Friday, June 25, 2021

பாடல், இசையமைப்பாளர்களுக்காகப் படங்கள் ஓடின அன்று; இன்று அந்நிலை இல்லையே?

 ♪ பண்ணைப்புரம் ‘ராசையா’, மேஸ்ட்ரோ இளையராஜாவாக மாறியதை எப்படிப் பின்னோக்கிப் பார்க்கிறீர்கள்?

♫ ‘மேஸ்ட்ரோ’வாக இருந்தாலும் பண்ணைப்புரத்துச் சிறுவனாகத்தான் இப்போதும் என்னைப் பார்க்கிறேன்.
♪ உங்களையும் பிரமிக்க வைத்த இசையமைப்பாளர்?
♫ கடவுள்தான். அவர் ஒரே தாளத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன் எனக் கோள்களைச் சுற்ற வைத்திருக்கிறார். ஒரு சுற்று ‘சரிகமபதநி’ எனில், ஒவ்வொரு கிரகத்தையும் ஒவ்வொரு தாளத்தில் சீராக சுற்ற வைக்கிறார். படைப்புகளில், என்னைப்போல் நீ இல்லை; உன்னைப்போல நான் இல்லை; கல்யாணி ராகம் மாதிரி தோடி ராகம் இல்லை; தோடி மாதிரி கல்யாணி இல்லை; ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்கிறது. அதனால் இறைவன்தான் எனக்குப்பிடித்த இசையமைப்பாளர்.
♪ திரைப்படத்தில் நடித்திருக்கலாம் என எண்ணியது உண்டா?
♫ நான் இப்போது நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்பது தெரியவில்லையா உங்களுக்கு?
♪ உங்கள் இசையில் வார்த்தைகளுக்கும், இசைக்கும் சமவாய்ப்பு கொடுத்தீர்கள். இன்று கணினி இசைக்கருவிகளின் ஆக்கிரமிப்புகளால், வார்த்தைகள் சிதைக்கப்படுவது பற்றி..?
♫ யார் சிதைக்கிறார்களோ, யாருடைய இசையில் இது நடந்துகொண்டிருக்கிறதோ, அவர்கள் சொல்லவேண்டிய பதிலை நான் எப்படி சொல்வது? ஒரு பாடல் வெற்றியடைந்தபின், இம்முறைதான் சரியானது என அவர்கள் கூறினால், என்ன செய்ய முடியும்?
♪ நீங்கள் இசையமைக்க அதிக நேரம் எடுத்துக்கொண்ட படம், பாடல்?
♫ ஒரு படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசைக்குறிப்பு எழுதி முடிக்க எனக்கு 30 நிமிடங்கள் ஆகும். அதைப்பதிவு (ரிக்கார்டிங்) செய்யும்முன், இசைக்குறிப்புகளை இசைக்கலைஞர்களுக்கு விநியோகிக்க, ஒத்திகை பார்க்க அதிக நேரம் ஆகும். அதிக நேரம் எடுத்துக்கொள்வதால் ஒரு பாடல் பிரபலமாகும் எனக்கூறமுடியாது. குறைந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட பாடல், வெற்றிபெறாது என சொல்ல முடியாது. மலையாளத்தில் வெளியான ‘குரு’ படத்தில், உயர்ந்த கருத்துகள் சொல்லப்படாவிட்டாலும்கூட, கதைக்காக அதில் 5 பாடல்களுக்கும், பின்னணி இசைக்கும் அதிகபட்சமாக 25 நாட்கள் எடுத்துக்கொண்டேன்.
♪ பாடல், இசையமைப்பாளர்களுக்காகப் படங்கள் ஓடின அன்று; இன்று அந்நிலை இல்லையே?
♫ நல்ல இசை இருக்கும் படத்தைத்தான் பார்க்கவேண்டும் என முடிவு செய்துவிட்டால், இக்கேள்வி எழாது.
♪ தமிழ் சினிமாவில் முதன்முதலில், ’புன்னகை மன்னன்’, ’விக்ரம்’ படங்களில் கணினி இசையைத் துவக்கி வைத்தீர்கள். அதுவே இன்று ஆக்ரமித்து உள்ளது. மண்ணின் மரபு சார்ந்த இசை பின்தள்ளப்பட்டு, மேற்கத்திய இசை ஆக்ரமித்துள்ளதே?
♫ கணினிமயமாக இருந்தால் என்ன, எதுவாக இருந்தால் என்ன? உள்ளுக்குள் இருக்கும் இசையைப் பாருங்கள். எங்கு சென்றாலும், எந்த உயரத்தில் இருந்தாலும் பறந்தாலும், நம் பாதம் தரையில் பட்டுத்தானே ஆகவேண்டும்?
♪ இளையராஜாவின் புது இசைவடிவம் எப்போது?
♫ எந்த நிமிடத்தில் எப்போது எனது இசை புதிதாக இல்லையோ, அப்போது என்னிடம் கேளுங்கள்.
♪ இசைக்கும் கைகள் எழுதவும் துவங்கிவிட்டதே? இது இசையமைப்பாளர்களால் இயலாத விஷயம். இந்த எழுத்து வல்லமை எப்படி வந்தது?
♫ சினிமாப்பாடல்களில் ஓரிரு வார்த்தைகளை பல்லவியாகக் கொடுப்பது வழக்கம். இப்படி, என்னுடன் வேலை செய்த கவிஞர்களுக்கு, பல்லவிகளைக் கொடுத்திருக்கிறேன். ‘இதயகோயில்’ படத்தில், ‘இதயம் ஒரு கோயில்…’ பாடலுக்கு மெட்டு ஒத்துவரவில்லை. நானே அந்தப்பாடலை எழுதினேன். அன்றிலிருந்து எழுத்தில் ஆர்வம் பிறந்தது. பன்னிரு திருமுறை, சங்க இலக்கியம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படித்துப் பார்த்தபின், ‘அடடா.. என்னமாதிரியான இலக்கியங்கள் இருக்கின்றன’ என வியந்து கற்றேன். ஒரு பாடலைப்படிக்கும்போது உள்வாங்கும்தன்மை, அதன் ஆழம், விசாலம், எதுகை, மோனை, அழகுணர்ச்சியை இயல்பாக பார்க்கும் தன்மை வாய்த்தால் யாரும் பாடல் எழுதலாம். காட்டு மரம் புல்லாங்குழல் ஆகவில்லையா? குழலாக இருந்தால் அதில் இசை வரவேண்டும். எத்தனையோ பேர் தமிழறிந்து புல்லாங்குழல்களாக இருக்கிறார்கள். புல்லாங்குழலில் காற்றை ஊதும்போது, விரல்களை எந்த நேரத்தில் ஏற்றி இறக்க வேண்டும் என்பதை இயக்க ஒருவன் தேவை. அவன்தான் இறைவன். அவனது விரல்களின் ஏற்ற இறக்கங்கள், என்னுள் பாடலாக, இசையாக, புத்தகமாக வெளிவருகிறது.
.....இசைஞானியிடமிருந்து...
May be an image of 2 people and text that says 'எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்..? இசைஞானி இளையராஜாவுடன் சில நிமிடங்கள்!'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...