Tuesday, November 28, 2017

"எம்ஜிஆரின் சிங்க‌க்குட்டிக‌ள்"


எம்ஜிஆர் த‌னிக்க‌ட்சி தொட‌ங்கிய‌வுட‌ன் முத‌ல் பொதுக்கூட்ட‌ம் காஞ்சிபுர‌த்தில் என அறிவித்தார். ஆனால் அந்த கூட்ட‌ம் சுலப‌த்தில் ந‌ட‌ந்துவிட‌வில்லை. காஞ்சிபுர‌ம் மாவ‌ட்ட எம்ஜிஆர் மன்ற‌த்த‌லைவ‌ர் கே.பாலாஜி த‌லைமையில் ந‌ட‌க்க‌விருந்தது. அவ‌ரை கைது செய்துவிட்டால், கூட்ட‌ம் த‌டைப‌டும் என க‌ருணாநிதி முய‌ன்றார். அத‌னால், த‌லைம‌றைவாகவே கூட்ட‌ ஏற்பாடுக‌ளை க‌வ‌னித்தார் பாலாஜி. க‌லெக்ட‌ர் சுப்பிர‌மணியமோ கூட்ட‌த்திற்கு அனுமதி த‌ராமல் இழுத்த‌டித்துக் கொண்டிருந்தார்.
காஞ்சிபுர‌ம் தேர‌டியில்தான் பொதுக்கூட்ட‌ மேடை. அருகே ப‌ள்ளிவாச‌ல். ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்டின் பின்புற‌ம் வ‌ய‌ல்வெளி. ராமாவ‌ர‌ம் தோட்ட‌த்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வ‌ழியாக வ‌ரும் எம்ஜிஆரை கொல்வ‌த‌ற்கு திட்ட‌ம் தீட்ட‌ப்ப‌ட்டுள்ளதாக த‌க‌வ‌ல் கிடைத்த‌து.
அத‌னால் எம்ஜிஆரை, தாம்ப‌ர‌ம் ப‌ட‌ப்பை வ‌ழியாக வாலாஜாபாத் வ‌ந்து, அங்கிருந்து காஞ்சிபுர‌ம் அழைத்துவ‌ருவ‌து என முடிவுசெய்ய‌ப்ப‌ட்ட‌து. அரைகிலோ மீட்ட‌ர் முன்பாக‌வே காரை நிறுத்திவிட்டு எம்ஜிஆரை வ‌ய‌ல்வெளி வ‌ழியே ந‌ட‌த்திக்கூட்டி வ‌ந்து ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் வ‌ழியே வ‌ந்து மேடைக்கு செல்வ‌து என தீர்மானிக்க‌ப்ப‌ட்ட‌து.
ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் சுவ‌ரை ஏறிவ‌ருவ‌து சுலப‌மல்ல. எனவே ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் சுவ‌ரில் ஒருஆள் நுழையும் அளவிற்கு இடிக்க அனுமதி கேட்க‌ப்ப‌ட்ட‌து. முஸ்லீம் ச‌முதாய‌த்தின‌ர் இத‌ற்காக ஒரு கூட்ட‌ம் (ஜ‌மாத்) போட்டு "எம்ஜிஆர் ந‌ம் ச‌முதாய‌த்திற்காக எவ்வ‌ளவோ உத‌வியிருக்கிறார். அவ‌ருக்கு இந்த‌ உத‌வி செய்வோம் " என தீர்மானித்து அனுமதி அளித்த‌ன‌ர். உட‌னே பின்புற காம்ப‌வுண்டில் சிறிய ப‌குதி இடிக்க‌ப்ப‌ட்டு க‌த‌வும் வைக்க‌ப்ப‌ட்ட‌து. கூட்ட நாளும் நெருங்கிவிட்ட‌து. 

Image may contain: 1 person, sitting

க‌லெக்ட‌ர் அனுமதி கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் 24/10/1972ல் எம்ஜிஆர் ந‌ட‌த்தும் முத‌ல் கூட்ட‌த்தில் க‌லந்துகொள்ள வேண்டும், அவ‌ர் ஆர‌ம்பிக்கும் க‌ட்சிக்கு த‌ம் ஆத‌ர‌வை அளிக்கவேண்டும் என முடிவு செய்த மக்கள் காலை 8 மணிமுத‌லே தேர‌டி திட‌லில் கூட ஆர‌ம்பித்துவிட்டார்கள். 
அப்போதெல்லாம் அவ்வ‌ளவு ப‌ஸ் வ‌ச‌தி கிடையாது. எனவே சுற்றியுள்ள கிராமங்க‌ளில் உள்ள மக்களெல்லாம் க‌ட்டுச்சோற்றை க‌ட்டிக்கொண்டு கால்ந‌டையாக‌வும், மாட்டு வ‌ண்டியிலும், குதிரை வ‌ண்டியிலும் வ‌ந்து மக்கள் தேர‌டியில் இட‌ம் பிடிக்க‌ ஆர‌ம்பித்து விட்டார்க‌ள். 2 கிலோமீட்ட‌ர் தூர‌த்திற்கு மக்கள் வெள்ளம் ம‌தியமே அலை மோதிய‌து. 
இனிமேல் அவ்வ‌ளவு கூட்ட‌த்தை க‌லைக்க‌வும் முடியாது. க‌லைத்தாலும் நிலைமை விப‌ரீத‌மாகிவிடும் என்று மேலிட‌த்திற்கு தெரிவித்துவிட்டு க‌லெக்ட‌ர் கூட்ட‌த்திற்கு ஒருவ‌ழியாக அன்று மதிய‌ம் அனுமதி அளித்துவிட்டார். 
நிலைமை இவ்வாறிருக்க தோட்ட‌த்திலோ எம்ஜிஆருக்கு க‌டும் காய்ச்ச‌ல். மருத்துவ‌ர்க‌ள் எம்ஜிஆரை எங்கும் வெளியில் செல்லவேண்டாம் என்று த‌டுத்துவிட்ட‌ன‌ர். ஜானகி அம்மாவும் அருகிருந்து எம்ஜிஆரை க‌வ‌னித்துக் கொண்டார். நேர‌மோ சென்று கொண்டிருந்த‌து. 
கூட்ட‌த்திற்கு போகும்வ‌ழியில் எம்ஜிஆரை தீர்த்துக்க‌ட்ட‌ ஒரு கூட்ட‌மும், அவ‌ர் முக‌த்தில் திராவ‌க‌த்தை வீச ஒரு கூட்ட‌மும் த‌யாராக இருப்ப‌தாக எம்ஜிஆர் வீட்டிற்கு த‌க‌வ‌ல் கிடைத்த‌து. இடையே வானொலியில் எம்ஜிஆருக்கு உட‌ல்நிலை ச‌ரியில்லாத‌தால் பொதுக்கூட்ட‌ம் ர‌த்து என்ற செய்தியும் வ‌ர‌ மக்கள் கொதித்து போயின‌ர். ப‌லர் ர‌க‌ளையில் ஈடுப‌ட்ட‌ன‌ர்.
நிலைமையின் விப‌ரீத‌த்தை உணர்ந்த மன்றத்த‌லைவ‌ர் பாலாஜி, சென்னையை நோக்கி காரில் புற‌ப்ப‌ட்டார். வ‌ழியில் காரை மறித்து ப‌லர் என்னைய்யா! வாத்தியார் வ‌ராரா? இல்லையா? என்று துளைத்தெடுத்த‌ன‌ர். க‌ண்டிப்பாக வ‌ருவார் என்று சொல்லிவிட்டு தோட்ட‌த்திற்கு சென்றார் பாலாஜி. 
அங்கு சென்ற பாலாஜி அதிர்ச்சிய‌டைந்தார். ஒருப‌க்க‌ம் எம்ஜிஆருக்கு க‌டும் காய்ச்ச‌ல். மறுபுற‌ம் அவ‌ரை கொல்ல‌ காத்திருக்கும் கூட்ட‌ம். க‌வ‌லை அடைந்த ஜானகி அம்மையாரோ, த‌லைவ‌ரை அழைத்துச் செல்லக்கூடாது என்று பாலாஜியிட‌ம் வாத‌ம் செய்தார். 
உட‌னே பாலாஜி, த‌லைவ‌ரே! நீங்கள் மட்டும் இன்று கூட்ட‌த்திற்கு வ‌ர‌வில்லையென்றால் அந்த மாமர‌த்திலே தூக்கு போட்டுக்கொள்வேன் என்று கையைக்காட்ட‌, எம்ஜிஆர் மருத்துவ‌ர்க‌ள், ஜானகி அம்மையாரையும் ச‌மாதான‌ப்ப‌டுத்தி விட்டு காரில் ஏறிவிட்டார். கார் ப‌லவ‌ழியில் சுற்றி வ‌ந்து காஞ்சிபுர‌ம் வ‌ந்த‌டைந்தது. ஏற்கெனவே திட்ட‌மிட்ட‌ப‌டி எம்ஜிஆரை வ‌ய‌ல்வெளி வ‌ழியே 1/2 கி.மீ ந‌ட‌த்தியே கூட்டி வ‌ந்த‌ன‌ர். மேடையின் பின்புற‌ம் இருந்த ப‌ள்ளிவாச‌ல் காம்ப‌வுண்ட் கேட் வ‌ழியே எம்ஜிஆர் வ‌ந்து திடீரென மேடையில் தோன்றிய‌தும் ம‌க்க‌ள் ஆர‌வார‌த்திற்கு அளவேயில்லை. மக்களின் எழுச்சியையும் ச‌ந்தோஷ‌த்தையும் பார்த்த எம்ஜிஆர், பாலாஜியையே கூட்ட‌த்திற்கு த‌லைமையேற்க செய்தார். க‌ட்சி ஆரம்பித்து ஒருவார‌மே ஆகியிருந்த‌ நிலையில் எம்ஜிஆர் க‌ருப்பு சிவ‌ப்பு க‌ரைவேட்டியையே க‌ட்டியிருந்தார். தோளில் க‌ருப்பு சிவ‌ப்பு பார்ட‌ரில் துண்டும் இருந்த‌து. ப‌க்க‌த்து க‌ட்டிட‌த்தில் திராவ‌க‌ம் வீச காத்திருந்த கும்ப‌ல், இவ்வ‌ளவு ப‌ர‌ப‌ர‌ப்பான கூட்ட‌த்தில் திராவ‌க‌த்தை எம்ஜிஆர்மீது வீசிவிட்டு த‌ப்புவ‌து எளித‌ல்ல என்று முடிவு செய்து இட‌த்தை காலி செய்த‌ன‌ர்.
த‌லைவ‌ர்மீது மக்கள் க‌ருப்பு மற்றும் சிவ‌ப்பு துண்டுக‌ளை கீழேயிருந்து வீசின‌ர். அனைத்தையும் லாவ‌க‌மாக பிடித்த எம்ஜிஆரின் ஸ்டைலையும் வேக‌த்தையும் பார்த்த‌ மக்களின் கைத‌ட்ட‌லும், விசில் ச‌த்த‌மும் விண்ணை பிளந்த‌து. 
இது திமுக கூட்ட‌மா அல்ல‌து அண்ணா திமுக கூட்ட‌மா என விய‌க்கும‌ளவிற்கு மேடையில் க‌ருப்பு சிவ‌ப்பு துண்டுக‌ள் குவிந்து கிட‌ந்த‌து. அப்போதே திமுக என்றால் எம்ஜிஆர். எம்ஜிஆர் இல்லாத திமுக க‌தை முடிந்த‌து என ஆட்சியாளர்க‌ளுக்கு உரைத்த‌து. 
இந்த‌ ஆர‌வார‌ ச‌ந்தோஷத்தில் த‌லைவ‌ரின் காய்ச்ச‌ல் ப‌ற‌ந்தோடிய‌து. மாறாக த‌லைவ‌ரின் வ‌ளர்ச்சியை பிடிக்காத க‌ருணாநிதி உள்ளிட்ட அப்போதைய த‌மிழ‌க அர‌சிய‌ல் க‌ட்சித் த‌லைவ‌ர்க‌ளுக்கு காய்ச்ச‌ல் தொற்றிக் கொண்ட‌து.
எவ்வித‌ குறிப்புமின்றி, எம்ஜிஆர் " என‌து ர‌த்த‌த்தின் ர‌த்த‌மான உட‌ன்பிற‌ப்புக‌ளே! என ஆர‌ம்பித்து, நான் க‌ணக்கு கேட்ட‌து த‌வ‌றா? என்ற கேள்வியுட‌ன் திமுக வ‌ளர்ச்சிக்கு த‌ன்னுடைய ப‌ங்கு, திமுக செய்துவ‌ரும் ஊழ‌ல்க‌ள் என சுமார் இர‌ண்டு மணி நேர‌ம் (இர‌வு 10 மணிமுத‌ல் 12 மணிவ‌ரை) பேசிவிட்டு சென்றார். மறுநாள் அனைத்து தின‌ச‌ரிக‌ளிலும், எம்ஜிஆர் த‌லைப்பு செய்தி ஆனார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...