Friday, May 26, 2017

‪ஏன் பெரியவர்களுக்கு அபிவாதயே சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்‬?

அபிவாதனம் செய்யும் சமயத்தில் தாத்தா-கொள்ளுத்தாதா எல்லாம் வருவதில்லை. வேதகாலத்து ரிஷிகள், அதுவும் குறிப்பிட்ட கோத்திரத்தின் மூல புருஷர்கள் எனப்படும் ரிஷிகளது பெயர் மட்டுமே சொல்லப்படுகிறது.
அவரவர் குல முதல்வர்கள் என்னும் படியான ரிஷிகளைச் சொல்லி அவர்களது வழியில், இந்த கோத்திரம்-ஸூத்ரம் சார்ந்த நான் வணங்குகிறேன் அப்படின்னு சொல்லுகிறோம்.
அபிவாதனம் செய்வதன் மூலம் நாம் நமஸ்காரம் செய்பவருக்கு நம்மைப் பற்றிய ஒருவித வைதீக அறிமுகம் செய்துகொள்கிறோம். இதைச் சொன்னால் இன்றைய தலைமுறை எதற்கு சந்தியாவந்தனத்திலும், நமது கோத்ரம்-ஸூத்ரம் தெரிந்தவர்களுக்கும் இதைச் சொல்லவேண்டும் என்று இன்றைய சிறுவர்கள் கேள்வி கேட்பார்கள்.
சாதாரணமாக கோவிலில் ஒரு அர்ச்சனை செய்தாலேயே அதில் நமது கோத்ரம், பெயர் சொல்லிச் செய்கிறோம். அதாவது கோத்ரம்+பெயர் ஒரு யூனிக் ஐடண்டிட்டி [ஓட்டர் ஐடி, பான் கார்ட் போல] தந்து அதனைச் சொல்லுவதன் மூலமாக கர்மாவினது/அர்ச்சனையின் பலன் நம்மை அடையச் செய்கிறது. இது போன்றே இந்த கோத்ரம்+ஸூத்ரத்தை சார்ந்த நான் உன்னை வணங்குகிறேன் என்று சந்த்யா தேவதை-சூர்யனை வணங்குகிறோம்.
நம்பிக்கை என்பது இருக்குமானால் அது மந்திரத்தின் மீது மட்டுமல்லாது, முழுச் சடங்கின் மீதும் இருக்க வேண்டும். மந்திரத்தை நம்புவோமானால், அதைத் தந்த நமது ரிஷிகள் பெயரைச் சொல்ல யோசனை ஏன் என்று கேட்க வேண்டும். மற்ற செயல்களின்றி மூல மந்திரத்தை மட்டும் நான் ஜபம் செய்கிறேன் என்பது தவறு என்று குழந்தைகளுக்குப் புரியச் செய்ய வேண்டும். அபிவாதனத்தில் ரிஷிகளது பெயரைச் சொல்லுவதன் மூலமாக குல முதல்வர்களான ரிஷிகளை அவ்வப்போது நினைவில் கொண்டு வந்து, அவர்களது அளப்பரிய செயல்களை நமது மனதில் கொண்டு வருவதன் மூலம் நாமும் நமது செயல்களை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் ஒரு காரணம். இவ்வாறு மூல ரிஷிகளது வரலாற்றை நாம் முதலில் தெரிந்து கொண்டு உபநயன காலத்தில் சிறுவர்களுக்குச் சொல்லித் தர வேண்டும்.
"ரிஷி" என்ற சொல்லுக்கு 'பார்ப்பவர்' என்ற பொருளுண்டு. சாதாரணமாக நம்மால் பார்க்க முடியாதவற்றையும் தமது தபோ-பலத்தால் ப்ரத்யக்ஷமாகவும், தமது அனுபவத்தாலும் அறிந்து அதனடிப்படையில் தமது கர்மாக்களை வகுத்துக்கொண்டு அதனடிப்படையிலேயே வாழ்ந்தவர்கள். அவர்களது வழி வருபவனான நான் உங்களை நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லுவதே அபிவாதனம்.
அபிவாதனம் செய்கையில் சொல்லும் மந்திரத்தில் சொல்லுவது நமது கோத்ரம், ப்ரவர ரிஷிகள், நமது ஸூத்ரம் மற்றும் நமது சர்மா நாமா ஆகியவை மட்டுமே. இவற்றில் கோத்ரம் என்பது என்ன?, ப்ரவரம் என்பது என்ன என்று பார்க்கலாம்.
ஆபஸ்தம்பர், போதாயனர் போன்ற மஹரிஷிகள், கோத்ரம் என்ற பதத்திற்கு வம்சம், சந்ததி, குலம், பரம்பரை ஆகியவற்றையே பொருளாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. கோடிக்கணக்கான கோத்ரங்கள் இருப்பதாக ஸ்ம்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறதாம். அவற்றில் தற்போது இருப்பவை என்பதாக 49ஐ போதாயனர் வரிசைப்படுத்தியிருக்கிறார்.
'அபிவாதயே' என்று ஆரம்பித்தவுடன் அவரவர் கோத்ரத்திற்கான மூல ரிஷிகளின் பெயரைச் சொல்லுகிறோம். அவர்கள் அந்த கோத்ரத்தின் ரிஷிகள். யாரெல்லாம் கோத்ர ரிஷிகள் என்றால், மொத்தம் பத்து பெயர்களை கோத்ர ரிஷிகளாக ஸ்மிருதியில் சொல்லியிருக்கிறார்கள். சில ஸ்மிருதிகளில் எட்டு (8) என்றும், சிலவற்றில் பத்து (10) என்றும் சொல்லப்பட்டிருக்கிறதாக தெரிகிறது.
ப்ரும்மாவின் புத்ரகளான,ப்ருகு, அங்கிரஸ், மரீசி, அத்ரி ஆகிய நால்வர் மற்றும் இவர்களில்,ப்ருகுவின் புத்ரரான ஜமதக்னி, அங்கிரஸரின் புத்ரகளான கெளதமர், பரத்வாஜர், மரீசியின் புத்ரரான கஸ்யபர், வஸிஷ்டர், அகஸ்தியர் மற்றும் அத்ரியின் புத்ரரான விஸ்வாமித்ரரும் கோத்ர ரிஷிகளில் வரும் மூலவர்கள்.
கோத்ர ரிஷிகள் 8 என்று சொல்லும் ஸ்மிருதிகள், மேற்சொன்ன புத்ரர்களான 7 நபர்களையும், அத்ரியையும் சேர்த்து 8 ரிஷிகளாக குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லுகிறார்கள். ப்ருகு மற்றும் அங்கிரஸ் ஆகிய இருவர்கள் பற்றி ஸ்மிருதிகளில் அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதால் அவர்களையும் சேர்த்து 10 ரிஷிகள் என்பதாக சில ஸ்மிருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆக யார் எந்த கோத்ரத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இந்த 10 ரிஷிகளில் ஒருவராவது அபிவாதனத்தில் வரும் ரிஷிகளாக இருப்பார்கள். இவ்வாறு இருப்பதால் இவர்கள் கோத்ர ரிஷிகள் என்றும் பெயர் வந்தது.
திருமணம் மற்றும் மஹா யாக, யஞ்யாதிகள் செய்யும் சமயத்தில் ஹோதாவும், அத்வர்யுவும் அக்னியிடத்தில் ப்ரார்த்தனை செய்கையில் 'இந்த ரிஷியின் வம்சத்தைச் சார்ந்தவர் யாகம் செய்கிறார் என்று கூறி விசேஷமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இன்றும் திருமணங்களில் கன்னிகா தானத்திற்கு முன்பாக இந்த கோத்ரம், ஸூத்ரத்தைச் சார்ந்த, இந்த ரிஷிகள் வழிவந்த இன்னாருடைய பெளத்ரன்/பெளத்ரி, இன்னாருடைய புத்ரன்/புத்ரிக்கு என்று கூறுவதைக் காண்கிறோம். இவ்வாறாக அறிவித்தலே ப்ரவரம் சொல்லுதல் என்பது. ஆக, அபிவாதனம் என்பதே ப்ரவரம். அபிவாதனம் செய்கையில் ரிஷிகளது பெயரும் கர்மா செய்பவர் பெயரும் வரும், ஆனால் ப்ரவரத்தில் கர்மா செய்பவரது பாட்டனார் , முப்பாட்டனார் (பிதா, பிதாமஹன், நப்தா) பெயரும் வரும். அபிவாதனம் செய்பவரே சொல்லுவது; ப்ரவரம் என்பது செய்து வைக்கும் ஆச்சார்யார் சொல்லுவது.
இவ்வாறு சொல்லப்படும் ப்ரவரத்தில் வரும் ரிஷிகள் அவரவர் கோத்ர ரிஷிகளே!, அக்னியிடத்து ப்ரார்த்தனை செய்கையில், மூல ரிஷிகளான மந்த்ர த்ருஷ்டாகளது வம்சத்தவர் என்று கூறுவதால் அக்னி மகிழ்வடைவதாக தர்ம சாஸ்த்ரம் சொல்லுகிறது.
(1)அபிவாதயே,
(2) _______ _______ ______ (ரிஷிகளின் பெயர், உங்கள் கோத்திரத்திற்கேற்ப, கீழ்கண்ட பட்டியலில் காணவும்.)
(3) ____________ (உங்கள் கோத்திரத்திற்கேற்ப..., - ஏகா, த்வயா, த்ரயா, பஞ்சா, ஸப்தாரிஷேய
என்பனவற்றை கூட்டிக்கொள்ளவும்),
(4) ப்ரவரான்வித:
(5) _______________ ஸூத்ர (ஆபஸ்தம்ப ஸூத்ர, போதாயன ஸூத்ர),
(6) _______________ (யாஜூஷா, ஸாமோ, ரிக் -)காயாதி
(7) ________________ கோத்ரஸ்ய (உங்கள் கோத்ரம்)
(8) ______________________ (உங்கள் பெயர்)
(9) சர்மண: அஹம் அஸ்பிபோ.
ஏன் இப்படி கோத்ரங்களை/ப்ரவரங்களைச் சொல்லுகிறோம் என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில;
1. ஸகோத்ரத்தில் பெண் எடுக்க/கொடுக்கக் கூடாது - திருமணங்கள் இன்று நடப்பது போல முன்பில்லை. சிறு வயதில் உபநயனம் செய்வித்து பால்ய விவாஹம் செய்வது அக்காலத்தைய வழக்கம். அதனால் ஒரு பிரம்மச்சாரி அபிவாதனம் செய்கையிலேயே அவனது கோத்ரம் தெரிந்து கொண்டு பெரியவர்கள் அவனுக்கு தகுந்த வரனை நிச்சயிக்க உதவியிருக்கிறது. இது தவிர திருமணங்களில் ஸபையில் இருப்பவர்கள் வது-வரன் ஆகியோரது கோத்ரங்களை அறியச் செய்ய ப்ரவரம் உதவுகிறது.
2. குறிப்பிட்ட சில கோத்ரத்தைச் சார்ந்தவர்களுக்கு அவர்களது கர்மாகளில் சிற்சில வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறான வேறுபாடுகளை அறிந்து செய்து கொள்ள, செய்து வைக்க கோத்ரம்-ப்ரவரம் உதவுகிறது
3. வயதில் பெரியவர்கள், அத்யயனம் செய்தவர்கள் முன்னிருக்கும் போது சிறியவர்களது ஜீவன் நிலையில்லாது இருக்குமாம், அவ்வாறு இருப்பதைத் தவிர்க்கவே பெரியவர்களைக் கண்டதும் அவர்களுக்கு நமஸ்காரம்.
4. பெரியவர்களுக்கு அபிவாதனம் செய்வதால் ஒருவனுக்கு ஆயுசும், ஞாபக சக்தியும், கீர்த்தியும், நல்ல மனோபலமும் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது.
5. தனக்கு முந்தைய 3 தலைமுறைகள் பற்றித் தெரியாதவனுக்கு பெண் கொடுப்பது, ஸ்ராத்தத்தில் வரிப்பது போன்றவை கூடாது, ஆகவே அபிவாதனம்-ப்ரவரம் போன்றவை முக்கியம்.
எங்கே, யாருக்கு அபிவாதனம் செய்யக்கூடாது என்பதும் ஸ்மிருதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அவை;
1. தீர்த்த பாத்திரம், புஷ்பம், ஜபம், ஹோமம் போன்றவை செய்யும் போதும் அபிவாதனம் செய்யக்கூடாது. ப்ரேத்/பித்ரு கர்மாகள் செய்கையில் பூணூலை வலம் மாற்றிக் கொண்டே அபிவாதனம் செய்ய வேண்டும்
2. ப்ரத்யபிவாதனம் செய்யத் தெரியாதவர்களுக்கு (ஸ்மிருதியில் சொல்லியபடி ஆசிர்வாதம் செய்யத் தெரியாதவர்களுக்கு) அபிவாதனம் தேவையில்லை, வெறும் நமஸ்காரம் மட்டும்.
3. ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் கூடாது.
4. தம்பதிகளில் பெண்க்ளுக்கு மட்டும் நமஸ்காரம் செய்கையில் அபிவாதனம் கிடையாது.
5. ஆசாரமில்லாதவனுக்கு அபிவாதனம் கூடாது, ஆச்சாரமில்லாத காலத்தில் அபிவாதனம் இல்லாது நமஸ்கரிக்கலாம்.
முதலில் அபிவாதனத்தில் அதே வரிசைக் கிரமத்தில் ஆதி முதல் ரிஷி, அவர் பிள்ளை, பேரர் என்று கோத்ரத்தைத் தெரிவிப்பார்கள். அப்புறம் பித்ருக்களின் வரிசை, ஆனால் அப்பா – தாத்தா – கொள்ளுத் தாத்தா என்று தர்ப்பணத்தில் சொல்லுகிற கிரமத்தை இங்கு மாற்றி கொள்ளுத்தாத்தா – தாத்தா-
அப்பா என்று சொல்லுவார்கள்.
அபிவாதனத்தில் முதலில் மூல ரிஷிகளின் பெயர்கள் வரும் என்பது தான் இங்கே முக்கிய விஷயம். அப்புறம் அந்த கோத்ரப் பெயரும், அப்புறம் கர்மாக்களை வகை தொகைப் படுத்திக் கொடுக்கும் ஸூத்ரங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும், அப்புறம் நாலு வேதங்களில் இவன் எதைச் சேர்ந்தவனோ அதன் பெயரும் வரும். அந்த வேத சாகையைத்தான் அத்யயனம் பண்ணுவதாக வரும் (இந்தக்
காலத்தில் பண்ண வேண்டியவன் என்று வைத்துக் கொள்ளலாம்!) – முடிவாகத் தன் பெயரைச் சொல்லி போ (Bhoh) – அதாவது ‘பெரியவரே’ , ‘ஐயனே’ என்று நமஸ்கரிக்கப்படுபவரைக் கூப்பிட்டு நமஸ்காரத்தை சமர்ப்பிக்க வேண்டும். இன்ன ரிஷிகளைக் கொண்ட, இன்ன கோத்ரக்காரன், இன்ன ஸூத்ரக்காரன், இன்ன வேத சாகையை அத்யயனம் பண்ணும் இன்ன பெயருள்ளவனாக இருக்கிறேன் ஐயா!’ என்று மொத்தத்தில் அர்த்தம் கொடுக்கும்.
இப்பேர்ப்பட்ட குடியின் வழித்தோன்றலாக, இன்ன பெயர் கொண்ட நான் இருக்கிறேன், என்பதாகக் குடியைச் சொன்ன பிறகு, தன்னுடைய பெயரை ஒருத்தன் சொல்லுவதாக அபிவாதனத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள் – இத்தனைக்கும் ஆரம்பம் – ‘அபிவாதயே’ – சரி வரச் சொல்லுகிறேன், அதாவது அறிமுகம் பண்ணிக் கொள்கிறேன் என்று நேர் அர்த்தம் – தங்களுடைய ஆசீர்வசனத்தை (மறுமொழியை) வேண்டிச் சொல்கிறேன் என்று நீட்டி அர்த்தம் சொல்லுவதுண்டு.
ஸன்யாசிகளுக்கு அபிவாதனம் சொல்லக் கூடாது. கோயில்களிலும், வீட்டுப் பூஜைகளிலும் நமஸ்கரிக்கிறபோது அபிவாதயே சொல்லக் கூடாது. சபைக்கு நமஸ்காரம் செய்யும்போதும் அபிவாதயே கிடையாது. ஸ்த்ரீகளில், தாயாரைத் தவிர, மற்றவர்களுக்கு அபிவாதனம் இல்லாமலேதான் நமஸ்காரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...