Thursday, June 23, 2022

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நடந்தது என்ன?

 பரபரப்பான சூழ்நிலையில் கூடிய, அ.தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், கூச்சல் குழப்பத்துக்கு இடையே, 40 நிமிடங்களில் முடிந்தது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த 23 தீர்மானங்கள் அடியோடு நிராகரிக்கப்பட்டன. ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற, அடுத்த மாதம் 11ம் தேதி பொதுக்குழு மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இம்மாதம் 14ம் தேதி நடந்த மாவட்ட செயலர்கள் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.



ஒற்றைத் தலைமை


இதற்கு, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் சில மாவட்ட செயலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
கட்சியில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள், ஒற்றைத் தலைமைக்கும், அந்த பதவிக்கு பழனிசாமி வர வேண்டும் என்பதற்கும் ஆதரவு தெரிவித்தனர். பொதுக்குழுவில் அதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவும் முடிவு செய்தனர்.

 அ.தி.மு.க., பொதுக்குழுவில் நடந்தது என்ன?


இதனால் ஏற்பட்ட நெருக்கடியை சமாளிக்க, பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழுவை ஒத்தி வைக்க வலியுறுத்தினர். பழனிசாமி நிராகரிக்கவே, பொதுக்குழு நடத்த தடை விதிக்க வேண்டும் என, காவல் துறையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மனு கொடுத்தனர்.
அதை போலீசாரும் நிராகரித்ததால், பொதுக்குழு கூட்டத்துக்கும், கட்சி சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் தடை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, நேற்று முன்தினம் விசாரித்தார். 'பொதுக்குழு நடத்தும் முறையில் நீதிமன்றம் குறுக்கிட முடியாது' எனக் கூறி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்தார். இதை எதிர்த்து பன்னீர்செல்வம் சார்பில், அ.தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு நள்ளிரவு வரை விசாரித்தது. விசாரணை முடிவில், பொதுக்குழு நடத்த அனுமதி அளித்ததுடன், 'பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்த, 23 தீர்மானங்களை மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களை ஆலோசித்தாலும் எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என, நேற்று காலை
தீர்ப்பளித்தனர்.இச்சூழலில், நேற்று காலை, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், திட்டமிட்டபடி பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் காலை 7:00 மணியில் இருந்து மண்டபத்திற்கு வந்தனர். காலை 10:30 மணிக்கு பன்னீர்செல்வம் வந்தார்.


யாரும் பேசவில்லை



அவருக்கு எதிராக, 'ஒற்றைத் தலைமை வேண்டும்' எனக் கோஷம் எழுப்பினர். அவரது ஆதரவாளர்கள் சிலர், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.அவரிடம் கட்சி நிர்வாகிகள் யாரும் பேசவில்லை.
அரங்கிற்குள் அமர்ந்திருந்த பொதுக்குழு உறுப்பினர்கள், 'வேண்டும் வேண்டும் ஒற்றைத் தலைமை வேண்டும்; பழனிசாமி தான் வேண்டும்; வேண்டாம் வேண்டாம் இரட்டைத் தலைமை வேண்டாம்; ஓ.பி.எஸ்., ஓடிப் போ' என, கோஷங்கள் எழுப்பினர்.
வைத்திலிங்கம் மேடைக்கு வந்தபோது, 'துரோகி' எனக் கோஷம் எழுப்பினர். எனவே, பன்னீர்செல்வமும், அவரும் மேடைக்கு செல்லாமல் கீழே நின்றிருந்தனர். காலை 11:20 மணிக்கு பழனிசாமி வந்தார். அவருக்கு மேளதாளங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.


மலர் துாவி மரியாதை



மண்டபத்திற்குள் 11:29 மணிக்கு நுழைந்தார். கட்சியினர், அவரை வாழ்த்தி கோஷமிட்டனர். அவர் மேடைக்கு வந்ததும், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதைத் தொடர்ந்து, பனனீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மேடைக்கு வந்தனர்.அனைவரும் மேடையில் அமர்ந்தனர். அதன் பின் எழுந்து சென்று, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் துவங்குவதாக அறிவித்தார்.'கூட்டத்தை தற்காலிக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நடத்தி தர வேண்டும்' என, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அப்போது, அவருக்கு எதிராக நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர்.


தீர்மானங்கள் நிராகரிப்பு



அதைத் தொடர்ந்து, பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை, இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வழிமொழிந்தார். கூட்டம் துவங்கியது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஒலிபெருக்கி முன்பு வந்து, 'தீர்மானங்கள் அனைத்தையும், பொதுக்குழு நிராகரிக்கிறது' என அறிவித்தார். அதை வரவேற்று, அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.அதன்பின், முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்புரை ஆற்றினார். பன்னீர்செல்வம் பெயரை உச்சரிக்கவில்லை. பின், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எழுந்து பேசியதாவது:பொதுக்குழுவில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை, அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நிராகரித்து விட்டனர். அப்படி நிராகரித்து விட்ட தீர்மானத்திற்கு பின்பு, அவர்கள் வைக்கிற ஒரே ஒரு கோரிக்கை ஒற்றைத் தலைமை வர வேண்டும் என்பது தான். அந்த ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து, அடுத்து எப்போது கட்சி பொதுக்குழுவை தலைமை கூட்டுகிறதோ, அப்போது அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.

அடுத்து முன்னாள் அமைச்சர் செம்மலை, இரங்கல் தீர்மானங்களை வாசித்தார். முன்னாள் கவர்னர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ஐக்கிய அரபு எமிரேட் அதிபர், பிரபல பின்னணிப் பாடகர் லதா மங்கேஷ்கர், கன்னட திரைப்பட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது; மவுன அஞ்சலி செலுத்தினர்.


அவைத் தலைவர் தேர்வு



அதன்பின், அவைத் தலைவர் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. பழனிசாமி எழுந்து, ''அ.தி.மு.க., அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினரால் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். கரவொலி எழுப்பி ஒப்புதல் அளிக்கவும்,'' என்றார்.
அதை, முன்னாள் அமைச்சர் சீனிவாசன் முன்மொழிந்தார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழிமொழிந்தார். கட்சி அவைத் தலைவராக, தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். அவர் தன்னை தேர்வு செய்ததற்காக, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகம் பேசியதாவது:பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ள கோரிக்கை மனுவை, அவைத் தலைவரிடம் அளிக்கிறேன். தமிழமகன் உசேன் தலைமையில், தற்போது நடக்கும் பொதுக்குழுவில், பொதுக்குழு உறுப்பினர்கள் 2,190 பேர் கையெழுத்திட்டு அளித்துள்ள மனுவின் பொருள் குறித்து விவாதிக்க வேண்டும்.கட்சியின் தற்போதைய நிலை; இரட்டை தலைமையால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் குறித்தும் விவாதிக்க வேண்டும்.


இரட்டை தலைமையால், ஆளும் தி.மு.க., அரசை கடுமையாக எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடம் மிகுந்த ஏமாற்றம், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.இரட்டை தலைமையின் முரண்பாடான, ஒருங்கிணைப்பில்லாத செயல்பாட்டால், தொண்டர்களிடம் மிகப்பெரிய சோர்வு ஏற்பட்டுள்ளது. 100 ஆண்டுகளானாலும் கட்சி நிலைத்து நின்று மக்கள் பணியாற்றும் என்ற ஜெயலலிதா ஆசை நிறைவேற, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்று வலிமையான, தைரியமான, ஒற்றைத் தலைமை ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, இப்பொதுக்குழுவில் இரட்டைத் தலைமையை ரத்து செய்து, ஒற்றைத் தலைமையின் கீழ், தொண்டாற்றுவது சம்பந்தமாக விவாதித்து, பதிவு செய்ய வேண்டும். அடுத்த பொதுக்குழுவுக்கான தேதியை முடிவு செய்து அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


அடுத்த பொதுக்குழு தேதி



சி.வி.சண்முகம் அளித்த கோரிக்கை மனுவை பெற்ற பின், அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியதாவது: பொதுக்குழு உறுப்பினர்கள் 2,190 பேர் கையெழுத்திட்டு அளித்த, ஒற்றைத் தலைமை குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டேன். அடுத்த பொதுக்குழு தேதியை அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அடுத்த மாதம் 11ம் தேதி காலை 9:15 மணிக்கு, இதேபோல் சிறப்பாக பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். இவ்வாறு அவர் அறிவித்தார். அதை வரவேற்று கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி நன்றி கூறினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், எம்.எல்.ஏ., மனோஜ்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாகர் ஆகியோர் எழுந்தனர். வைத்திலிங்கம் ஒலிப்பெருக்கி முன்பு வந்து, ''சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் பொதுக்குழுவை புறக்கணித்து வெளிநடப்பு செய்கிறோம்,'' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, நான்கு பேரும் அங்கிருந்து வெளியேறினர்.

வேலுமணி நன்றியுரை ஆற்றியதும், கூட்டம் நிறைவடைந்தது. பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்து, கட்சியினர் மாலை அணிவித்தனர், பூங்கொத்து, வெள்ளி செங்கோல், வீரவாள் போன்றவை வழங்கப்பட்டன.

பொதுக்குழு துளிகள்.


.. * பொதுக்குழு நடந்த மண்டபத்திற்குள் காலை ௮:௦௦ மணிக்கு முன்பே, உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர். பழனிசாமிக்கு ஆதரவாக ஒற்றைத் தலைமை கோஷத்தை எழுப்பியபடி, அவர்கள் மண்டபத்திற்குள் அமர்ந்திருந்தனர்
* ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தன் பிரசார வாகனத்திலும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தன் காரிலும், பொதுக்குழு நடந்த மண்டபத்திற்கு வந்தனர். பழனிசாமிக்கு மட்டுமே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பன்னீர்செல்வத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. பன்னீர்செல்வம் வந்தபோது, பலர் எழுந்து எதிர் கோஷம் போட்டனர்.அவர்களை, முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, வைகைச்செல்வன் ஆகியோர் அமைதி காக்கும்படி கூறினர்
* மதிய விருந்தில், ஜாங்கிரி, பாதாம் கீர், சாதம், சாம்பார், வத்தல்குழம்பு, ரசம், தயிர் சாதம், வெஜிடபிள் புலாவ், தயிர் பச்சடி, அவியல், பொரியல், ஊறுகாய், அப்பளம், மோர் மிளகாய், காலிபிளவர் பக்கோடா, மசால் வடை, வாழைப்பழம் ஆகியவை பரிமாறப்பட்டன. காலையில் இட்லி, பொங்கல், வடை, சாம்பார், சட்னி, கேசரி ஆகியவை அடங்கிய 'மினி டிபன் பார்சல்'கள் வழங்கப்பட்டன
* பொதுக்குழு துவங்குவதற்கு முன், சம்பிரதாயத்திற்கு செயற்குழுக் கூட்டம் நடப்பது வழக்கம். இதற்காக, தனி அறையில் செயற்குழு உறுப்பினர்கள் காத்திருந்தனர். ஆனால், செயற்குழுக் கூட்டம் நேற்று ஒப்புக்கு கூட நடக்கவில்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...