Sunday, April 7, 2019

யார்? 18 தொகுதிகளில் முடிசூடுவது... தொடருமா அ.தி.மு.க., ஆட்சி..

18 தொகுதிகளில் முடிசூடுவது யார்? தொடருமா அ.தி.மு.க., ஆட்சிநாடு முழுவதும், லோக்சபா தேர்தல் களம் பரபரப்பாக இருந்தாலும், தமிழகத்தில் நடக்க உள்ள, 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், தமிழக அரசின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம் என்பதால், இரு கட்சிகளும், 18 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என, தீவிர களப்பணியாற்றி வருகின்றன.


18 தொகுதிகளில் மையம் கொண்டுள்ள, 'அரசியல் புயல்' யாரை சேதப்படுத்தப் போகிறது; யாரை கரை சேர்க்கப் போகிறது என்பது, மே, 23ல் தெரியும். ஆயினும், தலைவர்கள் பிரசாரம், கட்சி விசுவாசம் என்பதையெல்லாம் மீறி, பணப் பட்டுவாடாவே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது. 18ல், குறைந்தது, எட்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால், அ.தி.மு.க., அரசு தப்பிக்கும், 12க்கும் மேற்பட்ட தொகுதிகளை, தி.மு.க., கைப்பற்றினால், அ.தி.மு.க., அரசு கவிழவும் வாய்ப்புள்ளது.
18 தொகுதி,முடிசூடுவது,யார்?,தொடருமா,அ.தி.மு.க., ஆட்சி

சோளிங்கர்:


அ.தி.மு.க., வேட்பாளர் சம்பத், அரசின் சாதனைகள், நலத்திட்டங்களை வாக்காளர்களிடம் நினைவுபடுத்தி, ஓட்டு வேட்டையாடி வருகிறார். அ.தி.மு.க., ஆட்சி நீடிக்க, ஒவ்வொரு, எம்.எல்.ஏ., தொகுதியின் வெற்றியும் அவசியம் என்பதால், வேலுாரில் உள்ள மூன்று தொகுதிகளையும், கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற முனைப்பில், அமைச்சர் வீரமணி தரப்பு வியூகம் வகுத்து செயல்படுகிறது. இந்த ஆட்டத்தை தாக்கு பிடிக்க முடியாமல், தி.மு.க., வேட்பாளர் அசோகன், அ.ம.மு.க., வேட்பாளர் மணி ஆகியோர் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இங்கு, அ.தி.மு.க., முந்துகிறது.

குடியாத்தம் - தனி:


இந்த தொகுதியில், கணிசமான அளவுக்கு, முதலியார் சமூகத்தினர் இருப்பதால், அவர்களை குறி வைத்தே, அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்து வருகின்றனர். வேலுார், லோக்சபா தொகுதிக்குள் குடியாத்தம் வருவதால், புதிய நீதிக்கட்சி தலைவர் சண்முகத்தின் பிரசாரம் மற்றும் பண பலம், அ.தி.மு.க., வேட்பாளர் மூர்த்திக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., வேட்பாளர் காத்தவராயனும், பண பலத்தையும், துரைமுருகனின் பண பலத்தையும் வைத்து, போட்டியை கடுமையாக்கியுள்ளார். இவர்களுக்கு மத்தியில், அ.ம.மு.க., வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபனும் முட்டி மோதி வருகிறார். இங்கு, தி.மு.க.,வே முந்துகிறது.

ஓசூர்:


பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில், சிறை தண்டனை பெற்றதால், பாலகிருஷ்ணரெட்டி பதவி இழந்தார். அவரது மனைவி ஜோதி, ஆளுங்கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பண பலம், தெலுங்கு மொழி பேசும் மக்கள், இவருக்கு சாதகமாக உள்ளன. தி.மு.க., வேட்பாளர் சத்யா, உள்கட்சி பூசலில் சிக்கி தவித்தார். தற்போது பேச்சுவார்த்தையில் சரி செய்யப்பட்டதால், ஓசூர் நகரத்தில் வரவேற்பு உள்ளது. ஓசூரை சுற்றியுள்ள கிராமப்புற, தெலுங்கு பேசும் மக்களிடையே, இவருக்கு வரவேற்பு இல்லை என்பதால் சோகமாக உலா வருகிறார். அ.ம.மு.க., வேட்பாளர் பெங்களூரு புகழேந்தி, முட்டி மோதி காமெடி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளாலும், வெற்றியை ஈட்டுவது கடினம். இங்கு, அ.தி.மு.க., - தி.மு.க., சமபலத்துடன் உள்ளன.

மானாமதுரை - தனி:


அ.தி.மு.க., வேட்பாளர் நெட்டூர் நாகராஜன், உள்ளூர் அமைச்சர் பாஸ்கரன் மற்றும் மாவட்ட செயலர் செந்தில்நாதனை மட்டுமே நம்பியுள்ளார். ஆனால், அ.ம.மு.க., வேட்பாளர் மாரியப்பன் கென்னடி, பதவி பறிக்கப்பட்ட சோகத்தை மையப்படுத்தி செய்யும் பிரசாரம், தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பலத்த சேதத்தை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., - அ.ம.மு.க., போட்டி பிரசாரத்துக்கு இடையே, தி.மு.க., வேட்பாளர் இலக்கிய தாசன் காணாமல் போய்விட்டார். தி.மு.க., கூட்டணி கட்சியினரிடம் உற்சாகம் இல்லை. அ.ம.மு.க.,வின் பிரசாரம் நாளுக்கு நாள், மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால், இந்த தொகுதியில், அ.ம.மு.க., முந்துகிறது.

பாப்பிரெட்டிப்பட்டி:


பா.ம.க., செல்வாக்கு, இரட்டை இலை, பண பலம் ஆகியவற்றால், அ.தி.மு.க., கோவிந்தசாமி புதிய தெம்புடன் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். எட்டு வழிச்சாலை, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான அலை உள்ளிட்ட அம்சங்களை பிரசாரமாக்கி, அ.தி.மு.க.,வுக்கு, 'செக்' வைக்க முயற்சிக்கிறார், தி.மு.க., வேட்பாளர் வக்கீல் மணி. எம்.எல்.ஏ., பதவியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பழனியப்பன், தர்மபுரி லோக்சபா தொகுதியில், பிசி'யாக இருப்பதால், அ.ம.மு.க., வேட்பாளர் ராஜேந்திரனின் முயற்சிகள் எடுபடவில்லை. இங்கு, அ.தி.மு.க., முந்துகிறது.

சாத்துார்:



அ.தி.மு.க., ராஜவர்மன், தி.மு.க., சீனிவாசன், அ.ம.மு.க., சுப்பிரமணியம் ஆகிய மூன்று பேருமே முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். தே.மு.தி.க., உள்ளிட்ட கூட்டணி பலத்தால் நாயுடு, தலித், நாடார் உள்பட பிற சமுதாயத்தினரின் ஆதரவை பெற்றுள்ளதால், வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில், ராஜவர்மன் வலம் வருகிறார். தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன், கடந்த தேர்தலில், 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை இழந்ததால், அந்த வாக்குகளை, ம.தி.மு.க., - வி.சி., மூலம் பெற்றுவிட முடியும் என நினைக்கிறார். மேலும், அ.ம.மு.க., பிரிக்கும் வாக்குகள் சாதகமாகும் எனவும், நம்புகிறார். சுப்பிரமணியத்தின் பிரசாரத்தை பொதுமக்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இங்கு இழுபறி நீடிக்கிறது.

விளாத்திகுளம்:


அ.தி.மு.க.,வுக்கு சாதகமான தொகுதியாக இருந்தாலும், வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அளவுக்கு, ரெட்டியார் சமூக வாக்குகள் இங்கு உள்ளன. அ.தி.மு.க., வேட்பாளர் சின்னப்பனும், தி.மு.க., வேட்பாளர் வசந்தம் ஜெ.குமாரும், ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், போட்டி கடுமையாக உள்ளது. நாடார் சமூகத்தை சேர்ந்த ஜோதிமணி, அ.ம.மு.க., வேட்பாளராக களத்தில் உள்ளதால், எந்த பாதிப்பும் பிற கட்சிகளுக்கு இல்லை. அ.தி.மு.க.,வில் சீட் கிடைக்காத விரக்தியில், முன்னாள், எம்.எல்.ஏ., மார்க்கேண்டேயனும் சுயேச்சையாக போட்டியிட்டு, ரெட்டியார் வாக்குகளை பிரிப்பதால், தி.மு.க., முந்துகிறது.

திருப்போரூர்:


தொகுதி பொறுப்பாளராக அமைச்சர், சி.வி., சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர் ஆறுமுகம், வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் வலம் வருகிறார். இரட்டை இலை, பண பலம் ஆகியவை, தன்னை எளிதில் கரையேற்றிவிடும் என எதிர்பார்க்கிறார். தி.மு.க., வேட்பாளர் இதயவர்மனோ, மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான அதிருப்தி அலையில், வெற்றிக்கனியை பறிப்பது உறுதி என நம்பி, பிரசாரத்தில் முனைப்பு காட்டி வருகிறார். அதே நேரம், பணம் செலவழிப்பதில் கஞ்சத்தனம் காட்டுவதால், கட்சியினர், 'அப்செட்' ஆகியுள்ளனர். எம்.எல்.ஏ., பதவி பறிபோனதால் ஏற்பட்ட அனுதாப அலை, தன்னை கரைசேர்க்கும் என, அ.ம.மு.க., வேட்பாளர் கோதண்டபாணி நம்பினாலும், ரேசில் பின்தங்கியே உள்ளார். இங்கு, அ.தி.மு.க., முந்துகிறது.

தஞ்சாவூர்:


பண பலம், இரட்டை இலை செல்வாக்கால், வெற்றியை நோக்கி தெம்பாக ஓடுகிறார், அ.தி.மு.க.. வேட்பாளர் காந்தி. திமு.க.,வில் உட்கட்சி பூசல், வேட்பாளர் நீலமேகத்தின் அடாவடி அரசியல் ஆகியவை, பின்னோக்கி இழுக்கும் அம்சமாக விளங்குகிறது. அ.ம.மு.க., வேட்பாளர் ரெங்கசாமியின் பிரசாரமும், யுக்தியும், மூன்றாம் இடத்துக்கே போட்டி போடுகின்றன. அ.தி.மு.க.,வே முந்துகிறது.

பூந்தமல்லி - தனி:


அ.தி.மு.க.,வில் வைத்தியநாதன், தி.மு.க., முன்னாள், எம்.பி., கிருஷ்ணசாமி, அ.ம.மு.க., வைத்தியநாதன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்களின் தீவிர பிரசாரம், கட்சி பலம், பண பலம் சம அளவில் இருப்பதால், போட்டி கடுமையாகி உள்ளது. இவர்களின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல், அ.ம.மு.க., தரப்பு அமைதியாகி விட்டது. இங்கு, தி.மு.க., - அ.தி.மு.க., இடையே முதலிடத்தை பிடிக்க, மோதல் நீடிக்கிறது.

பெரம்பூர்:


தி.மு.க., வேட்பாளர் சேகர், அ.தி.மு.க., ராஜேஷ், அ.ம.மு.க., வெற்றிவேல் என, மும்முனை போட்டி நிலவுகிறது. பெரம்பூர் முழுவதும், நலத்திட்ட உதவிகள், தங்கு தடையின்றி பாய்ந்துள்ளதால், இரட்டை இலையை மக்கள் கைவிட மாட்டார்கள் என, ராஜேஷ் நம்புகிறார். ஆனால், எப்படியாவது ராஜேஷை மிஞ்ச வேண்டும் என, வெற்றிவேல், அ.தி.மு.க., ஓட்டுகளை, 'கேன்வாஸ்' செய்து வருகிறார். இதற்கு நடுவில், முழு மூச்சில், சேகர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இங்கும் இழுபறி நிலவுகிறது.

திருவாரூர்:


முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவால் ஏற்பட்ட அனுதாபத்தில், பூண்டி கலைவாணன் எளிதாக வெற்றி பெற்று விடும் நிலைதான் காணப்படுகிறது. அ.தி.மு.க., வேட்பாளர் ஜீவானந்தம், விடா முயற்சியுடன் போராடி வருகிறார். முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் பிரசாரத்துக்கு பின், வெற்றிக் காற்று, தன் பக்கம் வீசும் என எதிர்பார்க்கிறார். அ.ம.மு.க., வேட்பாளர் காமராஜ், கஜா புயல் காலத்தில் இருந்தே, பிரசாரம் செய்து வந்தாலும், போட்டியில் பின்தங்கியே காணப்படுகிறார். இங்கும், தி.மு.க., முந்துகிறது.

பரமக்குடி:


அமைச்சர் உதயகுமாரின் சிபாரிசால், அ.தி.மு.க., வேட்பாளரான சதன்பிரபாகர், உள்ளூர் அமைச்சர் மணிகண்டனை முழுக்க, முழுக்க நம்பி களத்தில் உள்ளார். பண பலத்தாலும், உள்ளூர் அமைச்சரின் ஆசியாலும், வெற்றி கிடைக்கும் என நம்புகிறார். அ.ம.மு.க., சார்பில் போட்டியிடும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர் முத்தையா, பணமின்றி தவித்து வருகிறார். தி.மு.க., வேட்பாளர் சம்பத்குமார் பிரசாரம் இப்போதுதான் சூடு பிடித்துள்ளது. இங்கும் இழுபறி நீடிக்கிறது.

பெரியகுளம் - தனி:


தி.மு.க., வேட்பாளர் சரவணகுமாருக்கு, தலித் சமூகத்தினரிடையே அமோக ஆதரவு இருப்பதால், தொகுதியில் உற்சாகமாக வலம் வருகிறார். அவருக்கு, அ.தி.மு.க., வேட்பாளர் மயில்வேல், அரசின் நலத்திட்ட உதவிகள், இரட்டை இலை சின்னம், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் பண பலம், அவரது சொந்த தொகுதி என்பதை மட்டும் நம்பி களத்தில் உள்ளார். எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்ட டாக்டர் கதிர்காமு, மூன்றாமிடத்துக்கு வந்து சேர்வதே கடினம். இங்கும் கடுமையான இழுபறி நிலவுகிறது.

ஆண்டிப்பட்டி:


எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன், ஓராண்டாக, செய்து வந்த தேர்தல் பணிகளால், அ.ம.மு.க., வேட்பாளர் ஜெயகுமார் கடும் போட்டியை ஏற்படுத்துகிறார். இதற்கிடையில், சகோதரர்களான, தி.மு.க., வேட்பாளர் மகாராஜன், அ.தி.மு.க.,வின் லோகிராஜன் ஆகியோரின் பாசப் போராட்டம், வாக்காளர்களுக்கு, சுவாரஸ்யத்தை அதிகரித்து உள்ளது. இரட்டை இலை, பண பலம், அதிகாரம் கை கொடுத்தாலும், அ.ம.மு.க., வாக்குகளை பிரிக்கும் என்பதால், இங்கு கடும் இழுபறி நீடிக்கிறது.

நிலக்கோட்டை - தனி:


அ.தி.மு.க., செல்வாக்குடன் உள்ள இந்த தொகுதியில், முன்னாள், எம்.எல்.ஏ., தேன்மொழி, இரட்டை இலை சின்னத்தை முன்வைத்து பிரசாரத்தில் முன்னிலையில் உள்ளார். அ.தி.மு.க.,. அதிருப்தி வாக்கு களை குறி வைத்து, அ.ம.மு.க., வேட்பாளர் தங்க துரை ஓட்டு வேட்டையாடி வருகிறார். தி.மு.க., வேட்பாளர் சவுந்தரபாண்டியன், அ.ம.மு.க., தடாலடியாக பிரிக்க உள்ள வாக்குகள், தமக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையில், உற்சாக வேட்பாளராக வலம் வருகிறார். இங்கும் இழுபறி நிலவுகிறது.

அரூர் - தனி:


அ.தி.மு.க., சம்பத்குமார், தி.மு.க., கிருஷ்ண குமார், அ.ம.மு.க., முருகன் ஆகியோர் மும்முனை போட்டியில் மோதுகின்றனர். வெற்றி, தோல்வியை தலித் வாக்குகள் நிர்ணயிக்கும் என்பதால், வி.சி.,க்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கிருஷ்ணகுமார் வலம் வருகிறார். ஸ்டாலின், உதயநிதி ஆகியோரின் பிரசாரத்தால், தி.மு.க., பக்கமே காற்று பலமாக வீசுகிறது. அமைச்சர் அன்பழனின் கடும் உழைப்பால் கரையேறி விடலாம் என்ற நம்பிக்கையில், சம்பத்குமார் உள்ளார். அனுதாப அலையை மட்டுமே நம்பி, அ.ம.மு.க., வேட்பாளர் முருகன், பிரசாரத்தில் இறங்கியுள்ளார். இங்கும், தி.மு.க., முந்துகிறது.

ஆம்பூர்:


முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக உள்ளதால், தி.மு.க., வேட்பாளர் விஸ்வநாதன், தனக்கு வெற்றி உறுதி என்ற எண்ணத்தில், பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அ.தி.மு.க., வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, அமைச்சர் வீரமணியை நம்பி, வலம் வருகிறார். அ.தி.மு.க., அதிருப்தி வாக்கு களை பெற்று விட வேண்டும் என்ற நோக்கில், அ.ம.மு.க., வேட்பாளர் பாலசுப்ரமணி போராடி வருகிறார். அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் இழுபறி நீடிக்கிறது.


மொத்தமுள்ள, 18 தொகுதிகளில், பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், தஞ்சாவூர், திருப்பேரூர் தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி முகம் பதித்துள்ளது. குடியாத்தம், விளாத்திகுளம் தொகுதியில், சூரியன் பிரகாசமாகியுள்ளது. மானாமதுரை தொகுதியில், அ.ம.மு.க., பரிசுப்பெட்டிக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், அக்கட்சிக்கு சாதகமாக உள்ளது. மீதமுள்ள, 11 தொகுதிகளில் , தற்போதைய நிலையில், அ.தி.மு.க., - தி.மு.க., இடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு, முதல் இரண்டு நாட்களில், கட்சிகள் வாரி இறைக்க உள்ள, 'வைட்டமின் ப'வே வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை முடிவு செய்யும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...