Wednesday, May 31, 2017

#மஹாபாரதம்_கதை_சுருக்கம்.......!!!



மகாபாரதம் என்னும் தீஞ்சுவை இதிகாசத்தை இயற்றியவர் வியாசர். சமஸ்கிருதத்தில், ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஸ்லோகங்களை கொண்ட இக்காப்பியத்தை, தமிழில் மொழி பெயர்த்தவர்களில் முக்கியமானவர் வில்லிப்புத்தூரார். பெயர் தான் வில்லிப்புத்தூராரே தவிர, இவரது ஊர் எனது சொந்த மாவட்டமான விழுப்புரம் மாவட்டம் திரு முனைப்பாடி அருகிலுள்ள சனியூர் ஆகும். இவரது தந்தை பழுத்த வைணவர். அவர் பெரியாழ்வார் மீது கொண்ட பற்றினால், ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த அவரது பெயரை தன் மகனுக்கு சூட்டினார். வில்லிப்புத்தூராரோ சிவனையும் ஆராதித்து வந்தார். வியாசர் எழுதிய 18 பருவங்களை 10 பருவங்களாகச் சுருக்கி 4351 பாடல்களுடன் மகாபாரதத்தை எழுதி முடித்தார்.
குரு வம்சத்தின் பங்காளிகளுக்கு இடையே நிலத்துக்காக நடைபெற்ற மாபெரும் போர்தான் மகாபாரதப் போர். இதைக் களமாகக் கொண்டு ஆசிரியரான வியாசர் மாபெரும் காப்பியத்தைப் படைத்துள்ளார்.
மகாபாரதத்தில் பகவான் கிருஷ்ணன் கீதையைப் போதித்து, வாழ்க்கையின் யதார்த்த நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளதால், இதை ஐந்தாவது வேதம் என்றும் சொல்லுவர். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளுவது கடினம். ஆனால், மகாபாரதம் பாமரனும் படித்து புரிந்து கொள்ளக்கூடியது. சூதாட்டத்தின் கொடுமையை விளக்கக்கூடியது. இந்த வேதத்தைப் படித்தவர்கள் பிறப்பற்ற நிலையை அடைவர் என்பது ஐதீகம்
சந்தனு மஹாராஜாவுக்கு முதல் மனைவி கங்கை மூலம் தேவவிரதன் என்றொரு மகன் பிறக்கிறான். அதன் பின் மனைவி கங்கை மஹாராசா சந்தனுவை விட்டுப் பிரிந்து சென்றுவிடுகிறார். மஹாராசா சந்தனு பின்னர் சத்யவதி என்ற பெண்மீது ஆவல்கொண்டு அவளை மணக்க விரும்புகிறார். ஆனால் தன் மகளுக்குப் பிறக்கும் குழந்தைகள்தான் நாட்டை ஆள்வார்கள் என்று அரசர் வாக்குறுதி அளித்தால்தான் பெண்ணை மணமுடித்துத் தரமுடியும் என்று சத்யவதியின் தந்தை சொல்கிறார். மூத்த பையன் தேவவிரதன் இருக்கும்போது இவ்வாறு செய்வது சரியல்ல என்பதால் சந்தனு மறுத்துவிடுகிறார்.
இந்த உண்மை தெரியவந்ததும், தேவவிரதன் தான் இனி அரசனாகப் போவதில்லை என்றும் திருமணமே செய்துகொள்ளப் போவதில்லை என்றும் சூளுரைக்கிறார். வானில் இருந்து தேவர்கள் அவர்மீது பூமாரி பொழிகிறார்கள். அவர் செயற்கரிய சபதம் செய்ததனால் அன்றிலிருந்து அவர் பீஷ்மர் என்று அழைக்கப்படுகிறார்.
சந்தனு சத்யவதியை மணம் செய்துகொள்கிறார். அவர்களுக்கு சித்ராங்கதன், விசித்ரவீர்யன் என்று இரு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. மஹாராசா சந்தனுவுக்குப் பின்பு சித்ராங்கதன் சில காலம் அரசாண்டு, மணம் செய்துகொள்ளாமலேயே இறந்துபோகிறான். விசித்ரவீர்யன் அடுத்து அரசனாகிறான். அம்பா, அம்பிகா, அம்பாலிகா என்ற மூன்று அரச குமாரிகளுக்குச் சுயம்வரம் நடக்கும் இடத்திலிருந்து அவர்களை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்து விசித்ரவீர்யனுக்கு மணம் முடிக்க முற்படுகிறார்.
Image may contain: 2 people
அம்பா விசித்ரவீர்யனை மணக்க விரும்பாமல் நெருப்பில் மூழ்கி இறந்துபோகிறாள். அம்பிகாவையும் அம்பாலிகாவையும் விசித்ரவீர்யன் மணந்துகொண்டாலும் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்னரேயே விசித்ரவீர்யன் இறந்துபோகிறான்.
இப்போது நாட்டை ஆள யாரும் இல்லை. பீஷ்மர் தான் செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக நாட்டை ஆள மறுக்கிறார். சத்யவதி வியாசரை வேண்டிக்கொள்ள, அவரது அருளால், ராணிகள் இருவருக்கும் குழந்தைகள் பிறக்கின்றன. இவர்கள் தான் திருதராஷ்டிரனும் பாண்டுவும். கூடவே அருகில் இருக்கும் வேலைக்காரிக்கும் விதுரன் என்ற குழந்தை பிறக்கிறது.
திருதராஷ்டிரனுக்குக் கண் பார்வை கிடையாது. பாண்டுவுக்கு தோலில் நோய். திருதராஷ்டிரனுக்கு காந்தாரியையும்; பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி என்ற இருவரையும் மணம் செய்து வைக்கிறார் பீஷ்மர்.
திருதராஷ்டிரன்-காந்தாரி தம்பதிக்கு 100 குழந்தைகள் பிறக்கின்றனர். அவர்களின் முதலாமவன் துரியோதனன். இவர்கள் 100 பேரும் கௌரவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். குந்திக்கு மூன்று பையன்கள்: யுதிஷ்டிரன் (தருமர்), பீமன், அர்ஜுனன். மாத்ரிக்கு இரு பையன்கள்: நகுலன், சகாதேவன். இந்த ஐவரும் சேர்ந்து பஞ்ச "பாண்டவர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.
குந்திக்கு துர்வாசர் சில மந்திரங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். அந்த மந்திரங்களை உச்சரித்தால் தேவர்கள் அருளால் அவளுக்குக் குழந்தை பிறக்கும். ஆனால் தனக்குத் திருமணம் ஆகும் முன்னரே அவள் இந்த மந்திரங்களை சூரிய தேவனைப் பார்த்தபடி உச்சரித்து பார்க்கிறாள். அப்போது ஒரு குழந்தை பிறந்துவிடுகிறது. பயந்துபோன குந்தி அந்தக் குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்டுவிடுகிறாள். அந்தக் குழந்தையை ஒரு தேரோட்டி எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தைதான் கர்ணன். குந்தியின் மகனாகப் பிறந்தாலும் கர்ணனுக்கு நெருங்கிய நண்பனாக இருப்பது துரியோதனன் தான்.
கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆரம்பத்திலிருந்தே சண்டை. சிறுவர்களாக இருக்கும் போதே போட்டி நிலவுகிறது. இவர்களுக்கு துரோணர் என்ற குரு கலைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஆரம்ப காலத்தியோ திருதராஷ்டிரன் கண் பார்வைக் குறைபாடு உள்ளவர் என்பதால் பாண்டுவே நாட்டை ஆள்கிறார். ஆனால் காட்டில் இருக்கும்போது பாண்டுவுக்கு மரணம் ஏற்படுகிறது. பாண்டுவுடன் கூடவே மனைவி மாத்ரி உடன்கட்டை ஏறி விட்டாள். அதாவது சிறு வயதிலேயே பாண்டவர்கள் தந்தையை இழந்தவர்கள். அதனால் பொறுமையுடன் இருந்து வந்தனர்.
பாண்டவர்களும் கௌரவர்களும் அரசாளும் வயதை அடையும்போது, பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து தருமருக்கே (யுதிஷ்டிரனுக்கே) முடி சூட்டுகின்றனர். இது கௌரவர்களுக்குக் கடும் கோபத்தை வரவழைக்கிறது. துரியோதனன் அரக்கால் ஆன மாளிகை ஒன்றைக் கட்டி, பாண்டவர்களை விருந்துக்கு அழைத்து, அவர்களை அங்கு தங்கவைக்கிறான். இரவில் மாளிகையை எரித்துவிடுகிறான். ஆனால் துரியோதனைன் சதித் திட்டத்தை பாண்டவர்கள் (இதனை முன்னமேயே) ஊகித்து, தப்பி, காட்டுக்குள் சென்றுவிடுகின்றனர். காட்டில் இருக்கும்போது ஒரு சுயம்வரத்தில் அர்ஜுனன் திரௌபதியை வெல்கிறான். தாய் குந்தியின் ஆணைப்படி பாண்டவர்கள் ஐந்துபேரும் திரௌபதியை மணக்கின்றனர்.
பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்கு வந்து தங்களுக்கான நிலத்தைப் பங்குபோடுமாறு கேட்கின்றனர். அவர்களுக்குக் கிடைத்த காண்டவ வனம் என்ற பகுதியை அழித்து இந்திரப்பிரஸ்தம் என்ற நாடாக மாற்றுகின்றனர். அவர்களது அழகான நாட்டைப் பார்த்து ஆசைப்படும் துரியோதனனுக்கு அவன் மாமா சகுனி உதவி செய்ய வருகிறார்.
சூதாட்ட விருந்து ஒன்றை துரியோதனன் ஏற்படுத்தி, (தருமரை) யுதிஷ்டிரனை அதில் கலந்து கொள்ள அழைக்கிறான். சூதாட்டத்தில் யுதிஷ்டிரன் (தருமர்) வரிசையாகத் தோற்று தன் நாடு, சொத்து அனைத்தையும் இழக்கிறான். அத்துடன் நில்லாமல், தன் தம்பிகள், தான், தன் மனைவி திரௌபதி என அனைத்தையும் இழக்கிறான். முடிவில் பெரியவர்கள் தலைப்பட்டு அடிமை நிலையை மாற்றி, பாண்டவர்கள் 12 ஆண்டுகள் காட்டிலும், ஓராண்டு யாராலும் கண்டுபிடிக்கமுடியாமலும் நாட்டிலும் இருக்கவேண்டும் என்று சொல்கின்றனர்.
இந்தக் காலம் முடிவுற்றதும் பாண்டவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவந்து; தங்கள் சொத்துகளைத் திரும்பக் கேட்கின்றனர். கிருஷ்ணர் பாண்டவர்கள் தரப்பில் தூது செல்கிறார். ஆனால் துரியோதனன் ஊசி முனை அளவு நிலம் கூடத் தரமாட்டேன் என்று சொல்லிவிடுகிறான். இதன் விளைவாக மகாபாரதப் போர் குருட்சேத்திரத்தில் நடைபெறுகிறது.
போரில் பாண்டவர்கள் வெல்கின்றனர். ஆனால் பேரழிவு ஏற்படுகிறது. இரு தரப்பிலும் கடுமையான உயிர்ச் சேதம். பீஷ்மர், துரோணர் முதற்கொண்டு அனைவரும் கொல்லப்படுகின்றனர். கௌரவர்கள் அத்தனை பேரும் கொல்லப்படுகின்றனர். கர்ணனும் கொல்லப்படுகிறான். பாண்டவர்கள் ஐவரும் பிழைத்திருந்தாலும் அவர்களுடைய பிள்ளைகள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். இறுதியில் கிருஷ்ணன் அருளால் அர்ஜுனனின் மருமகள் உத்தரையின் வயிற்றில் இருக்கும் கரு ஒன்று மட்டும் உயிர் பிழைக்கிறது. அதுவே அபிமன்யுவின் மகன் பரிக்ஷித்.
பரீட்சித்து வளர்ந்து பெரியவன் ஆனதும் அவனுக்குப் பட்டம் கட்டிவிட்டு, பாண்டவர்கள் அனைவரும் இமய மலைக்குச் சென்று உயிர் நீர்த்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...