Monday, June 12, 2023

யாரிடம் எதைச் சொல்ல வேண்டும்?

 

பாரதிய ஜனதா கட்சி செய்யும் இரண்டு பெரிய தவறுகள் -

(1) தமது அரசு கொண்டு வந்த நலத் திட்டங்களைச் சரியான முறையில் பொதுமக்களிடம் சந்தைப்படுத்தாதது (இதனால், அந்தந்த மாநிலங்கள் அவற்றுக்கான பெயரைத் தட்டிக் கொண்டு போய் விடுகின்றன). இதற்கு ஊடகங்களை விலைக்கு வாங்கும் தந்திரமும் தெரிந்திருக்க வேண்டும். கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் வீடு, வீடாக அந்த நலத் திட்டங்களைச் சேர்ப்பதில் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

(2) யாரிடம், எதைப் பேச வேண்டுமோ, அதை மட்டும் பேசி விட்டு வர வேண்டும். எல்லோரிடமும், பொத்தாம் பொதுவாக, மோதி அரசின் எல்லா சாதனைகளையும், மக்களுக்காகக் கொண்டு வந்த நலத் திட்டங்கள் எல்லாவற்றையும் பேசுவதில் அர்த்தமில்லை. குறிப்பிட்ட நபருக்கு சம்பந்தம் இல்லாததைப் பற்றியும், அவருக்கு ஆர்வம் இல்லாத விஷயங்கள் குறித்தும் பேசுவது சுத்த 'waste'.

யார் வந்தாலும், எல்லோர் மனதிலும் எழும் ஒரே கேள்வி, "நீ எனக்கு செய்தாய்? உன்னால் எனக்கு என்ன பயன்?" என்பது தான். இதுவே பொது வாழ்க்கையில், குறிப்பாக அரசியலில் இருக்கும் எல்லோரும் கற்க வேண்டிய பால பாடம்.

விவசாயிகளைச் சந்திக்கும் போது, உழவர் பாதுகாப்பு நிதி (பிரதமர் கிசான் சம்மான்), எளிய முறையில் பயிர்க் கடன் வசதி, உர மானியம், பயிர்களை நோய்களில் இருந்தும், பூச்சிகளின் தாக்குதலில் இருந்தும் எப்படிப் பாதுகாப்பது, பயிர்க் காப்பீட்டுத் திட்டம், விளைவித்த வேளாண் பொருள்களுக்கு அரசு வழங்கும் குறைந்த பட்ச ஆதார விலை, வேளாண்மைக் கல்வி, பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றைப் பற்றி மட்டுமே அதிகம் பேச வேண்டும்.

பெண்களைச் சந்திக்கும் போது, அவர்களுக்கான சிறப்புத் திட்டங்களை விவரமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

மாணவர்களிடம் கல்வித் திட்டங்கள், கல்விக்கு மத்திய அரசு செலவு செய்யும் தொகை, கல்வி உதவித் தொகை, கல்விக் கடன்கள் வசதி, கல்விக் கடன்களுக்கான வட்டி மானியம், நாட்டில் இந்திய அரசால் நடத்தப்படும் கல்வி நிலையங்கள், பல்கலைக் கழகங்கள், தொழிற்பயிற்சிக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகள் ஆகியவற்றைப் பற்றி அதிகம் பேசுதல் நலம் பயக்கும்.

வயது வித்தியாசம் இல்லாமல், குடும்பப் பின்னணியைப் பாராமல் எல்லோரிடமும், விலைவாசியைக் குறைக்க மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள், மருத்துவக் காப்பீட்டு வசதி, குழந்தைகள் நலன், முதலீடு எதுவும் இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்கும் வசதி, குறைந்த விலையில் மருந்துகள் விற்கும் அரசு மருந்தகங்கள், மருத்துவமனைகள், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து விஸ்தரிப்பு, வீடு கட்ட வங்கிக் கடன் வசதி, அரசு வழங்கும் மானியத் தொகை ஆகியவற்றைப் பற்றிப் பேசலாம்.

உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புகிற மாணவர்கள், இளைஞர்களிடம், அவர்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், அரசு செய்யும் பல்வித உதவிகள், போர் சமயத்திலும், 'கோவிட்' போன்ற தொற்றுநோய் சமயத்திலும், அவர்களைப் பத்திரமாகத் தாய்நாட்டுக்கு அழைத்து வர அரசு எடுத்திருக்கும் வியத்தகு நடவடிக்கைகள் குறித்து விளக்கலாம்.

ஊடகங்களிடம், அந்தந்த நேரத்துக்குத் தகுந்தாற் போல சாதுரியமாகப் பேச வேண்டும்.

யுத்த முனையில் நம் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இடர்கள், ஆபத்துகள் குறித்தும், அவர்களுக்காக மத்திய அரசு எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், உதவிகள் குறித்தும், பன்னாட்டு விவகாரங்களில் அரசின் நிலைப்பாடு, அவற்றால் நாட்டுக்கு விளைந்திருக்கும் நன்மை, அண்டை நாடுகள் உடனான உறவு, விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா கண்டுள்ள பெரிய முன்னேற்றம், தேசியக் கொள்கைகளில் அரசு செய்திருக்கும் மாற்றம், தேர்தல் விதிமுறைகள், தொழிற்புரட்சி, மென்பொருளில் இந்தியா எய்தி இருக்கும் வெற்றி ஆகியவை குறித்தெல்லாம் எல்லோருக்கும் ஆர்வம் இருப்பதில்லை.

இறுதியாக ஒன்று. ஒவ்வொருவரிடமும் அவரவர் தாய்மொழியில் பேச வேண்டும். அனைவருக்கும் புரிகின்ற வகையில், எளிய பாணியில் பேச்சும், எழுத்தும், தகவல்களும் அமைதல் மிக, மிக அவசியம்.

நாள்: 11-06-2023 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...