காதல் திருமணங்களில் மிகுதியாய்ச் சண்டை சச்சரவுகள் தோன்றுவதும், பெரியோர் பார்த்துச் செய்து வைத்த திருமணங்களில் ஒப்பீட்டளவில் முரண்கள் குறைவாக இருப்பதும் உண்மை.
அவ்வளவு தூரம் கனவு கண்டு, துரத்திக் காதலித்து, திருமணமும் செய்துகொண்ட காதலர்கள் தம் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்த பின்னும் ஏன் முட்டிக்கொள்கிறார்கள் ?
முன்பின் அறியா நிலையில் திருமணத்தின் வழியாக ஒன்றிணைந்தவர்கள் எவ்வாறு பொருந்திப் போகிறார்கள் ? இதற்கு உளவியல் காரணம் ஒன்றைக் கருதலாம்.
காதலிப்பவர்கள் தத்தம் விருப்பப்படி வாழ்வதில் முனைப்புள்ளவர்கள். அந்த முனைப்பின் தூண்டுதலால்தான் காதலில் குதித்தார்கள். தமக்குத் தோன்றிவிட்டால் அதை நிறைவேற்றிக்கொள்வதில் தடை தகர்க்கத் தயங்கமாட்டார்கள். அந்தத் தயக்கமின்மைதான் தம் காதலைத் தெரிவித்து நிறைவேற்றிக்கொள்வதற்கும் நகர்த்தியது.
‘இதுதான் இப்படித்தான்’ என்றிருந்தால் ‘ஏன்... இப்படியிருந்தால் என்ன ?’ என்று எதிர்க்கும் குணமுடையவர்கள். சமூக விதி இதுதான் என்று சொன்னால் விதியுடைக்கும் மதியுடையவர்கள். ‘நான் என் விருப்பப்படிதான் இருப்பேன்’ என்பதில் குறியாய் இருப்பவர்கள்.
சுருக்கமாகச் சொன்னால், காதலிப்பவர்கள் சமூகத்தின் இளநிலைக் கலகக்காரர்கள். அதனால்தான் அவர்கள் காதலில் துணிந்திறங்கினர். உறவுகளைப் பகைத்தேனும் தம் காதலை நிறைவேற்றிக்கொண்டனர்.
இந்த மனநிலையை அப்படியே குடும்ப வாழ்க்கைக்குள் பொருத்திப் பாருங்கள். இதே தன்முனைப்பு, இதே தயக்கமின்மை, இதே கலகமனம் இல்வாழ்வின் முரண்களையும் எதிர்கொள்கின்றன. அங்கே அவர்களுக்குள் முரண் முற்றி தன்வெறியாடலாகி அடிதடியும் பேச்சும் வலுத்துவிடுகின்றன.
திருமண வாழ்க்கை என்பது முழுக்க முழுக்க விட்டுக்கொடுப்பதால் நகர்த்த வேண்டிய ஒன்று. காதலின்போது செயல்பட்ட அதே புரட்சி மனப்பாங்கு இங்கே செல்லுபடி ஆவதில்லை.

இதற்கு நேர்மாறாக, ஏற்பாட்டுத் திருமணங்களில் இணைந்தவர்கள் இயன்ற வழியொற்றி வாழ்வதை விரும்புபவர்கள். இதன் எல்லை இதுதான் என்கின்ற நடைமுறை விளங்கியவர்கள். இவற்றோடு உறவுகளின் வலிமையான பக்கத்துணையும் சேர்வதால் இன்னும் இயல்பாகிவிடுகிறார்கள். எதுவாயினும் ஏற்று வாழ்கின்றனர்.
பொதுமைப்படுத்த முடியாதுதான். பெரும்பான்மையான காதல் திருமண முரண்களையும், ஏற்பாட்டுத் திருமண நலன்களையும் தீர்மானிக்கும் காரணங்கள் இவை என்று கருதலாம்.
No comments:
Post a Comment