Monday, June 28, 2021

1991_தாராளமயம்: #நரசிம்மராவின்.. #பொருளாதார_மீட்பு..

 ஜூன் 20, 1991 அன்று மாலை, ..

அமைச்சரவைச் செயலாளர் நரேஷ் சந்திரா புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் நரசிம்மராவ் அவர்களைச் சந்தித்து ...
8 பக்க உயர் ரகசியக் குறிப்பொன்றை வழங்கினார்.
எந்தெந்ததப் பணிகளில் பிரதமர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தக் குறிப்பில் கூறப்பட்டிர்ந்தது.
ராவ் அந்தக் குறிப்பைப் படித்தபோது, ஆடிப்போனார்.
"இந்தியாவின் பொருளாதார நிலை அவ்வளவு மோசமாகவா இருக்கிறது" என்று அவர் கேட்டார்.
அதற்கு நரேஷ் சந்திராவின் பதில், 'இல்லை ஐயா, உண்மையில் இதைவிட மோசமாக இருக்கிறது.'
இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு, 1990 ஆகஸ்ட் மாதத்திற்குள் 311 கோடி டாலர்களாக குறைந்தது.
ஜனவரி 1991 இல், இந்தியாவின் கையிருப்பு வெறும் 89 கோடி டாலர் மட்டுமே.
அதாவது, இரண்டு வார இறக்குமதிக்குத் தேவையான அளவு மட்டுமே அந்நியச் செலாவணி இருந்தது.
1990 வளைகுடாப் போரினால் எண்ணெய் விலை மூன்று மடங்கு அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம்.
இதற்கு இரண்டாவது காரணம் என்னவென்றால், குவைத் மீது ஈராக் தாக்குதல் நடத்தியதால், இந்தியா தனது ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டியிருந்தது.
இதன் விளைவாக அவர்கள் அனுப்பிய அந்நியச் செலாவணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
மேலும், இந்தியாவின் அரசியல் ஸ்திரத் தன்மையின்மை மற்றும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளுக்கு எதிராக எழுந்த பொதுமக்களின் எதிர்ப்பும் பொருளாதாரச் சரிவுக்குப் பெரும் பங்காற்றின.
அதே நேரத்தில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், இந்திய வங்கிகளிலிருந்து தங்கள் பணத்தை எடுக்கத் தொடங்கினர்.
இது தவிர, எண்பதுகளில் இந்தியா வாங்கிய குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்தது.
ஆகஸ்ட் 1991 க்குள், பணவீக்கம் 16.7% ஆக உயர்ந்தது.
பிரதமர் பதவிக்கான போட்டியில் இருந்த பிரணாப் முகர்ஜி, நரசிம்மராவுக்கு ஆதரவளித்தார்.
தான் நிதியமைச்சராக நியமிக்கப்படும் நம்பிக்கையில் அவர் இருந்தார்.
ஜெய்ராம் ரமேஷிடம் பேசிய அவர், 'ஜெய்ராம், நீங்கள் என்னுடன் நார்த் பிளாக் அல்லது பி.வி.யுடன் சவுத் பிளாக்கில் பணியாற்றுவீர்கள்' என்றார்.
ஆனால் நரசிம்மராவின் எண்ணம் வேறாக இருந்தது.
தனது அமைச்சரவையில், ஒரு தொழில்துறைப் பொருளாதார நிபுணரே நிதியமைச்சராக இருப்பதைத் தாம் விரும்புவதாக,
அவர் தனது நண்பரான இந்திரா காந்தியின் முதன்மைச் செயலாளர் பி.சி. அலெக்சாண்டருக்குச் சுட்டிக்காட்டியிருந்தார்.
அவர் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர்களான ஐ.ஜி.படேல் மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரைக் குறிப்பிட்டிருந்தார்.
அலெக்சாண்டர் மன்மோகன் சிங்குக்கு ஆதரவாக இருந்தார்,
எனவே அவருக்கு மன்மோகன் சிங்கை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பி.சி. அலெக்சாண்டர் தனது சுயசரிதையான 'த்ரூ தி காரிடார்ஸ் ஆஃப் பவர் - ஆன் இன்சைடர்ஸ் ஸ்டோரி' இல்,
'ஜூன் 20 அன்று நான் மன்மோகன் சிங்கைத் தொலைபேசியில் அழைத்தேன்.
அவர் ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாகவும், இன்றிரவு தாமதமாகத் திரும்புவார் என்றும் அவரது ஊழியர் என்னிடம் கூறினார்.
ஜூன் 21 ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு நான் அவரை அழைத்தபோது, ​​அவரது பணியாளர், அவர் நன்றாக உறங்கிக்கொண்டிருப்பதாகவும் எழுப்ப முடியாது என்றும் கூறினார்.
என் வற்புறுத்தலின் பேரில், அவர் மன்மோகன் சிங்கை எழுப்பினார், அவர் தொலைபேசி இணைப்பில் வந்தார்.
உங்களை அவசியம் சந்திக்க வேண்டும் என்றும் உங்கள் வீட்டிற்கு இன்னும் சில நிமிடங்களில் வருகிறேன் என்றும் அவரிடம் சொன்னேன்.
நான் அவரது வீட்டிற்குச் சென்ற போது, மன்மோகன் சிங் மீண்டும் தூங்கச் சென்றிருந்தார்.
இருப்பினும், அவரை எப்படியோ மீண்டும் எழுப்பச் செய்து, நரசிம்மராவ் அவரை நிதியமைச்சராக்க விரும்பும் செய்தியை அவருக்குத் தெரிவித்தேன்.
அவர் என் கருத்தைக் கேட்டார்.
நான் அதற்கு எதிராக இருந்தால், இதுபோன்ற ஒரு அசாதாரண நேரத்தில் நான் உங்களை சந்திக்க வந்திருக்க மாட்டேன் என்று பதிலளித்தேன்." என்று எழுதியுள்ளார்.
பதவிப்பிரமாணம் செய்து கொள்வதற்கு முன், நரசிம்மராவ் மன்மோகன் சிங்கிடம், 'நான் உங்களுக்கு வேலை செய்ய முழு சுதந்திரத்தையும் தருவேன். ..
நமது கொள்கைகள் வெற்றிகரமாக இருந்தால், நாம் அனைவரும் அதற்குப் பெருமை கொள்வோம்.
ஆனால் நாம் தோல்வியுற்றால் நீங்கள் வெளியேற வேண்டியிருக்கும்.' என்று கூறியிருந்தார்.
நரசிம்மராவ் முன் இருந்த முதல் சவால் ரூபாயின் மதிப்புக் குறைப்பு.
நரசிம்மராவ் 1966 ஆம் ஆண்டில் இந்திரா காந்தியால் கொண்டுவரப்பட்ட ரூபாயின் மதிப்புக் குறைப்பு நடவடிக்கை,
இந்தியாவுக்கு ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது என்று நம்பிய ஒரு தலைமுறையைச் சேர்ந்தவர்.
25 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இதேபோன்ற முடிவை எடுக்க வேண்டி வரும் என்று அவர் நினைத்ததில்லை.
மன்மோகன் சிங் மிகவும் ரகசியமாக, கையால் எழுதப்பட்ட ஒரு குறிப்பை நரசிம்மராவிற்கு அனுப்பியிருந்தார்.
அதில் ரூபாயை மதிப்புக் குறைப்பு செய்யுமாறும் ஆனால் அதை இரண்டு கட்டங்களாகச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஜெய்ராம் ரமேஷ் தனது 'டூ த பிரிங்க் அண்ட் பேக்' புத்தகத்தில், 'குடியரசுத் தலைவர் வெங்கடராமன் இந்த முடிவுக்கு எதிராக இருந்தார்,
ஏனெனில் சிறுபான்மை அரசாங்கத்திற்கு இவ்வளவு பெரிய முடிவை எடுக்க உரிமை இல்லை என்று அவர் நினைத்தார்.
ரூபாயின் முதல் மதிப்புக் குறைப்பு ஜூலை 1, 1991 இல் நடந்தது.
48 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் ரூபாய் மதிப்பு குறைக்கப்பட்டது.
ஜூலை 3 காலை, நரசிம்மராவ் மன்மோகன் சிங்கை அழைத்து இரண்டாவது மதிப்பிழப்பை நிறுத்தச் சொன்னார்.
மன்மோகன் சிங் காலை 9.30 மணிக்கு ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜனை அழைத்தார்.
இரண்டாவது மதிப்பிழப்பு அரை மணி நேரத்திற்கு முன்பு செய்யப்பட்டுவிட்டது என்று ரங்கராஜன் கூறினார்.
மன்மோகன் சிங் உள்ளுக்குல் மகிழ்ந்தார்.
ஆனால் அவர் அதைப் பற்றி நரசிம்மராவிடம் தெரிவித்தபோது, ​​அவரால் நிறுத்த முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்.
நரசிம்மராவ் பிரதமரான இரண்டு வாரங்களுக்குப் பிறகு, மூடிய வாகனங்களின் ஒரு அணிவகுப்பு,
தெற்கு மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கியின் செல்லிலிருந்து வெளியேறியது.
அங்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசாங்கத்தின் தலைவர் அதில் செல்லக்கூடும் என்று ஊகிக்கும்படி இருந்தன.
நரசிம்மராவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வினய் சீதாபதி, அதில்,
'இந்த வாகனங்கள் 21 டன் தங்கத்துடன் சென்றன. 35 கி.மீ தூரத்தில் உள்ள சஹார் விமான நிலையத்தில் கான்வாய் நிறுத்தப்பட்டது,
அங்கு ஒரு ஹெவி லிஃப்ட் கார்கோ ஏர்லைன்ஸ் விமானம் அதை எடுக்க நிறுத்தப்பட்டது. இந்த தங்கம் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டு
இங்கிலாந்து வங்கியின் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலாக, நரசிம்மராவ் அரசாங்கம் பெற்ற டாலர்கள், இந்தியா வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதைத் தாமதப்படுத்த அனுமதித்தது.' என்று எழுதுகிறார்.
ஜூலை 24, 1991 அன்று டெல்லியில் பயங்கர வெப்பம் நிலவியது. மதியம் 12.50 மணிக்கு, மன்மோகன் சிங் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு,
கைத்தொழில் துறை அமைச்சர் பி.ஜே.குரியன் எழுந்து நின்று, 'ஐயா, தொழில்துறை கொள்கை குறித்து ஒரு அறிக்கையை சபையின் முன்வைக்கிறேன்.' என்றார்.
துறையின் கொள்கையில் செய்யப்பட்டிருந்த பெரும் மாற்றங்களைப் பார்க்கும் போது, இந்த அறிக்கையைத் துறை சார்ந்த அமைச்சர் முன்வைத்திருக்க வேண்டும்.
ஆனால், தொழில்துறை அமைச்சின் பணிகளை கவனித்து வரும் நரசிம்மராவ், அதிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார்.
இந்தக் கொள்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால்,
'இனிமேல் அனைத்துத் தொழில்களிலும் உரிமம் வழங்கும் விதி ரத்து செய்யப்படுகிறது.
18 தொழில்களில் மட்டுமே உரிமம் தொடரும், அவற்றின் விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.' என்பது தான்.
மற்றொரு மாற்றம் பெரிய நிறுவனங்களுக்கு இருந்த ஏகபோக எதிர்ப்புக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது.
மூன்றாவது புரட்சிகர மாற்றம் 34 தொழில்களில் அந்நிய முதலீட்டின் வரம்பை 40 சதவீதத்திலிருந்து 51 சதவீதமாக உயர்த்தியது.
சஞ்சய பாரு தனது '1991 ஹவ் பி வி நரசிம்மராவ் மேட் ஹிஸ்டரி' என்ற புத்தகத்தில்,
'நேரு மற்றும் இந்திராவுக்கு மரியாதை செலுத்திய பின்னர், இந்தியாவின் தொழில்மயமாக்கலுக்கு அவர்கள் செய்த பங்களிப்பை நினைவுகூர்ந்த பின்னர்,
நரசிம்மராவ் சோசலிசத்தின் பெயரில் ஒரு நொடியில் தொழில்துறை கொள்கையில் ஒரு வரலாறு படைத்து விட்டார்'
காங்கிரசில் இதை எதிர்ப்பவர்களை அமைதிப்படுத்த, இதற்கு அளிக்கப்பட்ட பெயர்,
'தொடரும் மாற்றம்'.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் பரபரப்பில் இது மக்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.
ராவ் இதை நன்கு திட்டமிட்டு செய்தார்.' என்று எழுதுகிறார்.
பிறகு தனது உரையைத் தொடங்கினார். 'தனது பட்ஜெட்டின் மூலம், ஒரு குடும்பத்தின் சித்தாந்தத்தையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட அவர்,
தனது உரை முழுவதும், அதே குடும்பத்தைப்பல முறை நினைவு கூர்ந்தார்.' என எழுதுகிறார் ஜெய்ராம் ரமேஷ்.
மன்மோஹன் சிங், உர மானியத்தை 40 சதவீதம் குறைத்தது மட்டுமல்லாமல், தனது பட்ஜெட்டில் சர்க்கரை மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையையும் அதிகரித்தார்.
'அதற்கான நேரம் வந்து விட்டால், எந்தச் சிந்தனையையும் யாராலும் தடுக்க முடியாது' என்ற விக்டர் ஹ்யூகோவின் புகழ்பெற்ற வரியுடன் அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
ஒரே நாளில், நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் இணைந்து, பொதுத்துறையின் ஏகபோக ஆதிக்கம்,
கட்டுப்படுத்தப்பட்ட தனியார் வர்த்தகம், உலகச் சந்தையிலிருந்து தனிமைப்படுத்திக்கொள்ளுதல் ஆகிய லைசன்ஸ் ராஜ்ஜியத்தின் மூன்று தூண்களையும் உடைத்தெறிந்தனர்.
வினய் சீதாபதி, 'நரசிம்மராவ் தனது கடந்த கால அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டார்.
ஒரு புதிய மாற்றத்தை அறிமுகப்படுத்தும் உற்சாகத்தை வெளிக்காட்டிக் கொள்ளவுமில்லை,
அதற்கான பெருமையைத் தாமே ஏற்க விரும்பவும் இல்லை, தான் வகுத்த கொள்கையை அவையில் தாமே முன்வைக்கக் கூட அவர் முன்வரவில்லை.
மன்மோகன் சிங்கின் பட்ஜெட் உரையின் போது, ​​அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் அவருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அவர்,
அன்று இரவே, மொரீஷியஸ் பிரதமர் அனிருத் ஜுக்நாத்திற்கு விருந்தளித்தார்.
இந்தப் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தது மட்டுமல்லாமல்,
தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் கூட அவருக்கு ஆதரவளிக்க முன்வரவில்லை.
காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியில் மணிசங்கர் அய்யர் மற்றும் நாதுராம் மிர்தா ஆகியோர் மட்டுமே நரசிம்மராவிற்கு வெளிப்படையாக ஆதரவளித்தனர்.
ரூபாயின் மதிப்புக் குறைப்புக்கு அடுத்த நாள், ஜூலை 4 ம் தேதி, மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் அரசாங்கம் கொடுப்பனவு நிலுவைக்கு மாற்று அணுகுமுறை என்று ஒரு வரைவை வழங்கியது.
கம்யூனிஸ்ட் தலைவர் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து பெறப்பட்ட கடனை, தாகமுள்ள ஒருவர், குடிக்க, வேறு எதுவுமே இல்லை என்று ஒரு குவளை விஷம் குடிப்பதற்கு ஒப்பிட்டார்.
தமது பொருளாதாரக் கொள்கைகளின் காரணமாக ஒரு தொழிலாளியின் வேலை கூட பறிபோகாது என்று கம்யூனிஸ்ட்டுகளுக்கு நரசிம்மராவ் உறுதியளித்தார்.
மறுபுறம், தொழிலதிபர்களின் அச்சத்தை அகற்ற, நரசிம்மராவ் அனைத்து பெரிய தொழிலதிபர்களையும் சந்திக்க நேரம் ஒதுக்கினார்.
நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜூலை 26 ஆம் தேதி காலை 7 மணிக்கு திருபாய் அம்பானியைச் சந்தித்ததாக ராவின் நியமன நாட்குறிப்பு கூறுகிறது.
ஆகஸ்ட் 16 அன்று மீண்டும் அவரைச் சந்தித்துள்ளார்.
இது தவிர, பல பெரிய தொழிலதிபர்களைச் சந்திக்கத் தனது பத்திரிகைச் செயலாளர் பி.வி.ஆர் கே பிரசாத் மற்றும் முதன்மைச் செயலாளர் அமர்நாத் வர்மா ஆகியோரை அனுப்பினார்.
இந்தியாவின் மிக உயர்ந்த சிவில் விருதான பாரத் ரத்னாவை பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி டாடாவுக்கு வழங்கினார்.
ஒரு தொழிலதிபருக்கு இந்த மரியாதை வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
1992-ன் மத்தியில், இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு இயல்பு நிலைக்கு உயர்ந்தது.
நரசிம்ம ராவின் அரசியல் அறிவு காரணமாக, ஜவஹர்லால் நேருவின் காலத்துக்குப் பிறகு மிகப்பெரிய பொருளாதாரச் சீர்திருத்தம் சாத்தியமானது.
இந்த மாற்றம் ஒரு நிலையான மாற்றமாகவும் திகழ்கிறது. இதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.
ஜெய்ராம் ரமேஷ், நரசிம்மராவை சீனத் தலைவர் டெங் சியாவ் பிங்குடன் ஒப்பிட்டார்.
'இருவரும் வயதான தலைவர்கள். அவர்களின் வாழ்க்கையில் பல ஏற்ற தாழ்வுகள், குறிப்பாகத் தாழ்வுகளே அதிகம் இருந்தன,
ஆனால் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததும், இருவரும் தங்கள் அடையாளத்தை நாலாபுறமும் பதித்துச் சென்றனர்.
நரசிம்ம ராவ் அதை ஜூலை 1991 இல் செய்தார்,
டெங் முதலில் 1978-லும், பின்னர் 1992-லும் செய்தார். மாவோவின் தீவிரக் கொள்கைகளை டெங் முற்றிலுமாக முறியடித்தார்.​​
இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையின் சீர்திருத்தத்திற்கு ராவ் களம் அமைத்தார்,
இது சில ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை கூட செய்து பார்க்க முடியாதது.' என்று அவர் எழுதியுள்ளார்.
1988 ல் ராஜீவ் காந்தி சீனாவுக்குச் சென்றபோது, ​​வெளியுறவு அமைச்சர் நரசிம்ம ராவ் அவருடன் இருந்தார்.
ஆனால், சீனத் தலைவர் டெங் சியாவ் பிங்குடனான சந்திப்புகளில், அவர் தனது வெளியுறவு அமைச்சர் நரசிம்மராவை ஒதுக்கி வைத்தார்.
அதே ராவ் பின்னர் இந்தியாவின் டெங் சியாவ் பிங் என அழைக்கப்பட்டார்.
..
...
May be an image of 5 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...