Saturday, December 26, 2020

இளையராஜா என்ற இமயத்துடன் கை கோர்த்து அற்புதமாக கொடுத்தவர்.

 இயக்குனர் பாசில் கேரள மாநிலத்தவராக இருந்தாலும் தமிழ் நாட்டில் இவரை தெரியாத ரசிகர்களே இல்லை என்று சொல்லலாம்

பூவே பூச்சூட வா, வருஷம் பதினாறு, அரங்கேற்ற வேலை, காதலுக்கு மரியாதை போன்ற மெகா ஹிட் பபங்களை இளையராஜா என்ற இமயத்துடன் கை கோர்த்து அற்புதமாக கொடுத்தவர்.
தமிழில், இளையராஜா என்ற ஆளுமைக்காக மட்டுமே படமெடுத்த இயக்குநர்களைப் பட்டியலிட்டால், அதில் பாசில் பெயர் நிச்சயம் இருக்கும். இளையராஜாவின் இசையியலுக்காகவே தமிழிலும் தனது மலையாளப் படைப்புகளை ரீமேக் செய்தவர். ‘நோக்காதே துாரத்து கண்ணும் நட்டு’ என்று மலையாளத்தில் இவர் கொடுத்த மெகா ஹிட், தமிழில் ‘பூவே பூச்சூடவா’ என்று ரீமேக் செய்யப்பட்டு, வெளியாக ஒரு வருடம் காத்திருந்தது. காரணம் என்ன…? ராஜாவின் இசை மீது அப்படி என்ன மோகம்? – பழைய நினைவுகளில் மூழ்கியபடி பேச ஆரம்பிக்கிறார் பாசில்.
“கல்லுாரி நாட்களில் நான், திலீப் குமார் மற்றும் சிவாஜியுடைய மிகப்பெரிய ரசிகன். மேற்படிப்பு படிக்கும்போது எங்கள் ஊர் டீக்கடைகளின் வழியாகத்தான் இளையராஜா அறிமுகம். கல்லுாரி முடிந்த நாட்களில் ‘செந்துாரப்பூவே’ பாடலை கேட்டுக் கிறங்கியிருந்தோம். 1985ல் ‘நோக்காதே துாரத்து கண்ணும் நட்டு’ படத்தை நான் முடித்திருந்தேன். அந்த படத்தை தமிழுக்கு கொண்டு போகும் ஆவல் வந்தது. ஆனால், அப்போது இளையராஜா பயங்கர பிஸி. கிட்டத்தட்ட ஒரு வருடம் அவருக்காகக் காத்திருந்தோம். அதன் பலனாக, ‘பூவே பூச்சூடவா… எந்தன் நெஞ்சில்…’ என்ற
அருமையான
பாடல் கிடைத்தது.
மலையாள வெர்ஷனில் இருக்கும் பாடலைக் கேட்ட இளையராஜா, ‘குரல் யாருடையது…?’ என்றார். ‘சித்ரா என்கிற ஒருவர் பாடியிருக்காங்க’ என்றேன். ‘அவங்களே தமிழிலும் பாடட்டும்’ என்றார். அதே நாளிலேயே கம்போஸிங் உட்கார்ந்தோம். ஆனால் எனக்கொரு சின்ன பயம். ‘பெரிய இசையமைப்பாளர். அவருடைய டியூன் படத்துக்குச் சரியாகப் பொருந்தவில்லை என்றால் என்ன செய்வது?” என்று யோசித்தேன். பொருத்தி வைத்த மாதிரி டியூன்களைக் கொடுத்தார். பாடல்களும் அற்புதமா வந்தன. ஸ்டூடியோவில் இருந்த மற்ற இசையாளர்களுக்கும் பாடல்கள் புடிச்சுப் போச்சு. எல்லோரும் கைத்தட்டினாங்க. ‘இந்த கைத்தட்டல் எனக்கா… சித்ராவுக்கா?” என இளையராஜா கேட்டார். அவருக்குத்தான் என எல்லோரும் சொன்னாங்க. ராஜா இடைமறித்து, ‘எனக்கும் இல்லை, சித்ராவுக்கும் இல்லை, இந்த கைத்தட்டல் அனைத்தும் எம்.எஸ்.வி. அண்ணாவுக்குத்தான்’ என்றார்.
அப்போது அவர் ‘பாசமலர்’ படமும், ‘மலர்ந்தும் மலராத…’ பாடலும் பாசத்தை வெளிப்படுத்திய மாதிரி எந்த படமும், பாடலும் வெளிப்படுத்தியிருக்க முடியாது. இது மாதிரியான இசைக் கோர்வைகளுக்கு எம்.எஸ்.வி. அண்ணாதான் எங்களுக்கு முன்னோடி’ என்றார். ’பூவே பூச்சூடவா…’ பாடலில்கூட, ‘மலர்ந்தும் மலராத…’ பாடலின் சாயல் கொஞ்சம் இருக்கும். பீக்கில் இருந்த இளையராஜா நினைத்திருந்தால், ‘எம்.எஸ்.வி.தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்பதை சுட்டிக்காட்டாமல் விட்டிருக்கலாம். ஆனால், பல பேர் முன்னிலையில் எம்.எஸ்.விக்கு கிளாப்ஸ் செய்யச் சொன்னார்.
எனக்கு என்ன அதிர்ஷ்டமோ தெரியலே ‘பழமுதிர்ச்சோலை எனக்காகத்தான்…’, ‘கங்கைக்கரை மன்னனடி…’, ‘என்னைத் தாலாட்ட வருவாளா…’, ‘ஆகாய வெண்ணிலாவே…’ என ராஜா கொடுத்த பல ஹிட் பாடல்கள் என் படத்தில் அமைந்தன. எல்லோரும், ‘இளையராஜா ஆயிரம் படங்களை எட்டிவிட்டார்’ என்று சொல்கிறார்கள்.
ஆனால், எப்பவுமே அவருக்குள் ஆயிரம் டியூன் உருவாகிக் கொண்டிருக்கும். ஆயிரத்தை அவர் எப்போதோ எட்டிவிட்டார்” என்று முடிக்கும்போது, பாசிலின் பார்வையை மறைக்கும் அளவுக்கு கண்களில் கோர்த்திருந்தது நீர்.
Image may contain: 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...