Friday, October 14, 2022

திருமால் பெருமைக்கு நிகரேது! உந்தன் திருவடி நிழலுக்கு இணையேது! - இன்று புராட்டாசி கடைசி சனி.

 பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பட்ட (மங்களாசாசனம்) கோயில்களை திவ்யதேசங்கள் எனக் குறிப்பிடுவர். இக்கோயில்களை தரிசிப்பது ஒன்றே பூமியில் மனிதனாகப் பிறந்ததன் பயனாகும். அதுவும் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி கடைசி சனியான இன்று கோயிலுக்குச் சென்று சுவாமிக்கு துளசிமாலை சாத்தியோ அல்லது விளக்கேற்றியோ வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும்.



பரமக்குடியில் ஒரு அழகர் கோவில் (சுந்தரராஜ பெருமாள் கோயில்)



பரமக்குடி வைகை ஆற்றின் தென் கரையில்ஸ்ரீ சவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீ சுந்தரராஜபெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைப்பு மதுரை அழகர் கோயிலை போல் உள்ளதுடன் ஆண்டு தோறும் மதுரை கோயிலை போன்றே அனைத்து விசேஷங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
பரமக்குடி சௌராஷ்ட்ரா பிராமண மகாஜனங்களுக்கு பாத்தியமான இக்கோயில், ஐந்து டிரஸ்ட்டிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் கீழ் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 450 ஆண்டுகளுக்கு முன் 'கோபால மடம்' என்ற சிறு பஜனை மடத்தை நிர்வாகித்து தரி
சனம் செய்தனர். அப்போது ஒரு நாள் மடத்தில் பூஜை செய்த அர்ச்சகரின் கனவில் பெருமாள் தோன்றி, தான் வைகையில் புதைந்து கிடப்பதாக தெரிவித்தார்.வழக்கம்போல் வைகை ஆற்றில் குளிப்பதற்கு ஓடுகால் தோண்டிய போது, சங்கு சக்கரதாரியாக ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் அழகான பெருமாள் கற்சிலை கிடைத்தது. பின்னாளில் பெருமாளை கோபால மடத்தில் எழுந்தருள செய்து, திருப்பணிகள் பல நடத்தி கி.பி., 1900 ஆண்டு ராஜ கோபுரத்துடன் விளங்கும் பெருமாள் கோயிலை உருவாக்கினர்.இங்கு சித்ரா பவுர்ணமி நாளில் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, வைகாசி வசந்த உற்ஸவம், ஆடி பத்து நாள் பிரம்மோற்ஸவம், புரட்டாசி சனி வார விழா, மார்கழி வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திர திருக்கல்யாண விழா நடக்கிறது.


ஆதிஜெகநாத பெருமாள் கோயில், திருப்புல்லாணி



புல்லவர், காலவர், கண்ணவர் எனும் மூன்று மகரிஷிகளின் தவத்திற்காக பெருமாள், அரச மரமாகவும், ஆதி ஜெகநாத பெருமாளாகவும் காட்சியளித்த தலமாக விளங்குகிறது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 44-வதாக திகழ்கிறது. ஆதி ஜெகநாதர் தசரத சக்கரவர்த்திக்கு ராம பிரான் அவதாரம் புரிய அருளியவர் என்பதால் பெரிய பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
ராமாயண வரலாற்றுடன் தொடர்புடையது இத் திருக்கோயில். இக்கோயிலில் இருந்து 5 கி.மீ., தொலைவில் புனித சேதுக்கரை அமைந்துள்ளது. ஆதிஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார், ஆண்டாள், தெர்ப்பசயன ராமர், சந்தான கிருஷ்ணர், பட்டாபிஷேக ராமர், யோக நரசிம்மர், ராமானுஜர் உள்ளிட்ட உப சன்னதிகளும் உள்ளது. இங்குள்ள சக்கர தீர்த்த குளம் பிரசித்தி பெற்றது.
பங்குனி மாத பிரம்மோற்ஸவம், சித்திரை மாத சைத்ரோட்ஸவம் ஆகிய விழாக்களும், மார்கழி மாதத்தில் வரக்கூடிய வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு உற்ஸவம் விமரிசையாக நடக்கும். விஜயதசமி நாளில் குதிரை வாகனத்தில் பெருமாள் அம்பு எய்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7:00 மணிக்கு கல்யாண ஜெகநாத பெருமாள், பத்மாஸனி தாயார் ஊஞ்சல் உற்ஸவம் சிறப்பாக நடந்து வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து 8 கி.மீ.,ல் திருப்புல்லாணி அமைந்துள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதாதவும், ஹிந்து சமய அற
நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.------


உந்திபூத்த பெருமாள் கோயில் தொண்டி



உலகங்களையும், உயிர்களையும் படைக்கும் பிரம்மாவையே திருபாற்கடலில் பள்ளி கொண்ட மகாவிஷ்ணு தனது உந்தி (தொப்புள்) தாமரைக் கொடியில் தோற்றுவித்து, படைப்பு தொழில் பயிற்சிக்காக பிரம்மாவிற்கு பல்வேறு சோதனை நடத்தி வருகையில், பல்வேறு லோகங்களுக்கும், பூலோகத்திற்கும் சென்று வந்த பிரம்மா தான் தோன்றிய விஷ்ணுவின் உந்தி (தொப்புள்) பகுதியை பூலோகத்தில் காண தவம் புரிந்ததின் பேரில் தொண்டியில் ரெங்கநாதபெருமாள் அம்சங்களுடன் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் தோன்றினார்.பெருமாளின் நாபி (உந்தி) பகுதியில் தாமரை கொடி போல் கமல கோசங்கள் பரந்து விரிந்துள்ளதால் கமலநாபி புஷ்பவர்த்தன பெருமாள் என்றும் அழைக்கப்படுகிறார். திருவாடானையில் இருந்து 15 கி.மீ.,லும், ராமநாதபுரத்தில் இருந்து 50 கி.மீ.,லும் இக் கோயில் அமைந்துள்ளது.


கோதண்ட ராமர் கோயில் ராமநாதபுரம்



மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகரில் 300 ஆண்டுகளுக்கு முன்பு சிவன், அம்மன் கோயில் நிறைய இருந்தன. அப்போது அரண்மனை பகுதியில் பெருமாள் கோயில் இல்லை. மக்கள் 15 கி.மீ.,ல் உள்ள திருப்புல்லாணிக்கு சென்று பெருமாளை
தரிசித்தனர். அவர்களின் சிரமத்தை போக்க 200 ஆண்டுகளுக்கு முன்பு சேதுபதி மன்னர்கள் காலத்தில் ராமநாதபுரம் ஊர் கோயில் என அழைக்கப்படும் சிவன் கோயில் அருகே கோதண்ட ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது.இங்கு மூலவராக ராமபிரான், சீதை, லட்சுமணன்,ஆஞ்சநேயருடன் ஒருசேர காட்சியளிக்கிறார். இத்துடன் சக்கரத்தாழ்வார், நரசிம்மர், ஜெயவீர ஆஞ்சநேயர் சன்னதிகள் தனித்தனியாக உள்ளன. காலை 7:00 முதல் 10:00 மணி வரையும், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். அரண்மனை பஸ் ஸ்டாப்பில் இறங்கி நடந்து, அல்லது ஆட்டோவில் கோயிலுக்கு செல்லாம்.


வரதராஜ பெருமாள் கோயில்எமனேஸ்வரம்



பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரத்தில் வைகை நதியின் வடக்கே கோயில் அமைந்துஉள்ளது. இங்குள்ள பெருமாள் ஒரு நாள் அர்ச்சகர் கனவில் தோன்றி அங்குள்ள கால்வாயில் சிலை வடிவாக தான் இருப்பதாக தெரிவித்தார். இதன்படி பெருமாளை கண்டுமகிழ்ந்த பக்தர்கள் இங்கு பிரதிஷ்டை செய்தனர். தொடர்ந்து புண்ணிய கோடி விமானத்தின் கீழ் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீ வரதராஜ பெருமாள் என்னும் திருநாமம் கொண்டும், தனி சன்னதியில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் திவ்ய சேவை சாதிக்கிறார்.


மேலும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ அலர்மேல் மங்கா, ஸ்ரீ பத்மாவதி தாயார் சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள், ஸ்ரீ ஆண்டாள், நவக்கிரகம் ஆகிய தனி சன்னதிகள் அமைந்துள்ளன.
இங்கே வரதராஜ பெருமாளுக்கு வைகாசி மாதம் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் மற்றும் 8 நாட்கள் வசந்த உற்ஸவம் நடைபெறும். திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.


ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயில் ஆதங்கொத்தங்குடி



முதுகுளத்தூர் தாலுகா ஆதங்கொத்தங்குடி கிராமத்தில் ஸ்ரீ நிவாஸப் பெருமாள் கோயில் உள்ளது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட இக்கோயில் 16ம் நூற்றாண்டை சேர்ந்தது. இங்கு ஸ்ரீ நிவாஸப் பெருமாள், அலமேலு மங்கை, சூடிக்கொடுத்த நாச்சியார் சன்னதிகள் உள்ளன. ஸ்ரீநிவாஸப்
பெருமாள் கோயில் தமிழகத்தின் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது.புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த கோயில் முதுகுளத்தூரில் இருந்து தேரிருவேலி வழியாக 18 கி.மீ.,லும், ராமநாதபுரத்தில் இருந்து உத்திரகோசமங்கை,தேரிருவேலி வழியாக 35 கி.மீ.,ல் உள்ளது.


கடலடைத்த ஆதிஜெகநாத



பெருமாள் கோயில், தேவிபட்டினம்ராமநாதபுரத்தில் இருந்து 11 கி.மீ.,ல் தேவிபட்டினத்தில் கடலடைத்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரைக்கு எதிரில் அமைந்துள்ள இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டை சேர்ந்தது. இக்கோயிலில், கடலடைத்த ஜெகநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, சன்னதிகள் உள்ளன.
தினம் பாஞ்சராத்திர முறைப்படி ஒரு கால பூஜை நடக்கிறது. இந்த கோயிலுக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 20 நிமிடத்திலும், தொண்டியில் இருந்து 45 நிமிடத்திலும் செல்லலாம்.


ஆதிகேசவ பெருமாள், சக்கரவாளநல்லுார்



ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் ரோட்டில் சக்கர வாளநல்லுார் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரும்தேவி நாயகி சமேத ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. சக்கரத்தாழ்வார், நரசிம்மர், லட்சுமி ஹயக்கீரிவர் சன்னதிகள் உள்ளன. முன்னாள் முதல்வர் ஜெ., தாய் சந்தியாவின் பரம்பரை கோயிலாக உள்ளது.
இங்கு தினமும் ஒரு காலபூஜை மட்டும் காலை 11:00 மணிக்கு நடக்கிறது. புரட்டாசி சனியன்று மட்டும் காலை 8:00 மணிக்கு கோயில் திறக்கப்படும். ராமநாதபுரம்- -தேவிபட்டினம் பஸ்சில் செல்லாம். மெயின் ரோட்டில் இருந்து 2 கி.மீ., நடந்து செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...