Wednesday, March 17, 2021

🔔அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயில், திருநீர்மலை🔔

 

🔔108 திவ்ய தேசங்களில் நான்கு திவ்ய தேசங்களை ஒருங்கே தரிசித்த பலன் கிடைக்கும் ஒப்பற்ற திருத்தலம்.திருமால் நின்றான்,இருந்தான்,கிடந்தான், நடந்தான் என நான்கு திருக்கோலத்தில் அருள் புரியும் அற்புத திருத்தலம்.ஒரே நாளில் அனைத்து வாகனங்களிலும் திருவீதிஉலா வரும் புண்ணிய திருத்தலம்.நான்கு புண்ணிய தீர்த்தங்களை ஒருங்கே பெற்றுள்ள மகிமை வாய்ந்த திருத்தலம்.சுமார் 1500 ஆண்டுகள் தொன்மை வாய்ந்த திருத்தலம்.108 திவ்ய தேசங்களில் 61வது திவ்ய தேசமாகும்.பூதத்தாழ்வார், திருமங்கையாழ்வார்,மங்களாசாசனம் செய்த திருத்தலம்.இவ்வாறு ஏராளமான பெருமைகளையும் சிறப்புகளையும் உள்ளடக்கிய அற்புத திருத்தலம் இதுவாகும்.🔔
🔔ஒப்பற்ற திருத்தலம்:108 வைணவ திவ்ய தேசங்களில் நான்கு திவ்ய தேசங்களை தரிசித்த பலன் ஒருங்கே கிடைக்கும் ஒப்பற்ற திருத்தலம் இதுவாகும்.திருமால் இத்தலத்தில் நின்றான்,இருந்தான்,கிடந்தான்,நடந்தான் என நான்கு திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.🔔
🔔நின்றான்–நீர்வண்ணன்(நின்ற கோலம்)
இருந்தான்–நரசிம்மர்(அமர்ந்த கோலம்)
கிடந்தான்–அரங்கநாதர்(சயன கோலம்)
நடந்தான்–திருவிக்கிரமன் (உலகளந்த கோலம்)
🔔திருமால் 108 திவ்ய தேசங்களிலும் இந்த நான்கு திருக்கோலத்தில் மட்டுமே சேவை சாதிக்கிறார்.இத்தகு சிறப்பு வாய்ந்த காட்சியாக நான்கு மூர்த்திகளையும் ஒருங்கே காணக் கிடைப்பது புண்ணியம் நிறைந்த ஒன்றாகும்.
🔔தல வரலாறு: பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமியை தரிசிக்க எண்ணிய"பிருகு முனிவர்"மற்றும்"மார்க்கண்டேய முனிவர்"நீர் சூழ்ந்த இந்த மலையின் மீது நீண்ட காலம் தவம் செய்தனர். அவர்களின் தவத்திற்கு மனமிறங்கிய திருமால்"போக சயனத்தில்"அருள்மிகு அரங்கநாதர் திருக்கோலத்தில் காட்சி தந்து அருளினார்.நீர் சூழ்ந்த மலை என்பதால் இவ்விடம்"நீர்மலை"என்றும் திருமால் வந்து அவதரித்த மலை என்பதால்"திருநீர்மலை"என்றும் பெயர் பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. பழங்காலத்தில் இவ்வூர் தோயாசம், காண்டவனம், மலை தோயத்ரி சேத்திரம் என பல பெயர்களால் அழைக்கப் பட்டிருக்கின்றது.
🔔அருள்மிகு அரங்கநாதர் சுவாமி மலை மீது தெற்கு முகம் நோக்கி கோவில் கொண்டு அருள்கிறார்.அவர் காலடியில் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இவர்களை சேவித்த வண்ணம் பிருகு முனிவர் மற்றும் மார்க்கண்டேய முனிவர் ஆலய முகப்பில் இருக்கின்றனர்
🔔திருமகளான இலட்சுமி தாயார் அருள்மிகு அரங்கநாயகி தாயார் என்ற திருநாமத்தில் கிழக்கு நோக்கி தனிச் சன்னதி கொண்டு அருள்கின்றார்.
🔔சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட இம்மலையின் மீதுள்ள பெருமாளை தரிசிக்க நாம் 200 படிகளை கடந்து செல்ல வேண்டும்
🔔இங்கு அருள்மிகு நரசிம்ம சுவாமி பால நரசிம்மராக கட்சி தந்து அருள்கின்றார்.அழகிய வடிவத்தில் வீற்றிருந்த கோலத்தில்(அமர்ந்த கோலத்தில்)கிழக்கு திசை நோக்கி தனி சன்னதியில் அருள்கின்றார்.
🔔அருள்மிகு திருவிக்கிரமன்: அருள்மிகு திருவிக்கிரமன் இடது காலை உயர்த்தி உலகத்தை அளக்கும்"வாமன அவதாரம்"திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.அருள்மிகு திருவிக்கிரமன் மிக கம்பீரமான தோற்றத்தில் கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதி கொண்டு அருள்கிறார். இவ்வடிவத்தை திருமங்கையாழ்வார்"நடந்தான்" என்று பாடுகிறார்.
🔔அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் மலை அடிவாரத்தில் கிழக்கு நோக்கியவாறு தனிச் சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார்.பெரும்பாலான கோயில்களில் கொடிமரம்,பலிபீடம்,கோபுரம் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருக்கும். ஆனால் இங்கே கொடி மரமும் பலிபீடமும் இராசகோபுரத்தை விட்டு சற்று விலகி தனியே அமையப் பெற்றுள்ளன. இராசகோபுரத்திற்கு நேர் எதிரில் அருள்மிகு இராமபிரான் சன்னதி அமைந்துள்ளது.
🔔திருநீர்மலை திருத்தலத்தில் மூலவர் அருள்மிகு அரங்கநாதர் மலையின் மீதும் உற்சவர் அழகிய மணவாளப் பெருமாள் மலை அடிவாரத்திலும் எழுந்தருளியிருக்கிறார்கள்.இங்கு அருள்மிகு அரங்கநாதர் சுவாமியே முதல் மூர்த்தியாக விளங்குகிறார்.
🔔அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் உடன் உறையும் இலட்சுமி பிராட்டிக்கு "அணிமாமலர் மங்கை தாயார்" என்பது திருநாமம்.கிழக்கு நோக்கியவாறு தனி சன்னதியில் அருள்கின்றாள்.
🔔அருள்மிகு இராமபிரான்: "ஸ்ரீமத் இராமாயணம்"இயற்றிய வால்மீகி முனிவருக்கு ஒரு முறை அருள்மிகு இராமபிரானை திருமணக் கோலத்தில் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.உடனே திருநீர்மலை அடிவாரம் வந்து இராமபிரானை மனதில் நிறுத்தி தியானித்தார்.உடனே அரங்கநாதர் இராமபிரானாகவும், இலட்சுமி தாயார் சீதா தேவியாகவும் ,ஆதிசேசன் இலக்குவனாகவும்,பெருமாளின் ஆயுதங்களான சங்கு,சக்கரங்கள் பரத சத்ருக்கணனாகவும்,விஷ்வக்சேனர் சுக்ரீவனாகவும்,கருடன் அனுமனாகவும் "திருமண கோலத்தில்"எழுந்தருளி காட்சி தந்ததாக தல வரலாறு கூறுகிறது.
🔔மலை அடிவாரத்தில் அருள்மிகு இராமபிரான் தனி சன்னதி கொண்டு இராசகோபுரத்திற்கு நேர் எதிரில் கட்சி தந்து அருள்கின்றார்.
🔔மங்களாசாசனம்: திருநீர்மலை திருத்தலத்தின் மீது பூதத்தாழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில் 46ம் பாடலில் மிக அழகாக பாடியுள்ளார்.
🔔பயின்றது அரங்கம் திருக்கோட்டி, பன்னாள்
பயின்றதுவும் வேங்கடமே பன்னாள் பயின்றது
அணிதிகளும் சோலை அணிநீர்மலையே
மணிதிகழும் வண்தடக்கை மால்.
🔔ஆழ்வார்கள் ஒரு சில தலங்களில் மட்டுமே தாயாரையும் சேர்த்து பாடியுள்ளார்கள்.பிற்காலத்தில் வந்த திருமங்கையாழ்வார் நான்கு மூர்த்திகளையும் சேர்த்து பாடியுள்ளார்.இத்தலத்தில் அடிவாரத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு அணிமாமலர் மங்கை தாயாரையும் சேர்த்து பாடியிருப்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்
🔔திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி பகுதியில் இரண்டாம் பத்து நான்காம் திருமொழியில் மிக அற்புதமாக பாடியுள்ளார்.
"🔔அன்றாயர் குலக்கொடியோடு
அணிமாமலர் மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு என்தானும் இரக்கமிலாதவனுக்கு
உறையுமிடமாவது இரும்பொழில் சூழ் நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை தடந்திகழ் கோவல் நகர் நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற் கிடம் மாமலையாவது நீர்மலையே.
🔔தலச் சிறப்பு: திருநீர்மலை திருத்தலம் ஒரு ஸ்வயம் வ்யக்த ஷேத்திரம். அதாவது பெருமாள் தானாகத் தோன்றிய தலங்களில் திருநீர் மலையும் ஒன்று என்று சொல்கிறார்கள்.இது போல மொத்தம் எட்டு தலங்கள் உண்டு: ஸ்ரீரங்கம்,ஸ்ரீமுஷ்ணம்,திருப்பதி, சாளக்கிராமம்,நைமிசாரண்யம், புஷ்கரம்,நாராயணபுரம் ஆகியவை மற்ற ஏழு தலங்கள் ஆகும்.
🔔சித்திரை மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்திலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தில் நடைபெறும் திருக்கல்யாணத்தின் மூன்று நாட்களிலும் அழகிய மணவாளப் பெருமாள் மலையின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அன்று மட்டுமே உற்சவரையும் மூலவரையும் ஒரே நேரத்தில் தரிசிக்க முடியும்.மற்ற நாட்களில் மூலவர் மலை மீதும் உற்சவர் மலை அடிவாரத்திலும் சேவை சாதிக்கின்றனர்.
🔔தீர்த்தம்: மணிகர்ணிகா,தடாகம்,க்ஷீர புஷ்கரணி,காருண்ய புஷ்கரணி,ஸித்த புஷ்கரணி,ஸ்வர்ண புஷ்கரணி என்ற நான்கு புனித தீர்த்தங்களைக் கொண்டுள்ளது இக்கோயில்.
🔔உற்சவங்கள்: மலையில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும் மலை அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப் பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
🔔அழகிய மணவாளப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று பரமபதவாசல் சேவை தந்தருள்கிறார்.மாசி மகத்தன்று இவரே கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
🔔அருள்மிகு நரசிம்ம சுவாமிக்கு ஆனி மாதத்திலும் உலகளந்த பெருமாளுக்கு ஆடி மாதத்திலும் உற்சவங்கள் நடைபெறுகின்றன.
பொதுவாக உற்சவங்களின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வாகனங்களில் எழுந்தருளி பெருமாள் சேவை சாதிப்பது வழக்கம்.ஆனால் இங்குள்ள அரங்கநாதப் பெருமானோ தை மாதத்தில் வரும் ரத சப்தமியன்று ஒரு நாளில் அனைத்து வாகனங்களிலும் எழுந்தருள்கின்றார்.
🔔பரிகாரம்: வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல வேண்டும் என்றும் குழந்தைகள் நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் விரும்புபவர்கள் இங்கே பெருமளவில் வந்து பெருமாளை தரிசிக்கிறார்கள்.திருமணத் தடைகள் நீங்கி நல்ல இல்வாழ்க்கை அமைய விரும்புபவர்கள் இப்பெருமானை வந்து சேவிக்கும் பட்சத்தில் அவர்களுடைய குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு திருமணம் நடந்தேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
🙏அருள்மிகு அரங்கநாதர் சுவாமி
திருவடிகளே சரணம்🙏
🙏அருள்மிகு அரங்கநாயகி தாயார்
திருவடிகளே சரணம்🙏
🙏அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள்
திருவடிகளே சரணம்🙏
அருள்மிகு 🙏அணிமாமலர்மங்கை தாயார்
திருவடிகளே சரணம்🙏
🙏அருள்மிகு நரசிம்மர் சுவாமி
திருவடிகளே சரணம்🙏
🙏அருள்மிகு திரு விக்கிரமன்
திருவடிகளே சரணம்🙏
🔯தாம்பரத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.பல்லாவரத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சென்றடைய போதிய போக்குவரத்து வசதிகள் உள்ளன.🔯
🔯தரிசன நேரம் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 04.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை🔯
🔯முகவரி:அருள்மிகு நீர்வண்ணப் பெருமாள் திருக்கோயில்,
திருநீர்மலை சென்னை:600 044🔯
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...