Wednesday, April 22, 2020

பிளாஸ்மா சிகிச்சையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி.. கவலைக்கிடமாக இருந்து குணமான கொரோனா நோயாளி.

பிளாஸ்மாக சிகிச்சையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த கொரோனா வைரஸ் பாதித்து கவலைக்கிடமான நிலையில் இருந்த நோயாளி ஒருவர் பிளாஸ்மா சிகிச்சை மூலமாக குணமடைந்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த இதுதான் மருத்துவமுறை என உலக சுகாதார நிறுவனம் எதையும் இதுவரை அங்கீகரிக்கவில்லை. ஏனெனில் தடுப்பு மருந்தோ, தடுப்பு ஊசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவ வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் கவலைக்கிடமான நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை நல்ல பலன் அளிப்பதாக அமெரிக்க மருத்துவ ஆராயச்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த முறையை உலகின் பல நாடுகளும் இப்போது பின்பற்றி வருகின்றன.
பிளாஸ்மா சிகிச்சை
இந்த ஆன்டிபாடி முறை மிக பழைமையான முறையாகும். ஒருவர் பொதுவாக ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் என்றால் அவரிடம் இருந்து ரத்தத்தை தானமாக பெற்று, அதிலிருந்து பிளாஸ்மாவை பிரித்தெடுத்து புதிதாக பாதிக்கப்பட்டவருக்கு செலுத்துவார்கள். இந்த முறை டிப்தீரியா போன்ற நோய்களுக்கும், சார்ஸ் நோய்க்கும் பயன்படுத்தப்பட்டது.
உடல் நிலை மோசம்
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக இந்தியாவில் இந்த சிகிச்சை முறையை கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்கள் பரிசோதித்து வருகின்றன.
டில்லியில் உள்ள மேக்ஸ் தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 4ம் தேதி கொரோனா அறிகுறியுடன் 49 வயது நபர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் பிரச்சனை இருந்தது. தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்து வந்தது. இதையடுத்து ஏப்ரல் 8ம் தேதி வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
நல்ல முன்னேற்றம்
ஆனால் உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை வைத்தனர்.இதையடுத்து ஏப்ரல் 14ம் தேதி கவலைக்கிடமான நிலையில் இருந்த அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பின், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 4 நாட்களில் குணமானார். அவருக்கு இரண்டு முறை சோதனை செய்ததில் எதிர்மறை முடிவுகள் வரவே, அந்த நபர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார் என்று டெல்லி மேக்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
குணமாகவில்லை
எனினும் இப்போது குணமாகி உள்ள டெல்லி நபருடன் சேர்ந்து . அவரது 80 வயது தந்தைக்கும் பிளாஸ்மா சிகிச்சை ஏப்ரல் 14ம் தேதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அடுத்த நாளே அவரது உடல் மிகவும் மோசமடைந்ததால் ஏப்ரல் 15ல் உயிரிழந்துவிட்டார்.
மேக்ஸ் மருத்துவமனை பதில்
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை பயன்படுத்தி குணமடைய செய்து இந்தியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய மேக்ஸ் மருத்துவமனையின் உள் மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சந்தீப் புதிரா,: "இந்த சிகிச்சையானது அவரது விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், இந்த சவாலான காலங்களில் ஒரு புதிய சிகிச்சை வாய்ப்பைத் திறக்கிறோம் . ஆனால் பிளாஸ்மா சிகிச்சை என்பது மாய புல்லட் அல்ல என்பதையும் புரிந்து கொள்வது அவசியம்.
குணப்படுத்துமா பிளாஸ்மா
மேக்ஸ் மருத்துவமனையில் நோயாளியின் சிகிச்சையின் போது, ​​பிற நிலையான சிகிச்சை நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன, பிளாஸ்மா சிகிச்சையானது அவரை குணப்படுத்துவதில் ஒரு உந்து சக்தியாக செயல்பட்டிருக்கலாம் என்று கூறலாம். பிளாஸ்மா சிகிச்சையில் 100 சதவிகிதம் குணப்படுத்த முடியும் என்று கூறமுடியாது. அதுவும் ஒரு காரணம் அவ்வளவே. ஒருவரை குணப்படுத்துவதில் மருத்துவ சிகிச்சைகள் உள்பட பல காரணங்கள் உள்ளன.
200 மில்லி போதும்
இந்தியா போன்ற ஒரு நாட்டில், இதுபோன்ற ஒரு சிகிச்சையானது நோயின் தீவிரத்தன்மையைக் கொண்ட கொரோனா நோயாளிகள் மற்றும் மிதமான மற்றும் கடுமையான வகை நோயாளிகளுக்கு பொருந்தக்கூடிய ஒரு நல்ல ஆற்றலைக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு இது மிகவும் அணுகக்கூடியதாக அரசாங்க விதிமுறைகள் செயல்பட வேண்டும். ஒரு நோயாளிக்கு சிகிச்சையளிக்க 200 மிலி போதுமானது என்பதால், ஒரு நன்கொடையாளர் 400 மில்லி பிளாஸ்மாவை தானம் செய்யலாம், இது இரண்டு உயிர்களை காப்பாற்ற முடியும், " இவ்வாறு அவர் கூறினார்.
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...