Saturday, April 6, 2019

18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடக்க உள்ளது. 18 ம் தேதி ஓட்டுப் பதிவு; மே, 23 ல் ஓட்டு எண்ணிக்கை.
லோக்சபா தேர்தலைவிட, சட்டசபை இடைத்தேர்தலுக்குதான் முக்கிய கட்சிகள் முன்னுரிமை தருகின்றன. காரணம், இது, தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் வாழ்வா, சாவா போராட்டம். தேர்தல் நடக்கும், 18 ல், ஆறு தொகுதியிலாவது வெற்றி பெற்றால் தான், அ.தி.மு.க.,வுக்கு சட்டசபையில், 'மெஜாரிட்டி' கிடைக்கும்; அதன் மூலம் ஆட்சியும் தொடரும். ஒருவேளை, அந்த, 18ல், 15 இடங்களை, தி.மு.க., கைப்பற்றினால். அ.தி.மு.க., ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க., ஆட்சி உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே, தி.மு.க.,வை அதிக இடங்களில் ஜெயிக்க விடக்கூடாது என்று, அ.தி.மு.க.,வும்; ஆறு இடத்தில், அ.தி.மு.க.,வை ஜெயிக்க விடக்கூடாது என்று, தி.மு.க.,வும் மல்லுக்கு நிற்கின்றன. அதே சமயம், லோக்சபா தேர்தலை கண்டுகொள்ளவே இல்லை என்ற விமர்சனத்துக்கு ஆளாகக்கூடாது என்று இரு கட்சிகளுமே நினைக்கின்றன. அதனால், நாலைந்து தேர்தல்களில், தேர்தல் மந்திர தந்திர கலைகளை அபாரமாக கற்றுத் தேர்ந்த அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம், 18 தொகுதிகளையும் ஒப்படைத்து விட்டார் முதல்வர் பழனிசாமி.

'நான் உட்பட மற்ற எல்லோரும் லோக்சபா தேர்தலில் தீவிர கவனம் செலுத்துவது போல் தீவிரமாக பிரசாரம் செய்வோம். மொத்த, 'மீடியா' கவனமும் எங்கள் மீது இருக்கும். அந்த வாய்ப்பை, 18 தொகுதியிலும் சிறப்பாக பயன்படுத்தி வேலையை முடியுங்கள்' என்று சொல்லி விட்டார். இதே உத்தியைத்தான், தி.மு.க.,வும் கையாள்கிறது. ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலைமையிலான, ஓ.எம்.ஜி., எனப்படும், 'ஒன் மேன் குரூப்'பில் உள்ளவர்கள், 18 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்துகின்றனர். எனினும், செலவு விஷயத்தில், அ.தி.மு.க.,வை போல தாராளமாக இல்லை. அதனால், கட்சியினரிடம் சுணக்கம் தெரிகிறது. அதையும் மீறி, கட்சி நிர்வாகிகளை விரட்டி, விரட்டி, ஓ.எம்.ஜி., வேலை வாங்குகிறது.

'நமக்கும், தி.மு.க.,வுக்கும் தான் போட்டி; நடுவில் தினகரன் கட்சியை தலைதுாக்க விட்டுவிடாதீர்கள். செலவை பற்றி கவலை இல்லை; என்ன செய்யணுமோ செய்யுங்கள்... ' என, நிர்வாகிகளை உசுப்பேற்றுகின்றனர், இரு மணிகளும். தி.மு.க., முகாமிலும் இதே வசனம் கேட்கிறது. 'தோல்வி என்றாலும், இரண்டாம் இடத்தை பிடிக்க வேண்டும்; ஆர்.கே., நகரில் நடந்ததுபோல, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும்' என, நிர்வாகிகளை எச்சரிக்கிறார் சபரீசன். இதனால், 18 தொகுதிகளிலும், ஆயிரத்துக்கே தடுமாறி கொண்டிருந்த தொண்டர்கள், இளநீர் குடித்தால்கூட, 2,௦௦௦ ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுகின்றனர்.

தினகரன் அரசியலில் இருப்பாரா, விலகுவாரா என்பதை சட்டசபை இடைத்தேர்தல் தீர்மானிக்கும் என்பதால், அவருடைய, அ.ம.மு.க.,வும் ஓடியாடி வேலை செய்கிறது. 18ல், 16 தொகுதிகளில், தினகரன் ஆதரவாளர்கள். எம்.எல்.ஏ., பதவி இழந்துள்ளனர். அவர்களில், மூன்று பேர், லோக்சபாவுக்கு போட்டியிடுகின்றனர். எனவே, அவர்களின் தொகுதிகளில் மட்டும் புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மற்ற, 13 தொகுதிகளில், எம்.எல்.ஏ., பதவியை இழந்தவர்களே நிற்கின்றனர். நமது, 'டீம்' திரட்டிய தகவல்கள் அடிப்படையில், ஏழு தொகுதிகளில், தி.மு.க.,வும், ஏழு தொகுதிகளில், அ.தி.மு.க.,வும் முந்துகின்றன. நான்கு தொகுதிகளில் இழுபறி நிலவுகிறது. இன்னும், 11 நாட்கள் இருக்கும் நிலையில், ஆளும்கட்சியினர் நிறைய, 'கொடுப்பார்கள்' என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருக்கிறது. அதையும் தாண்டி, எதிர்க்கட்சியின், 'கவனிப்பு' இருந்தால், சூழ்நிலை மாறலாம்.





















































No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...