Monday, October 31, 2022

காந்தாரா...

 18ம் நூற்றாண்டின் இறுதியில் கர்நாடகாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஆண்ட ஒரு அரசன் நிம்மதி இழந்து தவிக்கிறார்.

நிம்மதியைத் தேடிப் புறப்படுபவர் மலை கிராமப் பகுதி ஒன்றில் மக்கள் வழிபடும் கடவுள் சிலை ஒன்றைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைகிறார்.
அந்த சிலையை தனக்குத் தரும்படி அரசன் கேட்கிறார். அதற்கு சாமியாடியாக இருக்கும் அந்த கிராமத்துவாசி ஒருவர் தான் சத்தமாக கத்துவேன், அந்த கத்தல் ஒலி எங்கு வரையில் கேட்கிறதோ அது வரை அரசனாகிய தங்கள் நிலங்களை கிராமத்து மக்களுக்குத் தந்தால் இந்த சிலையை எடுத்துக் கொண்டு போகலாம் என்கிறார்.
அரசரும் அதற்கு சம்மதித்து அந்த கிராமத்து மக்களுக்கு தனக்குச் சொந்தமான நிலங்களைத் தந்து கடவுள் சிலையை தன் நாட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.
பல வருடங்களுக்குப் பிறகு 1970ல் அந்த அரசரின் வாரிசுகள் அப்பகுதி கிராமத்து வாசிகளுக்கு தங்களது முன்னோர் கொடுத்த அந்த நிலத்தை மீண்டும் கிராமத்து மக்களிடம் இருந்த பெற முயற்சிக்கிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார் ஒரு வாரிசு. ஆனால், அவர் நீதிமன்ற வாசலில் ரத்தம் கக்கி சாகிறார். பிறகு 1990ல் மற்றொரு வாரிசும், அந்த கிராமத்து மக்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார்கள்.
அரசரின் வாரிசான அச்யுத்குமார் மக்களுக்கு நல்லவர் போல நடித்தாலும், அந்த நிலங்களை மீண்டும் எப்படியாவது கைப்பற்றும் திட்டத்தில் இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் அரசரின் வாரிசு அச்யுத்குமார் திட்டம் பற்றி அறிந்து கொண்டு நாயகன் அந்த மண்ணின் மைந்தன் ரிஷாப் ஷெட்டி, தனது மலை கிராம மக்களையும், தனது மண்ணையும் காப்பாற்றுகிறார்.
கடற்கரை கர்நாடகா பகுதி, உடுப்பி பக்கம் உள்ள மலை கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்கள் வணங்கும் குல தெய்வம், கோலா திருவிழா, கம்பளா ரேஸ் என அந்தப் பகுதிக்கே நம்மை அழைத்து சென்றது போல அவ்வளவு இயல்பாக படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ரிஷாப் ஷெட்டி.
பாப்கார்ன் பக்கம் கைகள் செல்லும்போது கூட, கண்கள் திரையை விட்டு செல்லாதவாறு, சிறிதும் சலிப்பு தட்டாமல் நகருகிறது திரைக்கதை.
தனி ட்ராக் இல்லாமல் கதையோடும் காட்சியோடும் மிக இயல்பாகவே வருகிற நகைச்சுவை கட்டாயம் சிரிக்க வைக்கும்.
பாரத கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் இன்றளவும் காணப்படும் (குறிப்பாக மலைவாழ் பகுதிகளில்) தெய்யம் என்னும் குல தெய்வ வழிபாட்டு முறையை இப்படத்தின் மையமாக கொண்டிருக்கிறார் இயக்குனரும் இந்த படத்தின் நாயகனுமான ரிஷப் ஷெட்டி.
ஒளிப்பதிவு, பின்னணி இசை மிக அருமை. குறிப்பாக வராஹ ரூபம் பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
ஓம் (அல்லது ஓ) என்ற விளியோடு கூடிய தெய்வ காட்சிகள் மூலம் பல இடங்களில் மிரட்டுகிற காந்தாரா, கிளைமாக்ஸ் காட்சியில் பார்வையாளர்கள் அனைவரையும் உறைய வைக்கிறது.
தெய்யத்தை மையமாக கொண்டு மலையாளத்தில் களியாட்டம் (சுரேஷ் கோபிக்கு தேசிய விருதை வாங்கிக்கொடுத்த) என்ற திரைப்படம் வந்திருந்தாலும், வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட காந்தாரா வேறு கோணம், புது அனுபவம்...
கட்டாயம் தியேட்டரில் காணவேண்டிய படம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...