Tuesday, June 28, 2022

அது விலை மதிப்புள்ளது.

 லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் என்னுடைய கடை நகைகளின் விலையை மற்ற நகை கடைகளின் விலையோடு 'கம்பேர் பண்ணுங்க' என்று சொல்கிறாரே, அப்படியானால் மற்ற அனைவரும் மக்களை ஏமாற்றுகிறார்களா? ஏன் பிற கடைக்காரர்கள் இதற்கு மாற்றாக, சரியான விளம்பரத்தை கொடுக்கவில்லை?

துணி எடுத்து தையல் கலைஞரிடம் கொடுத்து தைக்க சொல்லும் போது துணி வீணாகும். வீணான துணியை கொடுங்கள் என்றால் சந்தோஷமாக கொடுப்பார். நாம் கேட்பதில்லை. ஏனெனில் அதற்கு மறு விலை இல்லை.
ஆனால் தங்கம் அப்படி அல்ல. நகை என்பது தங்கம் வாங்குதல், அதை செய்பவரை தேடிச் சென்று நகை செய்ய செய்கூலி கொடுத்து செய்ய சொல்லுதல் என்பன உள்ளிட்டது. அவ்வாறு செய்யும் போது தங்கம் சேதாரம் ஆகும் என்றும் சொல்கிறார்கள். அந்த சேதார தங்கத்தை என்னிடம் கொடு என்று எவரும் கேட்பதில்லை, கேட்டாலும் கொடுக்கப்படுவதில்லை.
சேதார தங்கம், சேதார துணியை போல் எதற்கும் உபயோகம் ஆகாத ஒன்றல்ல. அது விலை மதிப்புள்ளது. சேதார தங்கத்தை சேகரித்து உருக்கி நகை செய்ய உபயோகிக்கலாம். அதன் மதிப்பை தங்க நகை வாங்குபவர் எவரும் உணர்ந்ததாக தெரியவில்லை. நகை வியாபாரிகளும் சேதாரத்தொகை இவ்வளவு, அந்த சேதார தங்கம் இது, இந்தாருங்கள் பெற்றுக் கொள்ளுங்கள் என வாடிக்கையாளரிடம் தருவதில்லை. சேதாரம் என்றால், ஏதோ இந்த சேதார தங்கம் காற்றில் கரைந்து விடும் ஒரு வஸ்து போல என்று அதை கேட்டு பெறுவதும் இல்லை.
சேதாரம் என்ற பெயரில் நாம் முட்டாளாக்கப்படுகிறோம் என்ற எண்ணம் வாடிக்கையாளர்களுக்கு வந்து விட கூடாது என்பதற்காக நகைக்கடை விளம்பரம் அச்சடிக்கப்பட்ட கைப்பை, கட்ட பை, மணிபர்ஸ், டிராவல் பேக் என வகைவகையாய் ஏமாறும்/ஏமாற்றும் சேதார தொகைக்கேற்ப வழங்கப்படுவது உண்டு. வாடிக்கையாளர்களும் அவர்களின் இந்த விளம்பர வடிவுகளை தூக்கிக்கொண்டு ஊருக்குள் அல்லது ஊர்ஊராய் அந்தந்த நகைக்கடைகளின் சம்பளமில்லா விற்பனை பிரதிநிதிகளாய் அலைவதுண்டு - இதெல்லாம் அறியாமல்.
எல்லா நகை கடைகளும் சொல்லி வைத்தாற்போல் சேதார கணக்கில் செமத்தியாய் சொதப்புகின்றன. சேதார தங்கத்துக்கு பணம் வாங்குகின்றன - ஆனால் சேதார தங்கத்தை கொடுப்பதில்லை. மக்களும் ஏமாறுகிறோம் என்ற சிந்தனையின்றியே அதை விட்டு விடுகிறார்கள்.
பேண்ட் தைக்க இவ்வளவு, ஷர்ட் தைக்க இவ்வளவு, ஜாக்கெட் தைக்க இவ்வளவு என்று தையல் கலைஞர்கள் நம்மிடம் பெறும் தொகைக்கு வெளிப்படைத்தன்மை உண்டு. தங்க நகை கலைஞர் இன்னின்ன வகை நகைகளுக்கு இவ்வளவு பெறுவார் என்ற வெளிப்படை தன்மை இல்லை. இந்த நகைக்கடைகளும் அவர்களுக்கு எவ்வளவு செய்கூலி கொடுத்தன என்பதும் நாம் அறிய இயலாத ஒன்று.
தங்க விலை மட்டுமே நாம் வெளிப்படையாக அறிய இயலும் ஒன்று. செய்கூலி நாம் அறியவியலாத ஒன்று. சேதாரம் நாம் பெற இயலாத ஒன்று. இந்த மூன்றையும் ஒன்று சேர்த்து கோம்போவாக கையில் தரும் நகைக்கடைகள் வைத்ததுதான் விலை. அவர்களிடம் கெஞ்சி கெஞ்சி பெறும் அற்ப விலைக்கழிவால் வாடிக்கையாளருக்கு அதீத திருப்தி - ஜென்ம சாபல்யம் பெற்றதைப்போல்.
இதோடு கல்லுக்கு தங்கத்தொகை, கல்லை ஒட்டும் மெழுகுக்கு தங்கத்தொகை, மெலுகுக்கும் தங்கத்துக்கும் இடையே கண்ணுக்கு தெரியாமல் வைக்கப்படும் வேறு வகை உலோகத்துக்காக தங்கத்தொகை என சித்து வேலைகளும் நடப்பதுண்டு. இந்த சித்து வேளைகள் கூடக்கூட நகைகள் விலை குறைவாயிருக்கும். அவ்வளவுதான்.
இது வியாபார சூட்சுமம். எல்லோருக்கும் தெரியும். ஒருவர் ஒரு மாதிரி குரல் கொடுக்கிறார் என்பதற்காக அவரை சந்திக்கு இழுத்தால், அவர் எல்லோரையும் சந்திக்கு இழுத்து விட்டால் என்ன செய்வது என்ற பய உணர்வு கூட ஏனையோர் அமைதியாய் இருக்க காரணமாய் இருக்கலாம்.
இதே போல் ரெடிமேட் துணி விற்பனை நிலையங்களும், துணி விலை இவ்வளவு, தையல் கூலி இவ்வளவு, துணி சேதாரம் இவ்வளவு என்று தனித்தனியாக விபரம் வழங்க வேண்டும் என்று எவரேனும் நினைத்தால் அது பைத்தியக்காரத்தனமாக கருதப்படும். ஆனால் தங்க நகை வியாபாரத்தில் அது தான் ஹைலைட்.
எனக்கு ஒரு ஆசை - நகை வியாபாரத்துக்கு ஒரு நியாயம் ரெடிமேட் துணி வியாபாரத்துக்கு ஒரு நியாயம் என்றில்லாமல் இரண்டுக்குமே சமமாய் வியாபார யுக்தி இருக்க வேண்டும் என்று.
என்னை பொறுத்தவரையில் சேதாரம் என்பது பகல் கொள்ளை. அதை கேள்வி கேட்காத ஜனங்கள் ஜடங்கள். கண்டு கொள்ளாத சட்ட பூர்வ அமைப்புகள் வீண்.
புத்தியை பிளக்கும் சக்தி விளம்பரத்திற்கு உண்டு. விளம்பரத்தில் வீழும் புத்தி மக்களுக்குண்டு.எப்படியும் விளம்பரம் செய்து எந்த வகையிலாவது வியாபாரம் செய்ய முனைவோரை தடுக்க வழி கிடையாது. சிக்கியவன் கூக்கிரலிட்ட செய்தி கிடைத்தால் அதை முடிந்த வரை நட்பு-சுற்றம் வட்டாரத்திற்கு பகிர்ந்து விட்டு அதே கடையில் அடைக்கலமாகும் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கில்.
சேதார கணக்கை சீர் திருத்த வேண்டியது அவசியம். மற்ற எந்த தொழில்களிலும் சொல்லப்படாத செய்கூலி, சேதாரம் தங்கத் தொழிலில் மட்டும் பிரதானமாய் சொல்லப்படுவதேன். அப்படி என்ன தங்கமான தொழில் அது.
May be an image of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...