நம் வாழ்வில் உள்ள பல தடைகளுக்கு கண் திருஷ்டியே மிக முக்கியக் காரணமாக அமைவதாகச் சொல்கிறார்கள் ஜோதிடர்கள். பொன்னும் பொருளும் சேர்த்திருப்பார்கள். ஆனால் வீடு வாசல் வாங்கமுடியாது. நல்ல கைநிறைய சம்பளம் இருக்கும். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவமனை, வியாதி, செலவு என்று சின்னச் சின்னதாக பிரச்சினைகள் ஏற்படும்.வீட்டில், காய்கறிகள் முதல் கனிகள் வரை எல்லாமே இருக்கும். ஆனால் சாப்பிடப் பிடிக்காது.
இப்படி ஏதேனும் ஒன்று தடைக்கல்லாக இருந்து இம்சை செய்துகொண்டே இருக்கும். இவற்றுக்கெல்லாம் மிக எளிமையான பரிகாரங்கள் இருக்கின்றன. இவற்றைச் செய்து வந்தாலே திருஷ்டியெல்லாம் போய்விடும். அவற்றின் வீரியம் பலமிழந்துவிடும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
வாழை மரம் வளர்ப்பது, அதன் இலையோ பூவோ தண்டோ பயன்படும் என்பதற்காக மட்டும் வைப்பதில்லை. வாழை மரத்துக்கு திருஷ்டியையும் தோஷத்தையும் போக்கும் குணம் உண்டு. அதனால்தான் திருமணம் முதலான சுபகாரியங்களின் போது வாசலில் எல்லோருக்கும் தெரியும்படி வாழைமரத்தைக் கட்டுகிறார்கள்.
அதேபோல, ஆரத்தி எடுப்பதும் திருஷ்டி சுற்றிப் போடுவதன் இன்னொரு வெளிப்பாடு. ஒரு தட்டில் குங்குமம் கரைத்து, வெற்றிலையை வைத்து அதன் மேலே சூடம் ஏற்றி சுற்றிப் போடுவார்கள். திருஷ்டியெல்லாம் போய்விடும். காரியங்கள் தடையின்றி நடைபெறும்.
துர்குணம் கொண்ட கெட்டவர்கள், வயிற்றெரிச்சல் ஆசாமிகள், குரூர புத்தி கொண்டவர்களின் வீரியம் நம்மையும் நம் வீட்டையும் தாக்காமல் இருக்க, வீட்டு வாசலில் உள்ளே நுழைந்ததும் அவர்களின் முகம் தெரியும்படியாக, முகக்கண்ணாடியை மாட்டி வைக்கலாம். அதேபோல், வாசலில் கற்றாழை, சப்பாத்திக்கள்ளி மற்றும் முள் அதிகம் உள்ள செடி, மஞ்சள் ரோஜா என ஏதேனும் வைக்கலாம். இதனாலும் எதிராளிகளின் வீரியம் பலமிழக்கும். நம்முடைய பலம் பெருகும் என்பது நம்பிக்கை. வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம்.
மீன் தொட்டி வைக்கலாம். கருப்பு மற்றும் சிகப்பு நிறங்களில் உள்ள மீன்களை வளர்க்கலாம். இதனால் திருஷ்டி கழியும். மேலும் மீன் வளர்ப்பும் மீன்களின் துள்ளலும் ஓட்டமும் நம் மனதை அமைதிப்படுத்தும். கோபத்தைக் கட்டுப்படுத்தும்.
ஆகாச கருடன் எனும் கிழங்கு வகை உண்டு. இதனை வாங்கி, மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி, வீட்டு வாசலில் தொங்கவிடலாம். இதனால் எந்தப் பிரச்சினைகளும் அண்டாது என்கிறார்கள்.
கல் உப்புக்கு நிகரான திருஷ்டி கழிதல் எதுவும் இல்லை என்பார்கள். வாரத்துக்கு ஒருநாளேனும் கல் உப்பு கொஞ்சம் எடுத்து, குளிக்கும் நீரில் கலந்து, நீராடினால், உடல் அசதி, சோம்பல் தன்மை, உடல் அயர்ச்சி, மனக்குழப்பம் முதலானவை நீங்கும். நீங்கள் பிறந்த கிழமையிலோ அல்லது செவ்வாய்க்கிழமையிலோ குளித்து வருவது ரொம்பவே சிறப்பானது.
வளர்பிறை காலத்தில் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில், கடற்கரைச் சென்று கடல் நீரை எடுத்துவந்து அதில் மஞ்சள் பொடியைக் கலந்து, கடையில், அலுவலகத்தில் வீடு முழுவதும் என தெளிக்கவேண்டும். இதனால் திருஷ்டி கழியும், வியாபாரம் பெருகும். லாபம் அதிகரிக்கும், வீட்டில் கடன் தொல்லையில் இருந்து மீளலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.
No comments:
Post a Comment