாக ஏற்பட்ட தொடர்புகளை பயன்படுத்தி, மற்றோரு காரியத்தைச் சாதித்துக் கொண்டதுதான் விசித்திரமான விஷயம். பிராட்வே டைம்ஸ் பத்திரிக்கையை அச்சிடுவது, அந்த பத்திரிக்கை நிறுவனத்துக்குச் சொந்தமான, தாம்சன் அன் கம்பெனி.
பிராட்வே டைம்ஸ் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்வதற்கு முன்பாகவே, தாம்சன் அன் கம்பேனி அரசுடன் எவ்விதமான கான்ட்ராக்டுகளிலும் ஈடுபடக் கூடாது என்று கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது. அந்தக் கம்பேனி அரசு பாடப்புத்தகங்களை தயாரிப்பதில், கவனக்குறைவாக இருந்த காரணத்தால் இந்நிறுவனம் கருப்புப் பட்டியலில் வைக்கப் பட்டிருந்தது. அந்த உத்தரவையும் இந்நிறுவனம் தந்திரமாக வாபஸ் பெற வைத்துள்ளது.
இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக, வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்பு காட்டினார் என்ற கேள்வி எழும். அங்கேதான் முரசொலி மாறன் வருகிறார்.
பிராட்வே டைம்ஸின் அதிபர், மேத்யூ செரியனும், முரசொலி மாறனும், நெருங்கிய நண்பர்கள். மாறன் இந்த வழக்கை வாபஸ் பெற்று, கருப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டி, தன்னிடம் வலியுறுத்தினார் என்பதை கருணாநிதியே தனது வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டார்.
இவ்வாறு மாறன், கருணாநிதிக்கு நெருக்கடி கொடுத்தது, வெறும் நட்பா என்றால் இல்லை. இந்த நட்பின் அடிப்படையில், மாறனுக்கு பல்வேறு உதவிகளை பிராட்வே டைம்ஸ் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய காரை வழங்கி உதவி செய்திருக்கிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம், ஒரு தனியார் நிறுவனம், அரசின் கான்ட்ராக்டை பெற்று, பாடநூல் தயாரிக்கும் போது, முறைகேடுகளில் ஈடுபட்டு, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது. அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்கு பரிந்துரை செய்து, அவ்வாறே அந்நிறுவனத்தை கரும்பட்டியலில் வைக்கிறார்.
அந்த அதிகாரியை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக, அந்த பத்திரிக்கை அவரைப் பற்றிய அவதூறான செய்திகளை வெளியிடுகிறது. அப்பத்திரிக்கை மீது வழக்கு தொடுக்க வேண்டும் என்று அதனால் பாதிக்கப் பட்ட அதிகாரி, அரசுக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப் படுகிறது.
வழக்கு தொடுக்கப் பட்ட பின், முதலமைச்சரின் மருமகன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு, ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் இருந்தும் நீக்க உதவுகிறார்.
கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி சர்க்காரியா “இவ்வழக்கில் வரக்கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல், குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத் தனமாக ஒதுக்கி விட்டு செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பை தர மறுக்கவும், திரு மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக திரு.கருணாநிதி திரு.செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார் என்பதேயாகும்”
சர்க்காரியா கமிஷன் முன்பாக, பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. எம்.ஜி.ஆரே 30க்கும் மேற்பட்ட புகார்களைக் கூறினார். ஆனால் நீதிபதி சர்க்காரியா அனைத்துப் புகார்களையும் விசாரித்து, எந்தப் புகார்களின் மீது தெள்ளத் தெளிவாக ஆதாரங்கள் இருந்தனவோ, அந்தப் புகார்களை மட்டுமே நிரூபிக்கப் பட்டதாக அறிக்கை அளித்தார். நிரூபிக்கப்பட்ட சில புகார்களை மட்டுமே நாம் மூன்று தொடர் கட்டுரைகளில் பார்த்தோம்.
1970ம் ஆண்டு முதல், கருணாநிதி அரசையும் ஆட்சி அதிகாரத்தையும் தன் குடும்பத்தின் நலனுக்காகவே பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சர்க்காரியா கமிஷன் அறிக்கையின் வாயிலாக வெளிப்படுகிறது. கருணாநிதியும், திமுகவும் எழுபதுகளிலேயே தமிழ்நாட்டை விட்டு ஒழிக்கப் பட்டிருந்தால், இந்தியாவுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியும், மேலும் பல ஆயிரக்கணக்கான கோடிகளும் சேமிக்கப்பட்டிருக்கும்.
அன்று இந்திரா காந்தி, கருணாநிதிக்கு அளித்த மடி பிச்சையால், இந்தியாவையே சூறையாடும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார். இந்திரா காந்தியும் சிபிஐ மூலமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வைத்து, கருணாநிதியை கைது செய்து சிறையில் அடைத்திருந்தால் இந்நேரம் கருணாநிதி தண்டிக்கப்பட்ட குற்றவாளியாகி யிருந்திருப்பார். மாறாக, இந்திரா காந்தி விசாரணை ஆணையம் அமைத்ததன் விளைவு, இன்று கருணாநிதி தமிழர்களே.. தமிழர்களே என்று கதையடித்துக் கொண்டிருக்கிறார்.
கருணாநிதி மற்றும் திமுகவின் ஊழல்கள் இப்படி ஆவணப்படுத்தப் பட்டிருந்தாலும் கூட, இன்றும் திமுகவினர், தெருவெங்கும் வந்து, உதயசூரியனுக்கு வாக்களியுங்கள், இந்தியாவை ஒளிமயமாக்குங்கள் என்று கூச்சமே இல்லாமல் பேசுகிறார்கள்.
இந்தக் கட்டுரைகள் இப்போது வாசகர்களுக்காக வழங்கப்படுவதன் ஒரே நோக்கம், புதிய வாக்காளர்களாவது, திமுவின் சூழ்ச்சி வலையில் பலியாகக் கூடாதே என்ற ஒரே நோக்கத்தில்தான்.
கருணாநிதி போன்றவர்களை ஒரு தீயசக்தி என்று ஜெயலலிதா கூறியது மிகைச் சொல் அல்ல.
No comments:
Post a Comment