Friday, November 16, 2018

ஓம் சண்முகா கணபதியே போற்றி.

வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.
சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது. மகாபாரத காவியத்தில் வரும் பிதாமகர் பீஷ்மரின், துன்பம் நீங்க வழி காட்டிய பெருமை இதற்கு உண்டு. தான் விரும்பியபோது இறக்கும் வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தாலும் துரியோதனனின் பாவச்செயலை தடுக்க முடியாமல், அமைதியாக இருந்த காரணத்தால், வரமே சாபமாக மாறும் தன்மை பெற்று விட்டது.
அம்பு படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் தந்தையிடம் ஆலோசித்து, அவரது உடலை எரிக்க சூரியனின் உதவியை கேட்கச் சொல்கிறார். அவ்வாறு செய்வது சாத்தியமில்லை என்ற நிலையில், சூரியனது ஆற்றலை தனக்குள் முழுவதுமாக ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கன்செடி இலையை கொண்டு அவரது உடலை தகிக்க வைக்கலாம் என்று வழி காட்டப்படுகிறது. உத்தராயண காலம் வரும் வரை காயத்துடன் போராடி சூரியனுக்கு உரிய ரதசப்தமி நாளில் உயிர் நீத்தார் பிஷ்மர்.
ஏழாவது நாளான சப்தமி திதி, ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் போன்றவை சூரியனுக்கு உரியது. அதுபோல ஏழு வித நரம்பு களால் ஆனது வெள்ளெருக்கு ஆகும். ஒவ்வொரு நாளும் சூரிய பகவான், வெள்ளெருக்கு விநாயகரை வணங்கி, தமது பணியை தொடங்குவதால் சூரியனார் கோவிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. ரத சப்தமி நாளன்று சூரியனின் தலையில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளை வைத்து, அவற்றில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்கள் ஆகியவற்றை வைத்து, அவரது பூவுலக கடமைகளை ஆற்றி வரும்படி ஈஸ்வரனால் அனுக்கிரகம் செய்யப்பட்டது. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கால் செய்யப்பட்ட விநாயகரை பூஜிப்பது சிறப்பாகும்.
சூரியன் உதிக்கும் சமயத்தில் குளித்து முடித்து, தனது அன்றாட கடமைகளை செய்ய தொடங்கு பவரிடம் செல்வம் சேரும் என்பது சாஸ்திரம். ரத சப்தமி எனப்படும் ‘சூரிய ஜெயந்தி’ சொல்லும் தாத்பரியமும் அதுதான். அந்த நாளில் தொடங்கும் தொழில், பணிகள் ஆகியவை சிறப்பாக விருத்தி அடைவதாகவும் ஐதீகம். அன்று செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். அந்த நாளில் ஆரம்பித்து தினமும் சூரியோதய நேரத்தில் குளிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு, செல்வ வளம் ஏற்படும் என்பது உறுதியாகும். ஆன்மிக பயிற்சிகள் தொடங்கவும், ரதசப்தமி உகந்த நாளாகும்.
பொதுவாக எருக்கன் செடிகளில், நீல எருக்கு, ராம எருக்கு உள்ளிட்ட ஒன்பது வகைகள் இருப்பதாக சித்த வைத்தியர்கள் கூறுகிறார்கள். 12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
சரியான முறைகளில் தயாரிக்கப்பட்ட வெள்ளெருக்கு விநாயகர் சிலைகள், பிள்ளையார்பட்டி மற்றும் ஆடுதுறை சூரியனார் கோவில் ஆகிய இடங்களில் கிடைப்பதாக செய்தி உண்டு. அவ்வாறு வெள்ளெருக்கு பிள்ளையார் கிடைக்காவிட்டால், நம்பிக்கைக்குரிய சித்த வைத்தியர் மூலம், வெள்ளெருக்கு செடியை அடையாளம் கண்டு, அதன் வேரை எடுத்து விநாயகர் செய்து கொள்ளலாம்.
பின்னர் வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், அரைத்த மஞ்சள் கலவையை அதன் மேலாக பூசி வைக்க வேண்டும். அதற்கு அடுத்த வாரம் வரும் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் உள்ள ராகு காலத்தில், சந்தன கலவையை அதன்மேல் தடவி, நிழலில் காய வைக்க வேண்டும். அதன் பிறகுதான் நன்மை செய்யும் கதிர் வீச்சுகள் அதிலிருந்து வெளிப்படும். பின்னர் அவரவருக்கு இஷ்டப்பட்ட பூஜைகளை செய்யலாம். வெள்ளெருக்கு பட்டை மூலம் செய்யப்பட்ட திரியை, விளக்கில் இட்டு தீபம் ஏற்றினால் சகலவித எதிர்மறைகளும் விலகி விடுவதாக ஐதீகம்.
இறைவன் உறையும் திருமேனிகளான சிலைகளுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும் மலர்கள் பற்றி, ஆகமங்களும், ‘புஷ்ப விதி’ என்ற நூலும் பல விதிகளை குறிப்பிடுகின்றன. தோஷங் களற்ற, பூச்சி அரிக்காத, பறவை எச்சம் படாமல், விடியற்காலை நேரத்தில் பறிக்கப்பட்ட மலர்களால் இறைவனுக்கு பூஜை செய்வது விசேஷமாக சொல்லப்பட்டுள்ளது. ‘நன் மாமலர்’ என்று ஞான சம்பந்தர் குறிப்பிடும் அத்தகைய அஷ்ட புஷ்பங்களில் ஒன்றாக வெள்ளெருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புன்னை, சண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை என்பவை அஷ்ட புஷ்பங்கள் ஆகும். சிவபெருமானின் ஜடாமுடியில் வெள்ளெருக்கு அலங்கரிப்பதை, ‘வெள்ளெருக்கு அரவம் விரவும் சடை..’ என்று அப்பர் குறிப்பிடுவார். சிறு செடியாக இருந்து, குறுவகை மரமாக வளரும் தன்மை பெற்றது வெள்ளெருக்கு. தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் தாமாகவே வளரக்கூடிய வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
சென்னைக்கு பக்கத்தில் ஓரகடம் என்னும் ஊரில், வெள்ளெருக்கு விநாயகர் கோவில் இருக்கிறது. பொதுவாக கோவில் களில் உள்ள நந்தவனங்களில் வெள்ளெருக்கன் செடிகள் வளர்க்கப்படுவது வழக்கம். வீட்டில் இருக்கும் வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் அவசியம் இல்லை. எருக்கம்பூ, அருகம்புல், வன்னி இலை ஆகியவற்றை சூட்டுவதோடு, அத்தர், ஜவ்வாது, புணுகு போன்ற வாசனைப் பொருட்களை பூசி வழிபட்டால், வீட்டில் மகிழ்ச்சியும், மன அமைதியும் உண்டாகும்.
சிவபெருமானுக்கு விருப்பமானது எருக்கம்பூ என்று நாயன்மார்கள் சிலர் போற்றியிருக்கிறார்கள். மேலும் அது தேவ மூலிகை என்றும் சொல்லப்படுகிறது. பூமிக்கு அடியில் அரிதான பொருட்கள் அல்லது புதையல் இருக்கும் இடத்தில் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்படுவது சுவாரசியமான செய்தியாகும். ‘வேதாளம் பாயுமே வெள்ளருக்கு பூக்குமே..’ என்ற பாடல் வரிகள் சங்க காலத்தில் பிர பலம்.
பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும். சுமாராக ஆறு ஆண்டுகள் வளர்ந்த பிறகே, வெள்ளெருக்குச் செடியானது சிலை செய்வதற்கு உகந்ததாக மாறுகிறது.
அதுவும் செடியின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை பயன்படுத்துவது வழக்கம். அதற்கு முன்னதாக வெள்ளெருக்கன் செடிக்கு ஆகம முறைப்படி ஒரு மண்டல காலம் பூஜைகள் செய்வது ஐதீகம். தீய சக்திகள் இருக்கும் வாய்ப்பு உள்ள இடத்தில் வெள்ளெருக்கு செடி வளர்ந்திருந்தால், அதன் வேரானது விநாயகர் சிலை உருவாக்க பயன்படாது.
வெள்ளெருக்கு வேரை எடுப்பதற்கு முன்னர் வேப்பிலை, கூழாங்கல், மா இலை, வில்வ இலை ஆகியவற்றை மாலை போல் கோர்த்து, அந்த வெள்ளெருக்கு செடியை சுற்றி காப்பு கட்டப்படும். பிறகு, ஒருவாரம் கழித்த பின்னர் வெள்ளெருக்கு வேரை எடுத்து, தக்க முறையில் பதப்படுத்தி, விநாயகர் வடிவத்தை செய்ய பயன்படுத்தலாம். வெள்ளெருக்கன் செடியானது அதீதமான உயிர் சக்தி கொண்டதாக உள்ளது. எனவே அதனை பார்த்த உடனே வேரை வெட்டி எடுத்து விடாமல், மேற்கண்ட பரிகார முறைகளை கடைப்பிடிப்பது சிறப்பான பலன்களுக்கு வழிவகுக்கும்.
விநாயகர் வழிபாட்டு முறைகள்
பிள்ளையார் வழிபாடு மிகவும் எளிமையானது. கல், மண், மரம், செம்பு முதலியவற்றால் இறைவனின் திருவுருவங்களைச் செய்ய வேண்டும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஆனால், மண், பசுஞ்சாணம், மஞ்சள், மரக்கல், கருங்கல், பளிங்குக்கல், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள், முத்து, பவளம் போன்ற ரத்தினங்கள், தந்தம், வெள்ளெருக்கு வேர், அத்திமரம், பசு வெண்ணெய், அரைத்த சந்தனம், வெண்ணீறு, சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றால் விநாயகர் வடிவத்தை அமைக்கலாம். இதனைத் தான் பிடித்து வைத்தால் பிள்ளையார் என்று வேடிக்கைப் பழமொழியாக நாட்டுப்புறத்தில் சொல்லுவர். புற்றுமண், அரைத்தமாவு, சாளக்கிராமம்(நர்மதை நதிக்கல்) ஆகியவற்றை ஒரு கைப்பிடி பிடித்தாலே அது பிள்ளையாராகி விடும் என்பதால் இவ்வாறு கூறினர். கும்பத்திலும், கூர்ச்சத்திலும், ஓமாக்கினியிலும் விநாயகப்பெருமானை ஆவாஹனம் செய்து வழிபடுவர். விநாயகப்பெருமானை மிக எளிமையாக வடிவமைத்துவிடலாம்.
பிள்ளையார் பற்றிய நாட்டுப்புறப்பாடல்
பிள்ளையார் பற்றி அந்தக்காலத்தில் தாத்தாக்களும், பாட்டிகளும் பேரன் பேத்திகளுக்கு பாட்டுகளின் மூலம் அவரது பெருமையை எடுத்து விளக்குவார்கள். கேட்பதற்கு இவை
நாட்டுப்புறப்பாடல்கள் போல இனிமையாக இருக்கும்.
குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை
வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.
இந்தப்பாடல்களை முதியவர்கள் தங்கள் பொக்கை வாயால் பாடும் போது கேட்பதற்கு இனிமையாக இருக்கும். குழந்தைகளுக்கு பாடல்கள் மூலம் பக்தியை உணர்த்துவது மிகவும் எளிமையானது என்பதால் இந்த பாடல்கள் அந்தகாலத்தில் குழந்தைகளுக்கு சொல்லித்தரப்பட்டன.
விநாயகர் அகவல் பற்றி காஞ்சிப் பெரியவர் கருத்து
மற்ற கிழமைகளில் மறந்து விட்டாலும் விநாயகரை வெள்ளிக்கிழமை மற்றும் சதுர்த்தி திதிகளில் மறக்காமல் வணங்க வேண்டும். அவ்வாறு, விநாயகரை வணங்கும்போது உங்கள் நினைவிற்கு வரவேண்டிய இன்னொருவர் அவ்வையார். அவர் சீதக்களப செந்தாமரைப்பூம் என்று துவங்கும் விநாயகர் அகவல் என்னும் பாமாலையை எழுதியவர். இதை சதுர்த்தியன்று பாடினால், நீங்கள் பிள்ளையாரிடம் ஏதாவது வேண்டினால், அவர் இரட்டிப்பாகத் தருவார். விநாயகர் அகவல் படிப்பது வீட்டுக்கும், நாட்டுக்கு மட்டுமல்ல, உலகுக்கே நல்லது. காஞ்சிப்பெரியவர் இது பற்றி கூறும்போது, நமக்கும், நாட்டுக்கும், உ<லகத்துக்கும் நன்மை உண்டாவதற்கு அவ்வையார் மூலம் பிள்ளையாரைப் பிடிப்பதே வழி, என்கிறார்.
வாழ்வை வளமாக்கும் விநாயகர் நிவேதனம்
விநாயகருக்கு மோதகம், கரும்பு, அவல், பொரி ஆகியவற்றைப் படைக்க வேண்டும். இந்த நிவேதனப்பொருட்களுக்குள் பெரும் தத்துவம் அடங்கிக் கிடக்கிறது. அது என்ன என்பதைத் தெரிந்து படைத்தால் வாழ்க்கையே வளமாகும். மோதகம்: இதன் வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத இறைவனை அடையலாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் படைக்கப்படுகிறது.
கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் என்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது. அவல், பொரி: ஊதினாலே பறக்கக்கூடியவை இப்பொருள்கள். வாழ்க்கையில் நாம் சந்
திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
சதுர்த்தி வழிபாடு
நாயகர் சதுர்த்தியன்று விநாயகர் அகவல், விநாயகர் கவசம், காரிய சித்திமாலை பாடல்களைப் பாடி அவரை வழிபடலாம். இதில் எடுத்த செயல் வெற்றி பெறச் செய்யும் தனிச்சிறப்புடைய காரிய சித்திமாலையின் விளக்கம் தரப்பட்டுள்ளது. கேட்ட வரம் தரும் தனிச்சிறப்புடைய இத்துதியை விநாயகர் முன்பு அமர்ந்து உள்ளம் ஒன்றிப் பாராயணம் செய்பவர்களின் மனவிருப்பம் எளிதில் நிறைவேறும். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) உரைப்பவர்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். அனைத்து வகைகளிலும் வெற்றி உண்டாகும். எட்டு நாட்கள் ஓதிவர மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சங்கடஹர சதுர்த்தி திதிகளில் (தேய்பிறை சதுர்த்தி) எட்டுமுறை ஓதினால் அஷ்டமாசித்தி கைகூடும். தினமும் 21 முறை இப்பாடலைப் பாராயணம் செய்வோரின் சந்ததி கல்வியிலும், செல்வத்திலும் மேம்பட்டுத் திகழும் என்பது ஐதீகம். கபிலநாயனார் இத்தகவலை எழுதியுள்ளார்.
* உயிர்களை இயல்பாகப் பற்றி இருக்கும் பந்த பாசங்களை நீக்கும் இயல்புடையவரும், அனைத்து உயிர்களையும் தம்மிடம் இருந்து தோற்றுவிப்பவரும், வேதங்களையும்,
ஆகமங்களையும் வெளிப்படுத்தி அருள்செய்தவருமாகிய விநாயகப்பெருமானின் திருவடிகளை அன்புடன் போற்றுகின்றோம்.
* கண்களால் காணப்பெறும் உலகமுழுவதும் நீக்கமற நிறைந்திருப்பவரும், விருப்பு வெறுப்பு இல்லாதவரும், நாம் செய்கின்ற செயல்களின் பலனை நமக்குத் தருபவரும், களைபவருமான முழுமுதற்பொருளான கணபதியை உவந்து சரணடைந்து போற்றுகின்றோம்.
* தீயில் விழுந்த பஞ்சுபோல இடர்களை முழுவதும்நீக்குபவரும், தன்னை அன்புடன் தொடரும் உயிர்கள் அனைத்தையும் நற்கதிக்கு இட்டுச் செல்பவரும், எடுத்த செயல்களை எளிதாகவும், இனிதாகவும் நிறைவு செய்து அருள்பவரும் ஆன ஒற்றைக்கொம்பன் விநாயகரின் திருவடிகளைச் சரணமாகப் பற்றுகின்றோம்.
* திருத்தலங்கள் தோறும் கோயில் கொண்டிருப்பவரும், கங்கை முதலான தீர்த்தங்களாகத் திகழ்பவரும், உயிர்களின் அறியாமையை அகற்றி அறிவினைத் தருபவரும், கருணை நிறைந்தவருமாகிய கணபதியின் திறத்தினைப் புகழ்ந்து பாடி திருவடிகளைச் சரண் அடைகிறோம்.
* உயிர்கள் செய்யும் வினையின் முதலாகவும், செய்யப்படும் பொருளாகவும், செய்வினையின் பயனாகவும், அந்த பயன் விளைவிக்கும் விளைவைப் பயன்பெறச் செய்பவனும் திகழ்கின்ற மெய்ப்பொருளான கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று அடைக்கலம் புகுகின்றோம்.
* வேதங் களாலும் அறியமுடியாதவரும், வேதத்தின் முடிவாகத் திகழ்பவரும், எங்கும் பரந்து விளங்கும் பரமானந்த வடிவாக வீற்றிருப்பவரும், எண்குணங்களை உடையவரும் ஆகிய கணபதியின் திருவடிகளைச் சரணம் என்று பற்றுகின்றோம்.
* நிலத்தில் ஐந்து குணங்களாகவும், நீரில் நான்கு குண்ங்களாகவும், தீயில் மூன்று குணங்களாகவும், காற்றில் இரண்டு தன்மையுடையவனாகவும், வானில் ஒன்றாகவும் திகழும் அண்ணல் கணபதியின் அன்புத்திருவடிகளை அடைக்லமாகப் புகுகின்றோம்.
* யாராலும் அறிந்து கொள்ளமுடியாத பரம்பொருளாகவும், எல்லாவற்றையும் அறியச் செய்யும் இறைவனாகவும், ஞானஅருள் வழங்கும் தலைவனாகவும் திகழும் கணபதியே! உன்னைச் சரண் அடைந்து போற்றுகின்றோம்.
விநாயகருக்கு உகந்த கிழமை
இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அவர்கள் கணேஷ் சதுர்த்தி என்று சிறப்பான அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவ்விழாவைக் கொண்டாடுவர். பத்து நாட்களுக்கும் மேலாக பக்திப்பரவசத்தில் இம்மாநிலமே மிதக்கும். விநாயகர் இம்மக்களுக்கு குலதெய்வமாகவும், வெற்றிதரும் கடவுளாகவும் போற்றப்படுகிறார். இங்கு திரும்பிய இடமெல்லாம் இவருக்கான கோயிலும் வழிபாடும் நிகழ்வதைக் காண முடியும். மங்கல்வார் என்னும் செவ்வாய்க்கிழமை உகந்தநாளாக எண்ணி ஆலய தரிசனம் செய்ய திரளாக விநாயகர் கோயிலுக்குச் செல்வார்கள். கொழுக்கட்டை, மோதகம் போன்ற பாரம்பரிய பிரசாத வகைகளோடு, வடநாட்டுக்கே உரிய பர்பி, லட்டு, பால்பேடா போன்றவற்றையும் நிவேதனமாகப் படைப்பர். கடைசிநாளில் கணபதி பப்பா மோரியா என்னும் கோஷம் எழுப்பி வழியனுப்புவது உள்ளத்தை உருகச் செய்வதாகும். மங்களம் தரும் விநாயகப்பெருமானே! இன்று சென்று வரும் ஆண்டில் திரும்பி வருக என்பதே இதன் பொருள்.
விநாயகருக்குரிய 11 விரதங்கள்
1.வெள்ளிக்கிழமை விரதம்
2. செவ்வாய்க்கிழமை விரதம்
3. சதுர்த்தி விரதம்
4. குமார சஷ்டி விரதம்
5. தூர்வா கணபதி விரதம்
6. சித்தி விநாயகர் விரதம்
7.துர்வாஷ்டமி விரதம்
8. நவராத்திரி விரதம்
9.வெள்ளிப்பிள்ளையார் விரதம்
10. செவ்வாய்ப்பிள்ளையார் விரதம்
11. சங்கட ஹர சதுர்த்தி விரதம்
இவ்விரதங்களில் ஆவணி மாதத்தில் வரும் சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானதாகும்.
விநாயகர் துதி மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏகதந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
அண்ணனுக்கும் தம்பிக்கும் ஆறெழுத்து மந்திரம் முருகப்பெருமானுக்கு சரவணபவ என்ற ஆறெழுத்து மந்திரம் போல, விநாயகப்பெருமானுக்கும் ஆறெழுத்து மந்திரம் உண்டு. ஓம் வக்ர துண்டாய ஹும் என்பதே அது. இதனை ஓதி வந்தால் பகைத்துன்பம் நீங்கும். முருகப் பெருமான் இந்த மந்திரத்தை ஓதியே தாராகாசுரனை வதம் செய்தார். வாமன அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு தன் தந்தை காஷ்யபரிடம் இம்மந்திரத்தை உபதேசம் பெற்று, மகாபலிச் சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கினார். பரசுராமர் விநாயகரின் இம்மந்திரத்தை உச்சரித்தே 21 தலைமுறை அரசர்களை அழித்தார். இந்திரன் கவுதமரின் சாபத்தால் உண்டான ஆயிரங்கண்களை இம்மந்திரத்தை ஜெபித்தே நீங்கப்பெற்றார்.
வழிபாட்டுக்குரிய விநாயகர் வடிவங்கள்
கருங்கல், பொன், வெள்ளி, செம்பு, பளிங்கு, மரம், சுதை, வெள்ளெருக்கு வேர் முதலியவைகளால் விநாயகரின் திருமேனியை வடித்து வழிபாடு செய்யலாம். இவற்றில் சுதை மற்றும் மரத்தாலான வடிவங்களுக்கு அபிஷேகம் செய்ய முடியாது என்பதால், மலர் அலங்காரம் மட்டும் செய்து கொள்ளலாம். மஞ்சள், சந்தனம் முதலியவற்றால் செய்த திருமேனிகளை பூஜித்தபின் தூய்மையான நீரில் கரைத்துவிட வேண்டும். பெரும்பாலும் விநாயகர் சதுர்த்திநாளில் வழிபாட்டிற்கு மண்ணால் அமைத்த விநாயகரையே வழிபாடு செய்ய வேண்டும். பூஜித்த பின் இவ்விநாயகரை ஆறு, குளம், ஏரிகளில் கரைத்துவிடலாம். மண்ணில் பிறக்கும் நீ இந்த மண்ணுக்கே சொந்தமாவாய் என்பது இதன் தாத்பர்யம்.
ஐந்து சுவாமி பூஜை
பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து தெய்வங்களுக்கும் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.
நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...