Wednesday, June 28, 2023

அனைத்து ஊர்களிலும் இதே அவலம் தான்..

 ஒரு கிராமம் எப்படி செத்துப் போகிறது என்பதை நேரில் போய் பார்க்கும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.அமெரிக்காவில் வசிக்கும் என் நண்பர் அருளாளன் இங்கே வந்தபோது அவருடன் அவருடைய கிராமத்துக்குச் சென்றேன். சென்னைக்கருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமம் அது. கிருஷ்ண தேவராயர் காலத்தில் ஆந்திர தெனாலி அருகில் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இங்கேகொண்டு வந்து குடியமர்த்திய கிராமம் இது என்று சொல்லப் படுகிறது. பெயர் மாத்தூர். மாற்று ஊர் இப்படி திரிந்திருக்கலாம்.

மாத்தூர் தமிழக அரசியலோடும் இலக்கிய வரலாற்றோடும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்புடைய கிராமம். அருளாளனின் தந்தையார் மாத்தூர் கி.தசரதன், அறிஞர் அண்ணாவின் உற்ற நண்பர்களில் ஒருவர். பின்னாளில் பச்சையப்பன் கல்லூரி முதல்வராக இருந்தவர். டாக்டர் மு.வரதராசனின் மாணவர். ஆரம்ப காலங்களில் தசரதனின் காரில் அவர் ஓட்ட, அண்ணா பயணம் செய்வது வழக்கம். அண்ணா நடத்திய இதழ்களில் எல்லாம் தசரதன் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கோடை விடுமுறை சமயங்களில் டாக்டர் மு.வ தசரதனின் மாத்தூர் வீட்டுக்கு வந்து மாடியறையில் தங்கி நூல்கள் எழுதும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார்.
அந்த வீட்டையும் ஊரையும் போய் பார்த்தேன். ஊருக்குப் போகிற வழி நெடுக எங்கேயும் இரு பக்கமும் வயல்களோ பச்சைப் பசேலென்ற தோற்றமோ இல்லை. விவசாயம் இங்கே கைவிடப்பட்டுவிட்டது என்பது முதல் பார்வையிலேயே தெரிந்துவிடும்.
வல்லகோட்டை- ஒரகடத்துக்கு அருகில் இருக்கும் மாத்தூரில் நான் கண்ட ஒரே வளர்ச்சிப் பணி ஒவ்வொரு வீட்டு வாயிலிலும் தண்ணீர்க் குழாய் போடப்பட்டிருப்பது மட்டும்தான். ரியல் எஸ்டேட் முதலாளிகள் தயவில் உள்ளூர் கோவில் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி ஊரில் பல பகுதிகள் பிளாஸ்டிக் குப்பை மேடுகளாகவே இருந்தன.
மாத்தூருக்குப் பொருத்தமே இல்லாத விதத்தில் அதன் மயானத்தை ஒட்டி ( என்ன பொருத்தம் !)ஒரு பிரும்மாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு வளாகம் எழும்பியிருந்தது.
மாத்தூரில் விவசாயம் அடிபட்டதற்கு முக்கியமான காரணம் ஏரிகள் பறி போனதுதான். ஏரிகளும் ஏரிகளுக்கு நீர் வரத்து வரும் நீர் பிடிப்புப் பகுதிகளும் அரசாங்கத்தால் வெவ்வேறு தொழிற்சாலைகளுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டன.
அருகில் இருக்கும் ஒரகடம் தொழிற்பேட்டையில் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள். இப்போது மாத்தூர் போன்ற கிராமங்களில் விவசாயம் இல்லாமல் பழைய சொந்த வீடு மட்டும் வைத்துக் கொண்டு குடியிருப்போருக்கு வருவாய்க்கான ஒரு வழி, இந்த தொழிலாளர்களுக்கு வாடகை அறை தருவதுதான். நான் பார்த்த ஒரே ஒரு தெருவில் மட்டும் 200 வட இந்தியத் தொழிலாளர்கள் குடியிருப்பதாகச் சொன்னார்கள். மாத்தூரில் தரிசாகக் கிடக்கும் விளநிலங்கள் மேலும் புதிய அடுக்கு மாடிக் குடியிருப்புகளாவதற்காகக் காத்திருக்கின்றன. ஏக்கர் விலை இப்போது சுமார் ஒரு கோடி ரூபாய்.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களை ஒட்டியுள்ள கிராமங்கள் மாத்தூரைப் போல படு வேகமாக அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன. அடுத்த நிலை நகரங்களையொட்டி உள்ள கிராமங்களின் அழிவு வேகம் மட்டும் குறைவே தவிர, அதே திசையில்தான் எல்லாம் நடக்கின்றன.
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என்பதே பவணந்தியின் நன்னூல் வாக்கு. ஆனால் பழையதில் எதைக் கழிப்பது, புதியதில் எதைக் கொள்வது என்ற தெளிவு மக்களுக்கும் அரசுக்கும் தேவைப்படுகிறது.
மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி கிராமங்கள் அழிந்து நகர்மயமாதல் பற்றியும் விவசாயம் குறைந்து தொழில்மயம் அதிகரிப்பது பற்றியும் என்ன கொள்கைகள் , நடைமுறைகள், மாற்றுத் தீர்வுகள் வகுத்து வைத்திருக்கின்றன என்பதே தெரியவில்லை. திட்டமிடுதலும் ஒழுங்குபடுத்தலும் இல்லாமல், எல்லாம் வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்பதாக நடந்துகொண்டிருக்கின்றன.
பஞ்சாயத்து முதல் ஐபிஎல் வரை பணம் மட்டுமே எதையும் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது.
மாத்தூர் தெரு வழியே சென்ற தசரதனின் காரில் உட்கார்ந்திருந்த அண்ணாவும், மாடியறையில் எழுதிக் கொண்டிருந்த மு.வவும் எதிர்காலம் பற்றி கண்ட கனவுகள் என்னவாக இருந்திருக்கும் ? நிச்சயம் இப்போது அருளும் நானும் கண்ட காட்சிகளாக இருந்திருக்க முடியாது. கனவுகளை எங்கே தொலைத்தோம்? எப்படித் தொலைத்தோம் ? நம் காலக் கனவுகள் என்ன? எங்கே ?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...