நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.
தந்தைக்கு உபதேசம் செய்தவர், பிரணவ மந்திரத்தை பிரம்மனுக்கு உரைத்தவர், மலைக்கடவுள், தமிழ் கடவுள் என போற்றப்படுபவர் முருகப்பெருமான். இவரது அறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும், திருத்தலம் சென்னிமலையாகும். ஈரோடு மாவட்டத்தில் இருந்து, தாராபுரம் செல்லும் ரோட்டில், 30வது கி.மீ., தொலைவில், மலை மீதுள்ள சிரகிரி வேலவன் என செல்லமாக அழைக்கப்படும் சுப்பிரமணியசுவாமி கோவில் அமைந்துள்ளது.
பழமையான இக்கோவில், சிவாலயச் சோழர் என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகும். அம்மன்னன், ஒருபோது, நொய்யல் ஆற்றில் நீராடியபோது, இம்மலையை கண்டார். மலை மீது ஏறி, சிறிய கோவிலை தரிசித்தார். அப்போது, முருகப்பெருமானே, அர்ச்சகராக வந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளினார். சிவாலய சோழ மன்னர், திருக்கடவூரில் இருந்து தெய்வசிகாமணியார் எனும் திருமறையவரை, இவ்வூருக்கு அருகே, திருவிருந்தபுரத்தில் (பிடாரியூர்) குடியேற்றினார். இங்குள்ள சரவண முனிவர், சென்னிமலை வரலாற்றை அறிய விரும்பி, முருக கடவுளை வழிபட்ட சமயம், அசிரிரீ மூலம், முருகப்பெருமான் அருளியவாறு, காஞ்சிபுரம் சென்று, அங்கு வாழ்மறையவரிடம் செப்பேட்டில் இருந்து சிரகிரி வரலாற்றை, வேறு செப்பேட்டில் எழுதி கொண்டு வந்து, சென்னிமலையில் உள்ள செப்பேட்டில் உள்ளவாறு, மகிமைகள் அனைத்தையும் கண்டு மகிழ்ந்தார். முருகக்கடவுள், சரவணமுனிவருக்கு, ஆறுமுகத்துடனும், ஒரு முகத்துடனும் காட்சியருளினார். சரவண முனிவர் சமாதி, இம்மலை மேல் உள்ளது, குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment