Sunday, November 11, 2018

சீதைமார்க் சீயக்காய்த்தூள்'...

'சுந்தர ராமசாமி'-யின் சீதைமார்க் சீயக்காய்த்தூள்' மிக முக்கியமான கதையாகப் பட்டது. ஒரு கலைஞனின் கம்பீரத்தை, பணத்துக்கு அடிபணியாத கலைமேதைமையைக் கொண்டாடிய கதை அது.
நூறு ரூபாய் முன்பணமும் கொடுத்துவிட்டுச் சென்றார் குமாரவேலு பணிக்கர். ஒரு மாத காலத்தில் படத்தை முடித்துத் தந்துவிட வேண்டும் என்பது பேச்சு. சுப்பையா ஆசாரி ஒப்புக்கொண்டார்.
சரியான `சான்ஸ்’ அடித்துவிட்டது. சீதையின் முழு உருவப்படம் ஐந்நூறு ரூபாய். முன்பணம் ரூபாய் நூறு வேறு. திருப்தியாக இருந்தால் மேலும் ஒரேயடியாக இருபது படத்துக்கு ஆர்டர்… அது சீதை மார்க் சீயக்காய்த்தூளுக்கான விளம்பரப் படம். சாமக்கிரியைகளைக் கையெடுத்து வணங்கிவிட்டு வேலையை ஆரம்பித்தார் சுப்பையா ஆசாரி.
அவர் மனதிலேயே இருக்கிறாளே சீதை. பர்ணசாலையின் முன்னால் காலை மணி போட்டு, இடதுகையைத் தரையில் ஊன்றியபடி அமர்ந்திருக்கிறாள். உடம்பெல்லாம் அழகு, உடம்பெல்லாம் சோகம். ஒரு கட்டுத்தலை தோள் வழியாய் ஆலம் விழுது மாதிரி சரசரவெனக் கீழிறங்கி, பாம்புப் பத்தி போன்ற நுனி மயிர் புழுதியில் புரள்கிறது.
பென்சிலால் லேசாகக் கோடு போட ஆரம்பித்தார். போன பொழுது அவருக்குத் தெரியாது. இருட்டிவிட்டது. அவர் அதை உணரவே இல்லை. அவர்தான் விளக்குப்போட்டார். அதுவும் அவருக்குத் தெரியாது.
``இருந்தாலும் இப்படியும் ஒரு அப்பன் உண்டுமா உலகத்திலே? கண்டதும் இல்லை, கேட்டதும் இல்லை” என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள் சுப்பம்மாள்.
அந்த வீட்டில் அவர்கள்தான் கணவனும் மனைவியும். அவர்கள்தான் குழந்தைகள். ஒருமாத காலம் படமே கதி எனக் கிடக்கிறார் சுப்பையா ஆசாரி. மனைவியைக்கூட இடையில் உள்ளே வர அனுமதிக்கவில்லை, முழுப் படத்தையும் வரைந்து முடித்த பிறகுதான் காட்டவேண்டும் என்று. ஒரு மாதமும் கடின உழைப்புத்தான். அந்தரங்கச் சுத்தியோடு வேலையில் முனைந்திருந்தார் அவர். மனதில் இருக்கும் உருவத்தை வர்ணத்துக்குள் அடக்கிவிட வேண்டும் என்ற வேட்கையில் சன்னம் சன்னமாக வேலைசெய்தார்.
படவேலை முடிந்ததும் அவரே அவளைப் பார்க்க அழைக்கிறார். சுப்பம்மாள் படத்தைப் பார்த்தாள் பார்த்துக்கொண்டே இருந்த அவள் முகத்தில் ஒரே பரவச உணர்ச்சி.
``எப்படி இருக்குது?” என்று கேட்டார் அவர். சுப்பம்மாள் பதில் சொல்லவில்லை. அவர் பக்கம் நெருங்கி ``உங்க வலதுகையைக் காட்டுங்களேன் பாப்பம்” என்றாள்.
வலதுகையை அவள் முன்னால் விரித்தார். விரல்களைத் தொட்டபடியே ``இந்த விரலுக்குள் இருந்தா இந்தப் படம் வந்தது? இந்த விரலுக்கு என்ன விசேஷம்? நீளம் நீளமா இருக்குது. ஆயிரம் பேருக்கு இப்படி இருக்குதே” என்றாள் அவள்.
``விரலுக்குள்ளிருந்து அது வரலை. மனசுக்குள்ளிருந்து வந்தது” என்றார் அவர். ஆனால், சீயக்காய் கம்பெனி முதலாளிக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை.
``நான் சொல்றேனேன்னு வித்தியாசமா எடுத்துக்கிடப்படாது. படத்தைக் கொஞ்சம் `ரிப்பேர்’ பண்ணணும்.”
``ரிப்பேரா?”
``ஆமாம். லேசா ரிப்பேர் பண்ணணும். அப்படியே மேலாகக் கொஞ்சம் சாயத்தைப் பூசி கொஞ்சம் வாளிப்பா பண்ணுங்க.”
``வாளிப்பா?”
ஆமாம். கொஞ்சம் மதமதன்னு இருக்க வேண்டாம் சீதெ?”
``இப்பம் அதுக்கு என்ன அவசரமாம்? ராமரைப் பார்த்ததும் தனியா மதமதன்னு ஆயுட்டுப்போறா.”
``நீர் ராமாயணத்துக்குள்ளேயே நின்னு பேசுதீரு. இந்த உலகத்துக்குக் கொஞ்சம் வாரும். இது விளம்பரத்துக்காக வைக்கப்போற படம். கொஞ்சம் `அட்ராக்‌ஷனா’ இருக்க வேண்டாமா? ராமனைவிட்டுப் பிரிந்திருக்கும் சீதையை வாளிப்பாக வரைந்து தர முடியாது'' என்று அந்தக் கலைஞன் உறுதியாக மறுக்கிறான்.
இந்தக் கதையில் அந்தக் கலைஞனின் கர்வம் பல இளைஞர்களை அன்று ஈர்த்தது. அநேகமாக சுந்தர ராமசாமி அவர்களின் கலைப்பயணத்தில் இந்தக் கதையிலிருந்து ஒரு திசை மாற்றம் நடந்ததாகக்கொள்ளலாம்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...