Monday, October 24, 2022

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை : அக்.25 -சு கந்தசஷ்டி ஆரம்பம்.

 கந்தசஷ்டி கொண்டாடுவது ஏன்?



தேவர்களின் தந்தையான கஷ்யப முனிவருக்கும், அசுரேந்திரன் என்பவனின் மகள் மாயைக்கும் சூழ்நிலை காரணமாக இரண்டாம் திருமணம் நடந்தது. அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் உள்ளிட்ட பல அசுரர்களும், அஜமுகி என்ற மகளும்
பிறந்தனர். இதில் சூரபத்மன் தவமிருந்து, சிவனின் ஆற்றலைத் தவிர வேறு யாராலும் தன்னைக் கொல்ல முடியாது என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால், தேவர்களைத் துன்புறுத்த தொடங்கினான். தேவர்கள் தங்களைக் காப்பாற்றும்படி சிவனைச் சரணடைந்தனர். சிவன் தன் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் வளர்த்து ஆளாக்கினர். பார்வதிதேவி. அந்த ஆறு குழந்தைகளையும் சேர்த்து அணைத்து, ஆறுமுகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவமாக மாற்றினாள். 'கந்தன்' என பெயர் பெற்ற அந்தக் குழந்தைக்கு, தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி செய்த வேலை பரிசாக அளித்தாள். சக்தி வேலுடன் புறப்பட்ட கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தேவர்களைக் காப்பாற்றினார். இதன் அடிப்படையில், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை ஆறுநாள் கந்தசஷ்டி விரதம் மேற்கொள்வர். ஆறாவது நாளான சஷ்டியன்று, முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்படும். தம்பதியாக சஷ்டி விரதம் மேற்கொண்டால் நல்லறிவும், அழகும் உள்ள குழந்தைகள் பிறப்பர்.


ஆற்றுபடையா... ஆறுபடையா...



தமிழகத்தில் முருகனுக்கு பல தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஆறு தலங்கள் படைவீடாக கருதப்படுகிறது. போர் புரியச் செல்லும் தளபதி படைகளுடன் தங்குமிடம் 'படைவீடு' எனப்படும். அவ்வகையில் சூரனை வதம் செய்ய முருகன் படையுடன் தங்கிய தலம் திருச்செந்துார் மட்டுமே. ஆனால், மற்ற தலங்களையும் சேர்த்து 'ஆறுபடை வீடு' என்கிறோம்.

வேலுண்டு , வினை  ,மயில், பயம்     அக்.25   கந்தசஷ்டி ஆரம்பம்

வறுமையில் வாடுவோரிடம் வள்ளல் இருக்குமிடத்தை சொல்லி ஆற்றுப்படுத்துவது (வழிகாட்டுவது) அக்கால வழக்கம். அந்த வகையில் அமைந்த நுால்களை 'ஆற்றுப்படை' என்பர். இவ்வாறு பக்தர்களின் குறைகளைப் போக்கும் வள்ளலான முருகப்பெருமான் ஆறு தலங்களில் அருள்புரிகிறார் என புலவர் நக்கீரர் பாடிய பாடல் திருமுருகாற்றுப்படை. ஆற்றுப்படை என்பதே 'ஆறுபடை' என்றானது. அவர் பாடிய வரிசையிலேயே ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளன.


மாப்பிள்ளை சுவாமி



கோயில்களில் ஒரு தெய்வத்துக்கு ஒரு உற்ஸவர் சிலை மட்டுமே இருக்கும். ஆனால் திருச்செந்துார் கோயிலில் சண்முகர், ஜெயந்திநாதர், குமர விடங்கர், அலைவாய் பெருமாள் என நான்கு உற்ஸவர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்குமே தனித்தனி சன்னதியும் உள்ளன. இவர்களில் குமரவிடங்கரை 'மாப்பிள்ளை
சுவாமி' என அழைக்கின்றனர்.


12 நாள் சஷ்டி விழா



முருகத்தலங்களில் கந்தசஷ்டி விழா ஆறு நாள் நடக்கும். சில தலங்களில் மட்டும் ஏழுநாள் நடக்கும். ஆனால் திருச்செந்துாரில் முதல் ஆறுநாள் வரை சஷ்டி விரதமும், அதன் முடிவில் சூரசம்ஹாரமும் நடக்கும், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அதனை அடுத்து ஐந்து நாட்களுக்கு ஊஞ்சல் சேவை நடக்கும்.


சந்தன மலை



ஆறுபடை வீடுகளில் திருச்செந்துார் மட்டும் கடற்கரையிலும், பிற தலங்கள் மலைக்கோயிலாகவும் உள்ளன. ஆனால் திருச்செந்துாரும் மலைக்கோயிலே. கடற்கரையில் இருக்கும் 'சந்தனமலை'யில் தான் கோயில் இருந்தது. எனவே இத்தலத்தை, 'கந்தமாதன பர்வதம்' என்பர். தற்போதும் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் பெருமாள் சன்னதி அருகிலும், வள்ளி குகைக்கு அருகிலும் சந்தன மலை சிறுகுன்றாக
இருப்பதைக் காணலாம்.


தோஷம் போக்கும் ஞானகுரு



அசுரர்களை வதம் செய்யும் முன் குருபகவான் முருகனுக்கு அசுரர்களை பற்றிய வரலாறை எடுத்துச் சொன்னார். எனவே திருச்செந்துார் 'குரு தலமாக' கருதப்படுகிறது. பிரகாரத்தில் உள்ள மேதா தட்சிணாமூர்த்தி கூர்மம், அஷ்ட நாகங்கள் அஷ்ட யானைகள், மேதா மலை என நான்கு ஆசனங்கள் மீது அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் உள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும் கிளி வடிவில் உள்ளன. திருச்செந்துார் முருகனை வணங்கினால், குருதோஷம் மறையும். ஏனெனில் திருச்செந்துாரில் ஞானகுருநாதராக முருகன் அருள்புரிகிறார்.


வெற்றிக் களிப்பில் முருகன்



திருச்செந்துாரில் கந்த சஷ்டி விழாவின் முதல் நாள் அதிகாலையில், ஹோம மண்டபத்திற்கு மூலவரின் பிரதிநிதியாக வள்ளி, தெய்வானையுடன் ஜெயந்திநாதர் (முருகன்) வருவார். அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட ஹோம குண்டத்தில் முருகனின் வெற்றிக்காக யாகம் தொடங்கும். குண்டத்தை சுற்றிலும் சிவன், அம்பிகை, நான்கு வேதங்கள், முருகன், வள்ளி, தெய்வானை, மகாவிஷ்ணு, விநாயகர், சப்த குருக்கள், வாஸ்து பிரம்மா, தேவர்கள், சூரியன், அஷ்டதிக்கு பாலகர்கள், துவாரபாலகர்கள் என அனைத்து தேவதைகளையும் கும்பத்தில் எழுந்தருளச் செய்வர். உச்சிக்காலம் வரையில் நடக்கும் யாகசாலை பூஜை முடிந்தவுடன் ஜெயந்திநாதர், சண்முகவிலாச மண்டபத்திற்கு செல்வார். ஆறாம் நாளன்று கடற்கரையில் சூரனை வதம் செய்வார். அதன்பின் வெற்றிக்களிப்பில் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலைக்கு திரும்புவார்.


சஷ்டி விரதமிருப்பது எப்படி?



* கந்தசஷ்டி விரத துவக்கநாளான அக்.25 முதல் தினமும் அதிகாலை 4:30 - 6:00 மணிக்குள் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். மருத்துவர் ஆலோசனையில் இருப்பவர்கள் பால், பழம், பழச்சாறு என எளிய உணவு எடுத்துக் கொள்ளலாம்.
* முருகனுக்குரிய மந்திரங்களான 'ஓம் சரவணபவ' 'ஓம் சரவணபவாயநம' 'ஓம் முருகா' ஆகிய மந்திரங்களை ஜபிப்பது அவசியம். திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், ஸ்கந்தகுருகவசம், சண்முககவசம் பாடல்களை காலையும், மாலையும் பாராயணம் செய்ய வேண்டும்.
* முருகன் கோயிலுக்குச் சென்று விளக்கேற்றுங்கள்.
* கோயிலுக்கு குழுவாகச் சென்று, ஒருவர் முருகன் நாமத்தைச் சொல்ல மற்றவர்கள் 'அரோகரா' கோஷமிடலாம். உதாரணம்: கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா.
* மலைக்கோயில்களை வலம் வந்தால் புண்ணியம் உண்டாகும். கோயில்களில் தங்கி விரதமிருப்பது நல்லது.
* ஆறுநாட்களும் விரதமிருந்தால் புத்திர தோஷம் விலகும். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
தாகம் தீர்த்த வேலாயுதம்
திருச்செந்துாரில் உள்ள நாழிக்கிணற்றில் உள்ள தண்ணீர், கடலுக்கு அருகில் இருந்தாலும் உப்பு கரிப்பதில்லை. ஆனால் இந்த கிணறைச் சுற்றியுள்ள மற்ற கிணறுகளில் உப்பு நீரே கிடைக்கிறது. ஆனால் நாழிக்கிணற்றில் மட்டும் சுவையான நீர் கிடைக்க காரணம் என்ன தெரியுமா... சூரபத்மனுடன் போரிட்ட வீரர்கள் தாகத்தால் சிரமப்பட்டனர். அப்போது முருகப்பெருமான் தன் வேலாயுதத்தால் உருவாக்கிய தீர்த்தமே இந்தக்கிணறு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...