Monday, November 29, 2021

அ.தி.மு.க.,வில் வழிகாட்டி குழு கலைப்பு? டிசம்பர் 1-ல் அதிரடி முடிவெடுக்க திட்டம்.

 வரும் 1ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க., செயற்குழு கூட்டத்தில், வழிகாட்டி குழு கலைப்பு உட்பட, கட்சியில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்தும் வகையிலான தீர்மானங்கள் நிறைவேற்றப் பட உள்ளன.

அ.தி.மு.க., வழிகாட்டி குழு கலைப்பு?

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம், நாளை  டிச., 1ம் தேதி நடைபெற உள்ளது.


ஒருவருக்கு ஒரு பதவி

அப்போது, அ.தி.மு.க., ஒருங்கிணைப் பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் தொடர்ந்து அவர்களது பொறுப்புகளில் நீடிப்பதற்கான அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
அத்துடன், கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற முறையும் அமலாகிறது. அதனால், ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் தன்னிடம் உள்ள பொருளாளர் பதவியையும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தலைமை நிலைய செயலர் மற்றும் மாவட்ட செயலர் பதவியையும் ராஜினாமா செய்கின்றனர். துணை ஒருங்கிணைப்பாளர்களில் முனுசாமிக்கு பொருளாளர் பதவியும், வைத்திலிங்கத்திற்கு தலைமை நிலைய செயலர் பதவியும் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
பழனிசாமி மாவட்ட செயலராக உள்ள சேலம் புறநகர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கட்சியில் அமைப்பு செயலர்கள் 70க்கும் மேற்பட்டவர்கள் உள்ளதால், அப்பதவிக்குரிய மரியாதை குறைந்துஉள்ளது. எனவே, எம்.ஜி.ஆர்., காலத்தில் 12 அமைப்பு செயலர்கள்; ஜெயலலிதா காலத்தில் 18 அமைப்பு செயலர்கள் இருந்தது போல, தற்போது இரண்டு மாவட்ட செயலர்களுக்கு ஒரு அமைப்பு செயலர் என்ற அடிப்படையில், அதன் எண்ணிக்கையும் குறைக்கப்பட உள்ளது.வழிகாட்டி குழு உறுப்பினர்களாக உள்ளவர்கள், கட்சியில் குழப்பத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுவதால், அந்தக் குழுவும் கலைக்கப்படுகிறது.


சசிகலாவுக்கு இடமில்லை

இரட்டை தலைமைக்கு கட்டுப்படாமல், சமீபத்தில் நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் அமைப்பு செயலர்கள் ரகளையில் ஈடுபட்டது தான், கலைப்புக்கு முக்கிய காரணம்.மேலும், பொதுச்செயலர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்கும், கட்சியின் நிறுவன தலைவர் பதவி எம்.ஜி.ஆருக்கும் மட்டுமே உண்டு. அதனால், சசிகலாவுக்கு கட்சியில் நிரந்தரமான இடம் கிடையாது என்று தீர்மானமும் நிறைவேற்றப் பட உள்ளது.
அவைத்தலைவர் பதவிக்கு டிசம்பர் இறுதியில் நடைபெறும் பொதுக்குழுவில், செங்கோட்டையன், செம்மலை, பொன்னையன் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதுதவிர, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றி வியூகம், உட்கட்சி தேர்தலில் ஏற்கனவே இருந்த நிர்வாகிகளை மீண்டும் தேர்வு செய்வது, தி.மு.க., அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது தொடர்பான தீர்மானங்களும், செயற்குழுவில் நிறைவேற்றப்பட உள்ளதாக அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


தி.மு.க.,வில் அன்வர்ராஜா?

சென்னையில் இம்மாதம் 24ம் தேதி நடந்த அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சியின் இரட்டை தலைமை முன்னிலையில், இரண்டாம் கட்டத் தலைவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரங்கள் பற்றி, பொது வெளியில் பேசியது தொடர்பாக, சண்முகம், அன்வர்ராஜா இடைய கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த விவகாரத்தால் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா, தி.மு.க.,வில் இணைய முடிவு எடுத்திருப்பதாகவும், அவரை தி.மு.க.,வில் சேர்ப்பதற்குரிய பேச்சு திரைமறைவில் நடந்து வருவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...