Thursday, March 29, 2018

தேவை, காவிரி மேலாண்மை வாரியம்.

‘நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலைகெட்ட அரசுகளை நினைந்துவிட்டால்...’ என்று நிச்சயமாகப் பாடியிருப்பான் பாரதி, இன்று இருந்திருந்தால்!
எத்தனை எத்தனை ஆண்டுகள், எத்தனை எத்தனை ஆட்சிகள், எத்தனை எத்தனை தீர்ப்புகள்... இன்னும் விடியவில்லை, தீர்வு கிட்டவில்லை காவிரிப் பிரச்னைக்கு. காங்கிரஸ், பி.ஜே.பி என்று அத்தனை அரசுகளுமே சுயநலப்போக்கோடு காவிரி விஷயத்தில் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதைப் பார்க்கும்போது, வேறென்ன சொல்ல முடியும்?
‘எல்லாம் முடிந்தது... இனி காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) அமைக்கவேண்டியது மட்டுமே பாக்கி’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட நேரத்தில், ‘இனிமேல்தான் ஆரம்பமே’ என்பதுபோல கர்நாடக மாநில காங்கிரஸ் அரசும், மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை வைத்து விபரீத விளையாட்டை ஆரம்பித்துவிட்டன. தமிழக விவசாயிகளை ஏமாற்றும் நோக்கத்தோடு, காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்குப் பதிலாக, ‘காவிரி மேற்பார்வைக் குழு’ என்ற ஒன்றை மத்திய அரசு அமைக்கவிருப்பதாகச் செய்திகள் கசியவிடப்படுகின்றன.
‘காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் உள்ள அத்தனை ஷரத்துகளும் சரியானவையே’ என்று குறிப்பிட்டதோடு, ‘நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பின்படி நதிநீர்ப் பங்கீட்டைக் கண்காணிக்க, உரியதொரு திட்டத்தை (Scheme) ஆறு வார காலத்துக்குள் உருவாக்க வேண்டும்’ என்றும் இறுதித் தீர்ப்பில் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
ஆனால், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. ‘ஒரு திட்டம்’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது’ என்று, சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தால் கூட்டப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் கூட்டத்தில், தன் பித்தலாட்ட வாதத்தை ஆரம்பித்தது கர்நாடகா. ஏற்கெனவே பேசி வைத்ததுபோல, ‘ஆமாம்... ஆமாம்... காவிரி மேலாண்மை வாரியம் பற்றி உச்ச நீதிமன்றம் சொல்லவே இல்லை’ என்று தன் பங்குக்கு மண்ணை அள்ளிப்போட்டார் மத்திய நீர்ப்பாசனத் துறைச் செயலாளர்.
மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசுக்கு உண்மையிலேயே அந்த உத்தரவு புரியவில்லை என்றால், ‘தீர்ப்பைத் தெளிவுபடுத்துங்கள்’ என்று உச்ச நீதிமன்றத்திடமே ஓடியிருக்கலாமே.
நடுநிலையோடு மத்திய அரசை நடத்திச் செல்லும் கட்சியாக இருந்திருந்தால், அதை இந்நேரம் செய்துமுடித்திருக்கும் பி.ஜே.பி அரசு. ஆனால், ‘காங்கிரஸ் போலவே நாங்களும் தேர்தல் அரசியலுக்குச் சளைத்தவர்கள் இல்லை... ஓட்டுவங்கிதான் எங்களுக்கும் பிரதானம்’ என, எதிர்வரும் கர்நாடகத் தேர்தலை மனதில் கொண்டு, தானும் தந்திர அரசியல் செய்கிறது பி.ஜே.பி.
ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டிய இந்தத் திரிபுவாதத்தை, தமிழக அரசு சரியான நேரத்தில் உடைக்காமல்போனதால்... கர்நாடகாவும், மத்திய அரசும் அதே பொய்யைத் திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லவே இல்லை’ என்று நாடாளுமன்றத்திலேயே பதிவு செய்திருக்கிறார் மத்திய நீர்வள ஆதாரத் துறை இணையமைச்சர்.
‘மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யின் அடிமை அரசுதான் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க அரசு’ என்று தொடர்ந்து பல்வேறு கட்சிகளாலும் அமைப்புகளாலும் முன்வைக்கப்படும் விமர்சனத்தை உறுதிப்படுத்துவதுபோல, காவிரிப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தைச் சுற்றிச் சுற்றித் தினமும் கோஷங்களை மட்டுமே எழுப்பிக்கொண்டிருக்கின்றனர் அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
‘உச்ச நீதிமன்றத்தின் கெடு தேதி மார்ச் 29. அதுவரை பொறுமை காப்போம்’ என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மீண்டும் மீண்டும் வெற்று ஆறுதல் வார்த்தைகளைக் கூறிக்கொண்டிருக்கின்றனர். இந்த பயந்தாங்கொள்ளி அரசைப் பணியவைக்கும் வகையில் கடுமையான போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டிய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, வாய்ச்சவடால் விடுவதிலேயே காலத்தைக் கழித்துக்கொண்டிருக்கின்றன.
‘இந்திரா காந்தியின் பேச்சைக் கேட்டு, அன்றைக்கு முதல்வராக இருந்த கருணாநிதி, காவிரி தொடர்பான வழக்கை வாபஸ் பெற்றதுதான் இத்தனை பிரச்னைக்கும் முக்கியக் காரணம்’ என்று வரலாற்றுப் பிழையாக இன்று வரை எந்தச் செயல் எடுத்துரைக்கப்படுகிறதோ, அதே போன்ற மோசமானதொரு செயலை நிகழ்த்திய அரசு என்கிற அவப்பெயரை அ.தி.மு.க-வுக்குப் பெற்றுத் தந்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதும் வரலாற்றுக்கறையாகப் பதிவாகப் போகிறது.
நடுவர்மன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டால், அது ஒட்டுமொத்தமாக காவிரி நதி மற்றும் அதன் மீதிருக்கும் அணைக்கட்டுகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு நதிநீரைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரமிக்க, தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்கும். ஆனால், மத்திய அரசு உருவாக்க நினைக்கும் மேற்பார்வைக் குழு என்பது வெறுமனே மேற்பார்வையிடும் பொம்மை அமைப்பாகவே இருக்கும். அதாவது, பல்லும் நகமும் இல்லாத ஓர் அமைப்பாகவே இருக்கும். இதுபோன்றதொரு அமைப்பு முன்பே ஏற்படுத்தப்பட்டு, ஒரு துரும்பைக் கிள்ளிப்போடக்கூட அதிகாரம் இல்லாத அமைப்பாகச் செயலற்று இருந்தது என்பதுதான் சோக வரலாறு.
உச்ச நீதிமன்றத்தின் கெடு தேதி... மார்ச் 29. ‘மேலாண்மை வாரியமா... மேற்பார்வைக்குழுவா என்று விளையாட்டு காட்ட இது வார்த்தைப் பிரச்னை இல்லை, எங்கள் வாழ்க்கைப் பிரச்னை’ என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், ‘எங்களுக்குத் தேவை காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) மட்டுமே’ என்று தமிழகமே ஒருங்கிணைந்து ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய நேரமிது!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...