டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் டாக்டர். சுதா சேஷய்யன் முதல் இன்னும் பலர் கூறியதில் இருந்தும், பல விஞ்ஞானக் கட்டுரைகளில் இருந்து சேகரித்த தகவல்களை வைத்தும், எனக்கு இப்படித் தோன்றுகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, நோய்த்தொற்றின் தீவிரம் அக்டோபர் இறுதி வரை தொடரும் என்றே தெரிகிறது. அது, டிசம்பரில் தான் 'மளமள'வென்று சரியத் தொடங்கும். அப்போது, நோய்த்தொற்றில் இருந்து முழுவதுமாக விடுபட்டு வெளிவந்தவரின் (பூர்ண குணமடைந்தவரின்) எண்ணிக்கை 70% முதல் 80% வரை இருக்கும்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் போது, நம் நாட்டில் மட்டும், அது 9 லட்சம் முதல் 12 லட்சம் வரை எட்டக் கூடும். அதனால் ஏற்படும் மொத்த உயிரிழப்புகள், 25,000 முதல் 30,000 வரை போகலாம்.
அதுவே தமிழ்நாட்டில் மட்டும் பார்த்தால், நோய்த்தொற்றின் எண்ணிக்கை 1.50 லட்சம் முதல் 2.50 லட்சமாக உயரலாம். உயிரிழப்புகள் 1,500 முதல் 2,000 வரை இருக்கக் கூடும்.
இந்த மாற்றங்களால், மத்திய, மாநில அரசுகளின் அடுத்த செயல்பாடுகள் எவ்வாறு அமையும் என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் சொல்வேன். இனி, தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பொது மக்களாகிய நாம் அனைவரும் இனிமேலும் மிகுந்த பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் செயலாற்ற வேண்டும்; அரசுக்கு முழு ஒத்துழைப்பையும் தந்தால், நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும். அது சீராவதிலும், நம் எதிர்காலத்தை மீண்டும் ஒளிமயமாக்குவதிலும், முன்னை விட இன்னும் வளங்கள் பெருகச் செய்வதிலும், நம் எல்லோரின் பங்கும் - பாமரர் முதல் படித்தவர் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை - அளப்பரியது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.
கரோனா வைரசின் பரவலைத் தடுக்கவும், அதை முற்றிலுமாக அழிக்கவும் தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது நம் ஊகத்துக்கு அப்பாற்பட்டது. ஆதலால், அது வரை அரசும், நாமும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க இயலாது. ஆகவே, அதன் பரவலைத் தடுக்க நம்மால் ஆவது என்ன?
1. பரிசோதனைகளை இப்போது இருப்பதைப் போல 5 மடங்கு முதல் 10 மடங்காக அதிகரிக்க வேண்டும். நான் ஏப்ரலிலேயே சொன்னேன், குறைந்த பட்சம் நாட்டில் உள்ள 1.50 கோடி மக்களாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று. அதைக் கேட்ட என் நண்பர்களே சிரித்தனர்; என்னைப் பரிகாசம் செய்தார்கள். ஆனால், இப்போது நிலைமையின் விபரீதத்தைப் பார்த்தால், குறைந்த பட்சம் 3 கோடி மக்களைப் பரிசோதனை செய்தாக வேண்டும் என்று தோன்றுகிறது.
2. இதனால், நோய்த்தொற்றின் எண்ணிக்கை பன்மடங்காக உயரும். ஆயினும் அச்சம் கொள்ளத் தேவை இல்லை.
3. ஒரு புறம், நோய்த் தொற்றின் எண்ணிக்கை பன்மடங்காயினும், குணமடைவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வரும். ஒரு கட்டத்தில், குணமடைவோரின் எண்ணிக்கை 75% அல்லது 80% ஆன பின், நாம் பெருமூச்சு விடலாம்.
4. அந்த நிலை எட்டும் வரை, எல்லாக் கட்டுப்பாடுகளையும் நீக்கி விடலாகாது. உதாரணமாக, பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றை மீண்டும் திறப்பது, திருமணக் கூடங்கள், திரைப்பட அரங்குகள், விளையாட்டரங்குகள், பல் அங்காடிக் கட்டிடங்கள், கடற்கரைகள், பொருட்காட்சிகள், தொல்பொருள் கூடங்கள் இன்ன பிறவற்றைப் படிப்படியாகத் தான் திறக்க வேண்டும். இதற்கு இன்னும் 30 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை ஆகலாம்.
5. தவிர்க்க இயலாத தேர்வுகளை மட்டும் நடத்த அனுமதிக்கலாம்.
6. அதே போல, பயணக் கட்டுப்பாடுகளைத் தொடர வேண்டும். மக்கள், அவசியமற்ற பயணங்களை மேற்கொள்ளக் கூடாது. சரியாக கவனியுங்கள், முழுவதும் நிறுத்த வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
7. சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, முகக் கவசம் அணிவது, அடிக்கடி கைகளை நன்கு சோப் போட்டுக் கழுவது போன்றவற்றை நிறுத்தாமல் தொடர வேண்டும். இந்தப் பழக்கம், அக்டோபர் இறுதி வரை அவசியமாதல் கூடும்.
8. ஆதாரமில்லாத செய்திகளை நம்புவதோ, பரப்புவதோ தவறு.
9. இன்னும் 5, 6 மாதங்களுக்கு எவ்வளவு சோதனைகள் வந்தாலும் (அல்லது சோதனைகள் என்று நாம் நினைத்தாலும்), அவற்றுக்குத் தீர்வு காணும் நோக்கில் அரசை எதிர்த்து, வீதியில் இறங்கிப் போராடுவது என்பதை எண்ணிப் பார்த்தலே தீது.
10. நாட்டின் எல்லைகளில் நம் எதிரிகள் இந்தச் சமயத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலும் போது, நாமும் உள்நாட்டுக் குழப்பத்தை விளைவித்தல் தேசத் துரோகக் குற்றமாகும்.
இதில் உள்ள புள்ளி விவரங்கள் யாவும், முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கணிப்பு மட்டுமே.
No comments:
Post a Comment