Monday, June 27, 2022

தந்தை உங்களை நிந்தித்து விட்டார்.

 தன் பிள்ளை ப்ரஹ்லாதனை தந்தை

ஹிரண்யகசிபுவே கொல்ல முற்பட்ட போது, அவனை கொன்று தம் பரம்பக்தனை காக்கும் பொருட்டு நரசிம்மர் தூணில் இருந்து வெளிப்பட்டார்.
அதிபயங்கர உருவம். சிங்க முகம்...மனித உடல்...இதுவரை பார்க்காத வித்தியாசமான அமைப்பு. இதைப் பார்த்தார்களோ இல்லையோ...இரண்யனின் பணியாட்கள் தங்கள் ஆயுதங்களைப் போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
தனிமையில் நின்ற ஹிரண்யகசிபுவை பகவான் அப்படியே தூக்கி மடியில் வைத்தனர். குடலைப்பிடுங்கி மாலையாகப் போட்டார். இதைக் கண்டு வானவர்களே நடுங்கினர். அவர்கள் நரசிம்மரைத் துதித்து சாந்தியாகும்படி வேண்டினர். பயனில்லை.
லக்ஷ்மி அவர் அருகில் செல்ல பயந்தாள். என் கணவரை இப்படி ஒரு கோலத்தில் நான் பார்த்ததே இல்லை. முதலில் யாரையாவது அனுப்பி அவரை சாந்தமாக்குங்கள், பிறகு நான் அருகில் செல்கிறேன், என்றாள்.
அவர் அருகில் செல்லும் தகுதி அவரது பக்தனான ப்ரஹ்லாதனுக்கு மட்டுமே இருந்தது.
தேவர்கள் அவனை நரசிம்மர் அருகில் அனுப்பினர். ப்ரஹ்லாதன் அவரைக் கண்டு கலங்கவில்லை. அவனுக்காகத் தானே அவர் அங்கு வந்திருக்கிறார்!
தன்னருகே வந்த ப்ரஹ்லாதனை நரசிம்மர் அள்ளி எடுத்தார். மடியில் வைத்து நாக்கால் நக்கினார்.
ப்ரஹ்லாதா ! என்னை மன்னிப்பாயா? என்றார். அவனுக்கு தூக்கி வாரிபோட்டது. சுவாமி! தாங்கள் ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையைச் சொல்லுகிறீர்கள்? என்றான். உன்னை நான் அதிகமாகவே சோதித்து விட்டேன். சிறுவனான நீ, என் மீது கொண்ட பக்தியில் உறுதியாய் நிற்பதற்காக பல கஷ்டங்களை அனுபவித்து விட்டாய். உன்னைக் காப்பாற்ற மிகவும் தாமதமாக வந்திருக்கிறேன். அதற்காகத்தான் மன்னிப்பு, என்றார் நரசிம்மர்.
ப்ரஹ்லாதனுக்கு கண்ணீர் வந்துவிட்டது. மகனே! என்னிடம் ஏதாவது வரம் கேள், என்ற நரசிம்மரிடம், ப்ரஹ்லாதன் , ஐயனே! ஆசைகள் என் மனதில் தோன்றவே கூடாது, என்றான். பணம் இருக்கிறது, படிப்பு இருக்கிறது. ஆனால், ஆசை வேண்டாம் என்கிறான் ப்ரஹ்லாதன் . குருகுலத்தில் அவன் கற்றது சம்பாதிக்கவும், நாடாளவும் மட்டும் அல்ல!
படித்தால் மட்டும் போதாது. பண்பையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். ப்ரஹ்லாதனின் இந்தப் பேச்சு நரசிம்மரின் மனதை உருக்கிவிட்டது.
பகவானை கண்டு பக்தன் தான் உருகுவான். இங்கோ கோபமாய் வந்து, வேகமாய் இரண்யனின் உயிரெடுத்த பகவான் பக்தனைக் கண்டு உருகிப் போனான். இந்த சின்னவயதில் எவ்வளவு நல்ல மனது! ஆசை வேண்டாம் என்கிறானே!
ஆனாலும், அவர் விடவில்லை. இல்லையில்லை!
ஏதாவது நீ கேட்டுத்தான் ஆக வேண்டும், நரசிம்மர் விடாமல் கெஞ்சினார். பகவான் இப்படி சொல்கிறார் என்றால், தன் மனதில் ஏதோ ஆசை இருக்கத்தான் வேண்டும் என்று முடிவெடுத்த ப்ரஹ்லாதன் , இறைவா! என் தந்தை உங்களை நிந்தித்து விட்டார். அதற்காக அவரைத் தண்டித்து விடாதீர்கள். அவருக்கு வைகுண்டம் அளியுங்கள், என்றான். நரசிம்மர் அவனிடம், ப்ரஹ்லாதா ! உன் தந்தை மட்டுமல்ல! உன்னைப் போல நல்ல பிள்ளைகளைப் பெற்ற தந்தையர் தவறே செய்தாலும், அவர்கள் நல்ல கதியை அடைவர். அவர்களின் 21 தலைமுறையினரும் புனிதமடைவர், என்றார். தந்தை கொடுமை செய்தாரே என்பதற்காக அவரை பழிவாங்கும் உணர்வு ப்ரஹ்லாதனிடம் இல்லை.
நம் அடுத்த சந்ததியினருக்கு இந்த ஆன்மீக நெறியின் சரணாகதி தத்துவத்தை வங்கி இருப்பு போல சேர்த்து வைக்க வேண்டிய கடமை நம்முடைய இல்லையா?
May be an illustration of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...