Thursday, October 20, 2022

தலைவராக தேர்வானார் கார்கே : காங்கிரஸ் கட்சி கைமாறியது!

 காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூரைக் காட்டிலும், பல மடங்கு ஓட்டுகளை அதிகம் பெற்று, மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே, 80, வெற்றி பெற்றுள்ளார். இதன் வாயிலாக, 137 ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்கிரஸ் கட்சி, நேரு குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கைமாறியுள்ளது.

நேரு குடும்ப ஆதிக்கம், காங்கிரஸ் , கட்சி கைமாறியது!

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும், பலரது பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், கடைசி நேரத் திருப்பமாக, அக்கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த மல்லிகார்ஜுன கார்கே, களத்தில் இறக்கப்பட்டார்.


ஆதரவு திரட்டினர்



சோனியா குடும்பத்தின் மறைமுக ஆதரவு பெற்ற வேட்பாளராக இவர் கருதப்பட்டதால், அறிவிக்கப்பட்ட தினத்தன்றே இவரது வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஆனால், இவரை எதிர்த்து லோக்சபா எம்.பி., சசி தரூர் போட்டியிட்டதால், வேறு வழியின்றி கடந்த 17ல் தேர்தல் நடந்தது.

இருவருமே பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினர். இருப்பினும், சோனியா குடும்ப ஆதரவு பெற்ற வேட்பாளராக மல்லிகார்ஜுன கார்கே இருந்ததால், சசி தரூருக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் தேர்தல் நடந்து முடிந்து, புதுடில்லி அக்பர் சாலையில் உள்ள அகில இந்திய காங்., தலைமை அலுவலகத்தில், தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்திரி மேற்பார்வையில் ஓட்டு எண்ணிக்கை நேற்று துவங்கியது.

ஆரம்பம் முதலே மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தபடி இருந்தன.
இறுதியாக, மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 7,897 ஓட்டுகளும், சசி தரூருக்கு 1,072 ஓட்டுகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. பதிவான ஓட்டுகளில், 84 சதவீத ஓட்டுகளை கார்கே பெற்று இருந்தார். இது, சசி தரூர் வாங்கிய ஓட்டுகளைக் காட்டிலும் 8 மடங்கு அதிகம்.

மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதும், அவரது வீட்டுக்கு முதல் நபராக சசி தரூர், அவரது ஓட்டு எண்ணிக்கை முகவராக இருந்த கார்த்தி உள்ளிட்டோர் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, நிருபர்களிடம் சசி தரூர் கூறியதாவது:

மிக ஆரோக்கியமான போட்டி நடந்து முடிந்துள்ளது. உண்மையில் இன்று முதல், காங்., என்ற பெரிய இயக்கத்திற்குள் மறு சீரமைப்பு பணிகள் துவங்கப் போகின்றன. மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே அதை நிச்சயம் செய்து முடிப்பார் என நம்புகிறேன். அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தலில் முறைகேடு நடந்ததாக சசி தரூர் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டி வருவது குறித்து கேட்டதற்கு, ''இவை எல்லாம் கட்சியின் உள்மட்ட விஷயங்கள். தவறுதலாக, 'லீக்' செய்யப்பட்டுள்ளன. இனி, அவை குறித்து பேச வேண்டாம். எதிர்காலத்தை செப்பனிட முன்னோக்கி செல்வோம்,'' என்றார்.

மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றதன் வாயிலாக, 24 ஆண்டுகளுக்குப் பின், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர், 137 ஆண்டுகள் பழமை வாய்ந்த காங்., கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். தீபாவளி முடிந்த பின், வரும் 26ல் அவர் பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


பிரதமர் வாழ்த்து



வெற்றி பெற்றுள்ள கார்கேவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி:காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிய பொறுப்பை ஏற்க உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். வரும் நாட்களில் அவர் சிறப்பான பங்களிப்பை தருவார் என எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

எத்தனை பேர் ஓட்டளித்தனர்?

வாக்காளர் பட்டியலின்படி, மொத்தம் 9,915 பேர் உள்ள நிலையில், தேர்தலின்போது 9,497 பேர் ஓட்டளித்தனர். பல்வேறு மாநிலங்களின் தலைமை அலுவலகங்களில், 87 இடங்களில் ஓட்டுச்சாவடிகளும், 'ஒற்றுமை யாத்திரை' நடக்கும் பகுதியில் 50 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு நடந்தது.416 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டது.



'கட்சியில் அனைவரும் சமம்!'

காங்கிரஸ் கட்சியில் பெரியவர்கள், சின்னவர்கள் என யாரும் இல்லை. என்னை பொறுத்தவரை அனைவரும் சமம். கட்சியை வலுப்படுத்த உண்மையான காங்., வீரனாக செயல்படுவேன். ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் அச்சுறுத்தலாக திகழும் பாசிச சக்திகளை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும். - மல்லிகார்ஜுன கார்கே, காங்., தலைவர் தேர்வு



கார்கே வெற்றி கட்சிக்கு உதவுமா?

அரசியலில் 50 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கர்நாடகாவை சேர்ந்தவர். காங்., தலைவர் பதவிக்கு தென் மாநிலத்தில் இருந்து தேர்வாகும் ஆறாவது நபர் இவர். இவருக்கு முன்னதாக, நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜர், நரசிம்ம ராவ் உள்ளிட்ட தென் மாநில தலைவர்கள் இந்த பதவியை வகித்துள்ளனர். இதேபோல, ஆந்திராவைச் சேர்ந்த தாமோதரம் சஞ்சீவய்யா, ஜகஜீவன் ராம் ஆகியோருக்கு பின், தலித் சமூகத்தில் இருந்து தலைவராக தேர்வாகி உள்ள மூன்றாவது நபர் என்ற பெருமையை கார்கே பெற்றுள்ளார்.


நாட்டின் ஜனாதிபதியாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த திரவுபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பதில் சொல்லும் விதமாக, கார்கேவின் தேர்வு பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக, சமூக நீதிக் கொள்கைக்கான தங்கள் ஆதரவு நிலைப்பாட்டை காங்., வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. கார்கேவின் நியமனம் வாயிலாக, கர்நாடகாவில்வுக்கு அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில், காங்., மீண்டும் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் கட்சியினர் உறுதியாக நம்புகின்றனர். 2024 லோக்சபா தேர்தலிலும் காங்., தொண்டர்கள் புதிய உத்வேகத்துடன் பணியாற்ற, இந்த வெற்றி ஊக்கமளிக்கும் என்றும் தலைவர்கள் கருதுகின்றனர்.



கார்கே வீடு தேடி சென்ற சோனியா!

தேர்தல் முடிவுக்குப்பின், சோனியா இல்லத்துக்கு சென்று, அவரது வாழ்த்தைப் பெறுவதற்காக கார்கே நேரம் கேட்டார். ஆனால், அவருக்கு நேரம் ஒதுக்கித் தரப்படவில்லை. சற்று நேரத்தில், புதுடில்லியின் ராஜாஜி மார்கில் உள்ள கார்கேவின் வீட்டுக்கு சோனியா சென்று வாழ்த்து தெரிவித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தவிர, வேறு தலைவர்களின் இல்லத்துக்கு சோனியா இதுவரை சென்றதில்லை. 'இனி அனைவரும் கார்கேவின் உத்தரவுபடி தான் நடக்க வேண்டும்; கட்சியில் என் பணி என்ன என்பதை கூட அவர் தான் முடிவு செய்வார்' என, ராகுல் தெரிவித்தார்.



காங்., தலைவர் கார்கே பின்னணி



* 1942 ஜூலை 21: கர்நாடகாவின் பிடார் மாவட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தார். பி.ஏ., - பி.எல்., முடித்துள்ளார்

* 1969: காங்கிரசில் சேர்ந்தார். குல்பர்கா நகர காங்., தலைவரானார்

* 1972 - 2009: கர்நாடக சட்டசபைக்கு தொடர்ச்சியாக ஒன்பது முறை எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றும், முதல்வர் வாய்ப்பு கிடைக்கவில்லை.

* 1996 - 1999: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்.

* 1978 - 1980, 1990 - 1992, 1999 - 2004: கர்நாடக அரசில் உள்துறை, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர்


*2005 - 2008: கர்நாடகா காங்., தலைவர்

* 2006: புத்த மதத்தை பின்பற்றுவதாக தெரிவித்தார்


* 2008 ஜூன் 5 - 2009 மே 28: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர்


* 2009 - 2019: லோக்சபா எம்.பி., 2009 மே 29 - 2013 ஜூன் 16: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் .

* 2013 ஜூன் 17 - 2014 மே 26: மத்திய ரயில்வே அமைச்சர்

* 2014 ஜூன் 4 - 2019 ஜூன் 16: லோக்சபா காங்., கட்சித் தலைவர்.

* 2020 ஜூன் 12: ராஜ்யசபா எம்.பி.,

* 2021 பிப்., 16 - 2022 அக்., 1: ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர்

* 2022 அக்., 19: காங்., தேசிய தலைவராக தேர்வு. நிஜலிங்கப்பாவுக்கு பின், கர்நாடகாவில் இருந்து தேர்வான இரண்டாவது காங்., தலைவர்.



காங்.,கில் நேரு குடும்பம் ஆதிக்கம்

சுதந்திரத்துக்கு பின் 75 ஆண்டுகளில், அதிகபட்சமாக 43 ஆண்டுகள் நேரு குடும்பத்தினரான நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா, ராகுல் ஆகியோர் காங்., தலைவர்களாக இருந்தனர். மீதி 32 ஆண்டுகளில் சீதாராமையா, நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜர், சங்கர் தயாள் சர்மா, நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி, கார்கே உட்பட 13 பேர் காங்., தலைவராக தேர்வாகினர்.நேரு - 4 ஆண்டு; இந்திரா - 9; ராஜிவ் - 6; சோனியா - 22; ராகுல் - 2 ஆண்டுகள் தலைவராக இருந்தனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...