









சொர்ணாகர்ஷண பைரவர் , யோக பைரவர் , ஆதி பைரவர் , கால பைரவர் , உக்ர பைரவர் என்றெல்லாம் வணங்கப்படுகின்ற பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார். சிவாலயங்களில் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர் . ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும் , சந்திரனைத் தலையில் வைத்தும் , சூலாயுதம் , பாசக் கயிறு , அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும் காட்சி தருபவர்.
எட்டு திசைகளை காக்கும் அஷ்ட (எட்டு) பைரவர்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
1. அசிதாங்க பைரவர் :
காசி மாநகரில் விருத்தகாலர் கோவிலில் அருள்புரிகின்ற அசிதாங்க பைரவரே அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார்.
இவரின் வாகனம் அன்ன பறவை. ஒருவருடைய ஜாதகத்தில் குருவின் தோஷம் இருந்தால் அசிதாங்க பைரவரை வணங்கி வரலாம். சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
2. ருரு பைரவர் :
காசியில் உள்ள காமாட்சி கோவிலில் அருள் புரியும் ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். இவருடைய வாகனம் ரிஷபம் . சுக்கிரனின் கிரக தோஷம் உள்ளவர்கள் இந்த பைரவரை வணங்கி வரலாம். சப்த கன்னிகளில் மகேஸ்வரி இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
3. சண்ட பைரவர்:
முக்தி தரும் காசிமாநகரில் , துர்க்கை கோவிலில் அருள் செய்யும் சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். இவரது வாகனம் மயில். ஜாதகத்தில் உள்ள செவ்வாய் கிரக தோஷத்திற்காக இவரை வணங்கலாம். சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
4. குரோதன பைரவர்:
குரோதன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். இப்பைரவர் காசி மாநகரில் காமாட்சி கோவிலில் அருள்செய்கிறார். கருடனை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.
5. உன்மத்த பைரவர்:
காசியில் உள்ள பீம சண்டி கோவிலில் அருள்தரும் உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். இவரது வாகனம் குதிரை . புதன் கிரக தோசம் உள்ளவர்கள் ,இந்த பைரவரை வணங்கி வரலம். சப்த கன்னிகளில் ஒருத்தியான வாராஹி இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
6. கபால பைரவர்:
காசி மாநகரில் லாட் பசார் கோவிலில் அருள் தரும் கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். யானையை வாகனமாக கொண்டவர். சந்திர கிரக தோசம் உள்ளவர்கள் இந்த பைரவரை வணங்க வேண்டும். சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி இவருடைய சக்தி வடிவமாக விளங்குகிறாள்.
7. பீஷண பைரவர்:
காசி நகரில் உள்ள பூத பைரவ கோவிலில் பீஷண பைரவர் அருள்செய்கிறார். சிங்கத்தை வாகனமாக கொண்ட இவர் , அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். நவகிரகங்களில் கேது கிரக தோஷத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.
8. சம்ஹார பைரவர்:
சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். நாயை வாகனமாக கொண்ட இவர் ,காசி மாநகரில் த்ரிலோசன சங்கம் கோவிலில் அருள்செய்கிறார். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சண்டிகை விளங்குகிறாள்.
44
No comments:
Post a Comment