\ஒரு துறவிக்கு திடீரென கடவுள் மீது சந்தேகம் வருகிறது.
இவர் நல்லாட்சிதான் புரிகிறாரா இல்லையா என்று நினைக்கிறார்.
சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள நாட்டுக்குள் போக நடக்கிறார்.
வழியில் வழிப்போக்கனாக இளைஞன் ஒருவன் அவரிடம் நட்பு பாராட்டுகிறான். கொஞ்சம் நேரத்திலேயே இளைஞனும் துறவியும் நட்பாகிவிடுகிறார்கள்.
பகலைப் நடந்து கழித்த அவர்களுக்கு இரவு தங்குவதற்கு இடம் தேவைப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பரிதி மங்கும் நேரம் ஒரு கோட்டையைப் பார்த்து அதை நோக்கி நடக்கிறார்கள்.அக்கோட்டைக்கு சொந்தக்காரன் அவர்களை அன்போடு வரவேற்று தங்க வசதிகள் செய்து கொடுக்கிறான்.
சாப்பிட ராஜ போக உணவு கொடுக்கிறான். சுகமான படுக்கைகள் தயார் செய்து கொடுக்கிறார்கள்
மறுநாள் காலை உணவின் போது துறவிக்கும் இளைஞனுக்கும் தங்கக் கோப்பையில் திராட்சை ரசம் கொடுக்கிறான் அந்த கோட்டைக்காரன்.அதைக் குடித்து துறவியும் இளைஞனும் வெளியே நடந்து கொஞ்ச நேரமாகியதும் இளைஞன் தான் திருடிய தங்ககோப்பையை வெளியே எடுக்கிறான்.
துறவி பதறுகிறார். “எவ்வளவு நல்ல மனிதன் அந்தப் பணக்காரன்.அவனிடம் போய் திருடினாயே” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, வேறு வழியில்லாமல் இளைஞனோடு பயணம் செய்கிறார்.
அன்று இரவு மழை பொழிந்து குளிர் கவிழ்ந்து அவர்களைத் தொந்தரவு செய்கிறது.இன்னும் கொஞ்சம் நேரம் அச்சூழ்நிலையில் இருந்தால் அவர்கள் உயிர் போவது உறுதி.
அங்கே ஒரு வீடு தென்பட அதைத்தட்டுகிறார்கள். எவ்வளவு தட்டினாலும் அக்கதவு திறக்கபடவில்லை.
வீட்டின் சொந்தக்காரன் கல்நெஞ்சுக்காரன்.பத்தாயிரம் தடவை தட்டிய பிறகு வீட்டின் கதவு கொஞ்சமாக திறந்தது.முகத்தைச் சுழித்தபடியே அவர்களை உள்ளே விட்டான்.அவர்களுக்கு கொஞ்சம் புளித்த திராட்சை ரசமும், பழைய ரொட்டியும் கொடுத்தான். மழை விட்டதும் அவர்களை வெளியே போகச் சொல்லிவிட்டான்.
போகும் முன் அந்த இளைஞன் அக்கருமியிடம் “இது என் பரிசு” என்று அந்தத் திருடிய தங்கக்கிண்ணத்தைக் கொடுக்கிறான்.
துறவிக்கு எரிச்சலாயிருக்கிறது. நல்லவனிடம் பறித்து கெட்டவனிடம் கொடுக்கும் மனிதனைப் பார்த்தால் எரிச்சலாகத்தான் இருக்கும்.
இன்னொருநாள் இரவு ஒரு கடவுள் கொண்டாடியின் வீட்டில் தங்குகிறார்கள். ’கடவுள் கொண்டாடி’ அவர்களை வரவேற்று உபசரிக்கிறார். இரவெல்லாம் ’கடவுள் கொண்டாடி’ இளைஞனும் இறைத்தத்துவம் பேசிகிறார்கள்.
காலையில் போகும் முன் இளைஞன் அந்த ’கடவுள் கொண்டாடியின்’ குழந்தையைக் கழுத்தை நெறித்து கொன்று விட்டுப் போகிறான்.
துறவி இதைப் பார்த்து நெஞ்சு படபடக்க வெளியே ஒடுகிறார்.அதைவிட இழிவான செயலை அவர் பார்த்ததே இல்லை. ஆனால் அவருக்கு எங்கே ஒடுவதென்று தெரியவில்லை.எல்லா பாதைகளும் அடைபட்ட மாதிரி இருக்கிறது.
இந்த நேரத்தில் இளைஞன் வந்து அவரோடு சேர்ந்து கொள்கிறான்.
இவர்கள் பாதைத் தேடுவதைப் பார்த்து அப்பக்கம் வந்த குடியானவன் வழிகாட்ட முன்வருகிறான்.அக்குடியானவன் பாலத்தில் நடந்து வரும் போது இளைஞன் அவனை தள்ளி விடுகிறான். நீரில் விழுந்து தன் உயிரை விடுகிறான் வழிகாட்டி.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று வெடிக்கிறார் துறவி. இளைஞனை வெறித்தனமாக திட்டுகிறார்.
இப்போது இளைஞன் இன்னும் அழகாகிறான்.அவன் உடலில் வெண்ணிற இறக்கைகள் முளைக்கிறது.அவன் தேவதூதனாகிறான்.
துறவி கண் இமையை இறக்கி எழுப்ப முடியாது பார்த்துக் கொண்டிருக்கிறார். தன் சந்தேகங்களைக் கேட்கிறார்.
1.”ஏன் அந்த நல்ல பணக்காரனின் தங்கக் கோப்பையைத் திருடினாய்?” இது துறவி
“அவன் தேவைக்கு அதிகமாக பகட்டுக் காட்டுகிறான்.தங்கப்கோப்பையில் திராட்சை ரசம் என்பது குடிப்பவனுக்கு ஒரு நன்மையையும் செய்யப் போவதில்லை.அது அப்பணக்காரனின் பணத்திமிரைக காட்ட அவன் செய்து கொண்ட வழி. அது தவறு என்று அவன் உணர்ந்து கொள்ளத் திருடினேன்.இனி அவன் சிக்கனமாய் உபரிசரிப்பான் பார்”
2.ஏன் அந்ததங்கக் கோப்பையை ஒரு கெட்டவனுக்கு பரிசாகக் கொடுத்தாய்?
அவன் அன்று முழுவதுமாய் கெட்டவனாயிருந்தால் கதவை திறக்காமலேயே நம்மை சாகடித்திருப்பான்.அவனிடம் நல்ல மனது கொஞ்சம் இருக்கிறது. அதை அங்கீகரித்தால்தான் அவன் இன்னும் நல்லவனாக முடியும். சிறிய அளவில் நன்மை செய்ததற்கே தங்கக் கோப்பையை கடவுள் கொடுக்கிறாரே.அப்போது பெரிய அளவில் நன்மை செய்யலாமே என்ற எண்ணம் அவனுக்கு வர சாத்தியம் அதிமிருக்கிறது.
3.ஏன் அந்த அப்பாவிக் குழந்தையைக் கொன்றாய்? அதன் தந்தை நம்மை எப்படி உபசரித்தார்?
அக்குழந்தையின் தந்தை ஒரு ‘கடவுள் கொண்டாடி’. ஆனால் இப்போது அக்குழந்தை பிறந்த பிறகு அவர் மனம் சுயநலமாக யோசிக்க ஆரம்பித்திருக்கிறது. இன்னும் இக்குழந்தையின் நலனுக்காக இவன் பல பாவ காரியங்கள் செய்வான் என்று எங்களுக்குத் தெரிகிறது.அதனால் அக்குழந்தையை தேவ குழந்தையாய் ஆக்கிவிட்டேன்.அதற்குள்ள ராஜ்ஜியத்தில் அது நல்லபடியாகத்தான் இருக்கிறது.இப்போது அந்தக் ’கடவுள் கொண்டாடியைப்’ பார். இன்னும் அதிகமாக கடவுளை துதிக்கிறான். மற்றவர்களுக்கு நல்லது செய்கிறான்.
4.அப்படியானால் வழிகாட்டியாய் வந்தவனையே ஏன் ஆற்றில் தள்ளிவிட்டுக் கொன்றாய்?
அவன் நல்லவனில்லை. அவன் ஒரு நல்ல பணக்காரனின் சொத்தைப் பொருளை திருட இருந்தான்.அப்பொருள் எல்லாம் நல்ல காரியத்துக்காக சேர்த்து வைத்திருந்தது, அதைத் திருடினால் பலர் கஷ்டப்படுவார்கள்.அதனால் அவனைக் கொன்றேன்.
துறவி தேவதூதனை வணங்கி நின்றார். தேவதூதன் தொடர்ந்தான்.
“இறைவனை உன்னுடைய மனித மனது கொண்டு அளக்க முயற்சி செய்யாதே.இறைவனுக்கு தன் விளையாட்டின் அர்த்தம் புரிந்தே விளையாடுகிறான். தன் குழந்தைகளான உங்களை அவன் எதன் பொருட்டும் ஏற்றத் தாழ்வாய் நடத்துவதில்லை. நீ உன் வாழ்க்கையில் கடைபிடிக்கும் தர்மத்தை அளக்கக் கூட அவன் அதைச் செய்யலாம். மனிதக் கண்கள் கொண்டு அவனை அளந்தால் நிம்மதியின்மைதான் ஏற்படும்” என்று சொல்லி தேவதூதன் மறைகிறான்.
துறவியின் சந்தேகம் தீர்ந்து மறுபடியும் கடவுளை துதிக்க காட்டுக்குள் செல்கிறார்.
இது தாமஸ் பார்னல் எழுதிய The Hermit என்ற கவிதைக் கதையின் சுருக்கம்.
நான் இதன் தமிழாக்கத்தைப் படித்து அதன் பிறகே கவிதைப் படித்து ஒரளவுக்குப் புரிந்து கொண்டேன்.
இக்கவிதையின் பொருளை இந்திய மரபில் பிறந்தநாம் அனைவரும் சிறுவயதில் இருந்தே கேட்டிருப்போம்.
அக்குழந்தையை கொல்வது மாதிரி படைப்பாளி எழுத வேண்டுமா? என்று தோன்றியது. ஆனால் அதை அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது.
அக்காலத்தில்( 1679 -1718) குழந்தைகள் நோயில் இறந்து போவதென்பது சாதரண விசயம்.
அப்படி குழந்தைகளை பறிகொடுத்த பல மனித மனங்களுக்கு ஆறுதல் சொல்லுமாறு “இது ஒன்றுமில்லை.இது கடவுளின் லீலைதான்.உங்கள் குழந்தைகள் தேவராஜ்ஜியத்தில் நிம்மதியாகத்தான் இருக்கிறார்கள்” என்று தாமஸ் பார்னல் (
Thomas Parnell) எழுதியிருக்கலாம்.
Thomas Parnell) எழுதியிருக்கலாம்.
இறைவனை எதிர்த்து கேள்வியே கேட்கக்கூடாது என்ற பிற்போக்குக் கருத்தை முன்வைப்பது மாதிரி தெரிந்தாலும்,
’மாற்ற முடியாதது பற்றி வருந்திக் கொண்டே இருக்காதே அது இறைவனின் விளையாட்டாகக் கூட இருக்கலாம்’ என்ற வாதத்தை முன்வைப்பது மூலம்
பல தற்கொலைகளை தாமஸ் பார்னல் நிறுத்த அக்கறை கொள்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment