சிதம்பரத்தில் அப்படி என்ன தான் பிரச்சினை? பொத்தாம் பொதுவாக இது சரி/தவறு என்று கூற முடியுமா? இங்கு அனைத்தும் சிதம்பர இரகசியமாக இருப்பதாக எண்ணி பலரும் நடப்பது புரியாமல் குழம்பிச் செல்கின்றனர். எப்போதாவது சிதம்பரம் வருபவர்களுக்கு இந்த பிரச்சனைகள் புரிவதில்லை. ஆகையினால் எப்போதும் வந்து செல்கிற என்னை போன்றோர் இதனை விளக்க கடமைப்பட்டுள்ளோம். எனவே எனக்கு தெரிந்ததை பொது மக்கள் முன் வைக்கிறேன்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, June 29, 2023
கோயிலில் அரசு நிர்வாகம் தேவையில்லாத ஒன்று.
சபைகள்
இதில் நடராஜா சித்சபையில் (கருவறை) எப்போதும் இருக்கிறார், இதனை சிற்றம்பலம் என்று கூறுவர். வருடத்தில் அவருக்கு வரக்கூடிய ஆறு அபிஷேகங்களில் நான்கினை (சித்திரை, மாசி, ஆவனி, புரட்டாசி) சித்சபையில் இருந்து இறங்கி வந்து கனகசபையில் பெறுகிறார். கனகசபைக்கு பொன்னம்பலம் என்று பெயர். மீதமுள்ள இரண்டு அபிஷேகங்களை(ஆனி, மார்கழி) சித்சபை நீங்கி இராஜ சபையில்(ஆயிரங்கால் மண்டபம்) பெற்றுக் கொள்கிறார், அங்கேயே தாண்டவ தரிசனம் தருகிறார். கோனம்பலம் என்று இராஜசபைக்கு பெயர்.
48 வருடங்களுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நிகழும் போது, சித்சபை திருப்பணிகளுக்காக தேவ சபையில் ஒரு மண்டலம் தங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். தேவ சபை சிதம்பரம் கோயில் செப்புத்திருமேனிகள் இருக்கும் இடம். தேவர்கள் மத்தியில் காட்சி கொடுப்பதால் தேவ சபை என்று பெயர், பேரம்பலம் என்பது தமிழ்ப் பெயர்.
அடுத்ததாக இறைவன் இறைவியுடன் நடனப் போட்டி செய்த இடம், நிருத்த சபை என்று கூறப்படுகிறது. இது நடராஜர் சந்நிதிக்கு நேர் எதிரே ஊர்த்துவ தாண்டவர் சந்நிதியாக விளங்குகிறது. இதற்கு எதிரம்பலம் என்று பெயர் உண்டு. இங்கே நடராஜா எழுந்தருளுவதில்லை. மாலிக் கஃபூரின் படையெடுப்பிற்கு பின் தெற்கு வாயில் மூடப்பட்ட பிறகு அங்கே நடராஜா செல்வதில்லை என்றும் கூறலாம்.
ஆக .. தமிழகம் முழுவதும் பஞ்சசபை இருந்த போதும், சிதம்பரத்தில் மட்டுமே பஞ்ச சபை கொண்டமையாலும், இந்த சபைகளுக்கெல்லாம் தலைவன் நடராஜர் என்பதாலும் அவரை சபாபதி என்று அழைக்கிறோம்.
கனகசபை
கனகசபை என்பது சித்சபைக்கு முன்னே இருக்கும் ஒரு stepdown மண்டபம். இதன் பெயரே ஒரு misnomer, தங்கம் வேய்ந்த சபை என்று பொருள் பட்டாலும், சித்சபை(கருவறை) தான் நிஜமான பொற்கூறைக் கொண்டது.
சித்சபை கனகசபை இரண்டுமே rectangular shapeஇல் இருக்கும் ஒரே மாதிரியான மண்டபங்கள். சித்சபை தான் கருவறை என்றாலும் இரண்டுமே கருவறை போன்றது தான். இரண்டிற்குமே கருவறைக்குண்டான இலட்சினைகள் உண்டு. சித்சபையில் சபா மூர்த்தங்கள் அனைவரும் பூஜைகள் ஆராதனைகள் கண்டாலும், கனகசபை மீது தான் நடராஜர், சிவகாமி, பைரவர், சந்திரசேகரர், நடராஜரின் respresentative ஆக விளங்கும் சந்திரமௌலீஸ்வரர் என்னும் ஸ்படிக லிங்கம், இரத்தின ஸபாபதி என்னும் குட்டி நடராஜர் விக்ரஹம்(இரத்தின கல்) என அனைவருக்கும் அபிஷேகம் மற்றும் நித்திய படி ஆறு கால பூஜைகள் நடைபெறும்.
சிதம்பரத்தில் சுவாமி நித்தம் உறையும் இரண்டு பிரதான இடங்கள் சிற்சபை மற்றும் கனகசபை ஆகும். இவை வெறும் architectural marvel மட்டுமல்லாது தத்துவார்த்தங்களின் பூரணம் என்பதனை நாம் வகையாக மறந்து விடுகிறோம். அதனை இரண்டு விதமாக விளக்கலாம், அதற்கு முதலில் சுவாமி ஏன் இங்கே வந்தார் என்று பார்ப்போம்.
சுவாமி தன் நடனத்தை அனைவரும் காண வேண்டும் என்ற நோக்கில் தான் சிதம்பரம் வந்தார். நடராஜரின் தாண்டவம் உலக இயக்கங்களின் தத்துவம், அணுவுக்கு உள்ளேயும் நிகழும் அற்புதம் - இதனை கண்ட உயிர்களுக்கு, வாழ்வின் அடிப்படை அறிவு உண்டாகி, பரம்பொருள் தெளிவு பெற்று, இனி பிறப்பு வேண்டாம் என்று எண்ணத் தூண்டுவதாம். ஆகையினால் அவர் கைலாயத்தில் ஆடும் நடனத்தை சிதம்பரத்தில் ஆடிக் காட்ட மனம் இறங்கினார்.
அஃது சிதம்பரத்தில் 'சிற்பர வியோமம்' என்னும் திறந்த வெளி மண்டபத்தில்(சித்சபை) ஆடினார். ஆனால் திறந்த வெளி மண்டபம் என்பது வஞ்சம், சூழ்ச்சி, களவு குணம் கொண்ட உலகத்தில் கலியுகத்தில் சாத்தியமற்றது. ஆகவே சித்சபை எனும் திறந்த வெளி மண்டபத்திற்கு கதவுகள் பூட்டுகள் நிறைந்து, கனகசபை எனும் பாதுகாப்பு மண்டபம் உண்டானது. கனகசபை ஒரு பாதுகாப்பு அரணாக எப்படி விளங்குகிறது?
அது தான் கனகசபையின் தத்துவம். முதலில், சித்தம் என்னும் நமது conscious மனதில் நடராஜா ஆடுகிறார். ஆகையால் 'சித்சபை' என்று பெயர்ப்பெற்றது. அந்த நடனத்தை சித்தமெல்லாம் சிவனாக இருக்கும் தெளிவான எண்ணங்களால் மட்டுமே காண முடியும்.
ஆயினும் உலக இயல்புகள் அவரைக் காண விடாது, Subconscious மனம் எழுப்பும் ஆசைகள் தான் காரணம். அந்த subconscious state நிலையில்லாத ஆசைகள் உண்டாக்கும் அமைப்பை தான் கனகசபை என்கிறோம். ஒரு மனிதனின் உச்சக்கட்ட ஆசை பொருள் மீதே சாரும், அதனை தங்கம் என வைத்துக் கொள்வோம் 'கனகசபை' என்பதன் அர்த்தம் இப்போது புரியும்.
இரண்டாவதாக, இந்த அண்டத்தில் முழுவதுமாக விளங்கும் இறைவனை விராட் புருஷன் என்கிறோம். அப்படியாக உலகினில் அந்த விராட் புருஷனின் இருதய ஸ்தானமாக விளங்குவது சிதம்பரம் கோயில்(புண்டரீகபுரம்). ஆகவே உடலில் இதயம் இருப்பது போல் நேராக இல்லாமல் இடது புறமாக விளங்குகிறது சித்சபை. இதயத்தின் உள்ளே நித்தம் ஆடும் நடராஜர் இருக்கும் இடம் சித்சபை ஆகையினால், அவரைக் காக்கும் pericardium ஆக விளங்குவது கனகசபை.
ஆகவே சித்சபையில் இருக்கும் நடராஜர் ஒழுங்காக தெரியவில்லை(எப்படி தெரிவார்?) என்று கூறி கூறி கனகசபை மேலே ஏறும் வழக்கம் எப்படியோ உண்டாயிற்று. இராஜராஜன் சோழன் காலத்து ஓவியம் (தஞ்சை பெருங்கோயில் சாந்தார அறை) கூட மன்னன் தன் பெண்டுகளுடன் கனகசபையில் நின்று தரிசப்பது போன்று காட்டப்பட்டிருக்கிறது. அதில் பொது மக்களுக்கு அனுமதியில்லை.
இப்படியாக பாதுகாப்பு அரண்கள் கூட நம் பக்தியை பலவீனப்படுத்தி விடக்கூடாது என்று தான் சுவாமி வருடத்திற்கு நான்கு முறை, சித்சபை இறங்கி கனகசபையில் நமக்கு அருகே நின்று காட்சி தருகிறார். வருடத்தில் இரண்டு முறை - ஆனி மற்றும் மார்கழி மாதங்களில் தானே கோயில் நீங்கி தேர் ஏறுகிறார். அப்போதெல்லாம் அவர் காட்சி கொடுக்கும் விதத்தை எத்தனை வார்த்தை தொடுத்தாலும் விவரிக்க முடியாது.
விழாக்காலங்களில் சபை
{எழுத்துரு - அருண் பிள்ளை}
விழாக்காலங்களில் சபையின் நித்தியப்படிகள் பாதிக்கப்படுவதில்லை எனினும் மாமூலான முறைகள் மாற்றப்பட்டிருக்கும். வருடத்தில் நான்கு முறை சித்சபை இறங்கி நடராஜர் கனகசபைக்கு வரும் போது கனகசபை மீது ஏற வேண்டும் என்று யாரும் கேட்பதில்லை, அதற்கு அவசியமும் இல்லை. காரணம் நடராஜர் அருகே இருக்கிறார்.
அது போல ஆனி உத்திர திருமஞ்சனம் மற்றும் மார்கழி ஆருத்ரா திருமஞ்சனம் போது இயல்புகள் வேறாக இருக்கும். விழாவின் போது இரண்டு நாட்கள் நடராஜர் சபையில் இருப்பதில்லை. அப்போது என்ன நடக்கும்? முதல் நாள் இரவு தேர் பவனிக்கு நடராஜர் ஆயத்தமாகி சபையில் திருமுக தரிசனம்(மற்றவை மறைக்கப்பட்டு) காட்சித் தருவார். அன்று இரவே கனகசபையில் அடுத்த நாளுக்கு உரிய ஆறு கால பூஜைகளும் நடைபெறும்.
மறுநாள் நடராஜர் தேர் ஏறிவிட்ட பிறகு, அவர் இருந்த இடத்தில் சொர்ணகால பைரவரும், சந்திரசேகரரும் (சபைக்கு உள்ளே இருப்பவர்கள்) இருப்பார்கள், கனகசபை மூடப்படும். கனகசபையில் நடக்கும் பூஜைகள் சித்சபை உள்ளேயே நடைபெறும். இவை அனைத்தும் பதஞ்சலி சூத்திரம்(சிதம்பரம் கோயில் பூஜை முறை விளக்கும் நூல், வேதம் ஆகமம் கலந்தது) முறைப்படி இரகசியமாக நடைபெறும். அதில் பொது மக்கள் கலந்துக்கொள்வது இடையூறு தான், அவசியமும் இல்லை. நடராஜரே சபை நீங்கிய பின்னர், யாரைக் காண வேண்டும் என்று துடிக்கிறார்கள் என்பது புரியவில்லை.
ஒருவேளை சபை பிரதிநிதிகளை தரிசிக்க ஆசைப் பட்டால், சந்திரசேகரர் தினமும் அதிகாலையில் ரிஷபத்தில் பிரகாரம் சுற்றுவார், பைரவர் அஷ்டமி தோறும் (மாதம் இருமுறை) கனகசபையில் பூஜை பெறுவார்! (இவர்களை காண்பது மிக frequent என்கிறேன்)
சபை கட்டுபாடுகள்
கனகசபை மட்டும் அல்லாது அனைத்து சபைகளுக்கும் சிதம்பரத்தில் கட்டுப்பாடுகள் உண்டு. அது எப்போதும் நடைமுறையில் தான் இருக்கிறது,
சித்சபை (கருவறை) உள்ளே யாருக்கும் அனுமதி இல்லை, கனகசபையில் அபிஷேகம்-பூஜை நேரங்களில் அனுமதி இல்லை, தேவ சபையில் செப்புத் திருமேனிகள் பாதுகாக்கப்படுகின்றன, அங்கே ஒருபோதும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை, இராஜசபை எனும் ஆயிரங்கால் மண்டபம் நடராஜர் இருக்கும் அந்த இரண்டு நாட்கள் தவிர மற்றைய அத்தனை நாட்களும் பூட்டி தான் கிடக்கும், பொது மக்கள் செல்ல அனுமதி இல்லை. இவற்றிற்கெல்லாம் செல்ல மக்கள் உரிமை கோர முடியாது.
சபைகளின் முக்கியத்துவம்
சிதம்பரம் கோயிலுக்கு சபைகளே அடி நாதம். இங்கே நடராஜர், நடராஜர் என்று அழைக்கப்படாமல் சபாபதி என்றும்; கோயிலே 'தில்லை ஸபாநாயகர் கோயில்' என்றும் அழைக்கப்படுவதிலிருந்து அதன் முக்கியத்துவத்தினை அறியலாம்.
மேலும் நடராஜர் மட்டும் அல்லாமல் இங்கே இருக்கும் பெருமாளும் திருச்சித்திரகூடம் என்னும் சபையில் இருந்த படியே நடராஜரின் தாண்டவ தரிசனம் பெறுகிறார். {எழுத்துரு - அருண் பிள்ளை} அதனை தெற்றியம்பலம் என்றும் கூறுவர், 'முன்றில் கிடந்த மாயோன்' என்று திருமுறைகளும் அவரை விவரிக்கின்றன.
சிதம்பரம் கோயில் ஆகமவிதிப்படி நடைப்பெறும் கோயில் அல்ல, அவற்றின் முறைகளும் விதிகளும் வித்தியாசமானவை. ஆகம விதிப்படி கூறவேண்டுமானால் சித்சபை கருவறை என்றால், கனகசபை அர்த்த மண்டபம் போன்றது. பெரும்பாலான கோயில்களில் அர்த்த மண்டபத்தில் மக்களை அனுமதிப்பதில்லை, அதில் மக்கள் உரிமைக் கோரவும் முடியாது. சில கோயில்கள் அனுமதிக்கின்றன என்றாலும் கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றை மதித்து தான் ஆக வேண்டும்.
ஆகவே சிதம்பரம் கோயில் சபைகளால் ஆனது, அதில் நடராஜா இருந்து செல்லும் அத்தனை சபைகளும் புனிதம் மிக்கவை. அவற்றில் ஏற வேண்டாம் என்று கூறவில்லை, அவற்றின் புனிதத் தன்மைக்கு களங்கம் கற்பிக்க வேறு எண்ணங்களோடு ஏற வேண்டாம் என்பதே வேண்டுகோள்.
முக்கியமாக கனகசபை இறைவனை அருகில் காண ஏதுவாக உள்ள ஒரே காரணத்தினால் பொதுமக்களால் விரும்பப்படுகிறது. அதிலும் முதல்முறை வருபவர்களுக்கு அந்த curiosity இருக்க தான் செய்யும், அதனை நடராஜரே உணர்ந்து தான் மேலே அனுமதிக்கிறார்.
அடிக்கடி வருபவர்களுக்கு மேலே சொன்ன தத்துவார்த்தங்கள் புரிந்தால், மேலே ஏறி தான் அவரை தரிசிக்க வேண்டும் என்ற ஆசை காணாமல் போகும். நான் நினைத்த நேரங்களில் கனகசபையிலிருந்து தான் இறைவனைப் தரிசிப்பேன், அங்கிருந்து தான் தேவாரம் திருவாசகம் பாடுவேன் என்பதெல்லாம் வீண் ஆசை. அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் மேலே சேர்க்கமாட்டார் நடராஜா.
இந்த இரு விதமான ஆசைகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் பாகுப்படுத்தி தக்கார்க்கு தக்கஞ் செய்ய தான் இந்த பிரச்சினையில் நடராஜா எத்தனித்திருக்கிறார். உங்களுடைய ஆசை என்ன என்பதை அவர் அறிதலிலே நீங்கள் மேலே ஏறுவதும் கீழே நிற்பதும் நடக்கும்!
கடைசியாக, ஒன்றைக் கூற விரும்புகிறேன்! சிதம்பரம், நடராஜரின் நித்திய வாசத்தை உணர்த்தக்கூடிய இடம். மற்ற கோயில்களில் காசு தந்தால் எந்த இராஜாவையும் அருகில் சென்று பார்க்கலாம். இங்கே அவர் நினைத்தால் மட்டுமே, அவரைக் காண முடியும்! அதுவும் அவர் உங்கள் இடம் தேடி வருவார்(விழாக்காலங்களில் கூட்ட நெரிசல் இதனை விளக்கும்). அப்படியாக கனகசபை மேல் ஏறுவது/இறங்குவது என்பது எந்த மனிதனாலும் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு அல்ல என்பதனை உணர வேண்டும்.
இங்கே ஒருவரே இராஜா, அவர் நடராஜா!
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
Numbering of vehicle in India is done at Regional/Sub Regional Transport Offices located in various states. Each vehicle number has presc...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment