Sunday, June 7, 2020

வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை சுற்றி சரியான மனிதர்களை வைத்துக்கொள்வது அவசியம்.

◇தக்க நேரத்தில் எடுத்து சொல்லி நம்பிக்கையூட்ட நல்ல மனிதர்கள் இல்லாததால் வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர்…..◇
ஒரு நாள் நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் நண்பர்களுடன் வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தோம். காரில் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்துக்கு இருக்கையில் உட்கார்ந்திருந்த நண்பர் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்தார்.
தீடீரென கரை நிறுத்திய ஓட்டுநர், தூங்கிக்கொண்டிருந்த என் நண்பரை எழுப்பி கொஞ்சம் பின்னல் சென்று அமருங்கள், நீங்கள் தூங்கி வழிவதை பார்த்தால் எனக்கும் தூக்கம் வருகிறது என்றவுடன் நண்பர் முனகிக்கொண்டு பின் இருக்கையில் வந்து அமர்ந்து மீண்டும் தூங்க ஆரம்பித்தார்.
நான் தூக்கம் வராமல் ஓட்டுநர் சொன்னதையே யோசித்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய தத்துவத்தை எளிதாக சொல்லிவிட்டு தன் பணியை தொடர்ந்துகொண்டிருக்கிறார் இந்த ஓட்டுநர். ஆம் அவர் சொன்னது மிக பெரிய விஷயம் தான்.
நம் குணம், சிந்தனை, செயல் போன்றவை பல நேரங்களில் நம்மை சுற்றி இருப்பவர்களை பொறுத்தே அமைகிறது.
தேனீக்கள் போல நாள் முழுவதும் சுறுசுறுப்பாக சுற்றி சுழன்று கொண்டிருக்கும் நண்பர் பக்கத்தில் இருக்கும் போது, நம்மை அறியாமலே நம் உடலில் சுறுசுறுப்பு தொற்றிக்கொள்கிறது.
உருப்படியாக ஒரு வேலையும் செய்யாமல், என்ன செய்து என்ன ஆகிவிட போகிறது என சதா புலம்பிக்கொண்டு வீணாக பொழுதை கழித்துக்கொண்டிருப்பவர் பக்கத்தில் இருக்கும் போது, நாமும் சோம்பேறியாக இருக்க ஆசைப்படுகிறோம்.
இந்த காரணத்திற்காக தான் வாகனம் ஓட்டும் போது தூங்குபவர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ள ஓட்டுனர்கள் விரும்புவதில்லை.
ஒரு திரைப்படத்தில், கதாநாயகன் தான் தொழில் செய்யும் இடத்தில் இருந்து வெகு தூரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு குடியேறுவார்.
அந்த வீட்டின் சொந்தக்காரர், தொழில் செய்யும் இடத்தின் அருகில் வாசிக்காமல் என் இவ்வளவு தூரத்தில் வந்து தங்குகிறீர்கள். உங்களுக்கு தேவையில்லாத பண விரயம் மற்றும் உடல் அலைச்சல் ஏற்படுமே என்று கேட்டார்.
அதற்கு அந்த கதாநாயகன் இந்த இடத்தில தான் பெரும் பணக்காரர்கள் வசிக்கிறார்கள். நானும் அவர்களை போலவே பெரும் பணம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இங்கு இருந்தால் தான் தினமும் அவர்களை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.
நான் சும்மா இருக்க நினைத்தாலும், அவர்களை பார்க்கும் போது அவர்களை போன்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில், மீண்டும் உற்சாகமாக வேலை செய்ய ஆரம்பித்துவிடுவேன்.
அதனால் தான் பணத்தையும், உடல் அலைச்சலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு தொலைவில் இருந்தாலும் பரவாயில்லை என்று இந்த குடியிருப்பில் குடியேற விரும்புகிறேன் என்று பாமரத்தனமாக சொல்வர்.
எவ்வளவு பெரிய உண்மை அது……!
நம் வீட்டிலோ, வேலை செய்யும் இடத்திலோ எதிர்மறை எண்ணம் கொண்ட சிலரை பிடித்தோ பிடிக்காமலேயோ சந்திக்க நேரிடும். அவர்களிடம் கவனமாக இருங்கள். உங்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சம் சுறு சுறுப்பு கூட அவர்களால் கெட்டு விடும்.
அலுவலக நேரம் முடிந்த பிறகு கொஞ்சம் வேலை செய்யலாம் என்று நினைத்தால், ஒரு குரல் கேட்கும். நானும் இப்படித்தான், இந்த அலுவலகத்தில் சேர்ந்த புதிதில் வேலை வேலை என்று கால நேரம் பார்க்காமல் வேலை செய்துகொண்டிருப்பேன்.
ஆனால் இந்த நிறுவனம் எனக்கு எதுவும் செய்யவில்லை. சம்பள உயர்வு கூட சொல்லிக்கொள்ளும்படியாக இருக்காது. பேசாம வீட்டுக்கு போய் குழந்தைகளுடன் பொழுதை கழியுங்கள் என்று கேட்காமலேயே ஒரு அறிவுரை கிடைக்கும்.
விசாரித்தால் தான் தெரியும் அவரது வேலையே ஒழுங்காக வேலை செய்பவர்களை கெடுப்பது என்று. அது போன்றவர்களை சற்றும் யோசிக்காமல் தள்ளி வையுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால், முதலில் உங்களை சுற்றி இருப்பவர்கள் யார் என சிந்தியுங்கள்.
◇சுறுசுறுப்பானவரா….?
◇தன்னம்பிக்கை கொண்டவரா….?
◇விரக்தி எண்ணம் கொண்டவரா….?
◇வாழ்க்கை மீது நம்பிக்கை இல்லாதவரா….?
தக்க நேரத்தில் எடுத்து சொல்லி நம்பிக்கையூட்ட நல்ல மனிதர்கள் இல்லாததால் வாழ்க்கையில் தோற்றவர்கள் பலர்…..
பெரிய பெரிய சாம்ராஜ்யங்கள் கூட தங்கள் பக்கத்தில் இருந்த தவறான எண்ணம் கொண்டவர்களால் சரிந்து போயிருக்கின்றன.
எனவே வாழ்க்கையில் வெற்றி பெற உங்களை சுற்றி சரியான மனிதர்களை வைத்துக்கொள்வது அவசியம்.
எந்த லட்சியமும் இல்லாமல் சதா வாழ்க்கையை குறை சொல்லிக்கொண்டு பொழுதை போக்குபவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளாதீர்கள்.
எவ்வளவு தடைகள் வந்தாலும், துவண்டு போகாமல் மீண்டும் மீண்டும் முயற்சிப்பவர்களை தேடி தேடி நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்.
உங்கள் பக்கத்தில் இருப்பவர்களால் நீங்கள் உற்சாகம் பெறுவதை போல, உங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் உங்களால் உற்சாகம் பெற வேண்டும் என்று நினையுங்கள்.
உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் உற்சாகப்படுத்துங்கள், அப்போது தான் உங்கள் அருகில் இருக்க விரும்புவார்கள்.
வாழ்க்கையில் வெற்றி பெற ஒன்றை முடிவுசெய்து கொள்ளுங்கள். உங்களை சுற்றி இருப்பவர்கள் ஒன்று உங்களை உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும், அல்லது நீங்கள் உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...