Friday, September 30, 2016

கர்மா..................


கர்மா என்பது மிக எளிதான, அதேவேளையில் மிக நுட்பமான வகையில் நிலைபெற்றிருக்கும் பிரபஞ்ச நியதி ஆகும். சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்றுதான் 'கர்மநியதி'.

"நல்லதை செய்தால், நல்லதே நடக்கும்.
கெட்டதை செய்தால், கெட்டதே நடக்கும்"

இது கர்மாவைப் பற்றிய எளிதான விளக்கம். நம்மில் அனைவரும் இந்த விளக்கத்தை நன்கு அறிந்திருப்போம். ஆனால், கர்மாவைப் பற்றிய நுட்பமான அறிவியல் என்ன? இதை ஆங்கிலத்தில் 'The Science of Action' (செயல் அறிவியல்) என்பார்கள். இப்போது அதை நாம் அறிவோம்.

கர்மா என்றால் செயல் அல்லது வினை எனப் பொருள்படும். 'எண்ணித் துணிக கருமம்' என்றார் ஐயன் வள்ளுவர். ஒரு செயலை செய்வதற்கு முன்னர், அச்செயலின் நோக்கத்தை நன்கு ஆராய்ந்து உணரவேண்டும். ஒரு செயலை விட அதன் நோக்கமே மிக முக்கியமாகும்.


|| காரணமும் விளைவும்

காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டு விதிகளையும் அடிப்படையாகக் கொண்டு கர்மநியதி இயங்குகின்றது.

* காரணம் (ஆங். cause) என்றால் ஒரு செயலின் பின்னால் இருக்கும் காரணம் அல்லது நோக்கம்

* விளைவு (ஆங். effect) என்றால் ஒரு செயலை ஆற்றிய பின்னர் அச்செயலைப் பொறுத்து வருங்காலத்தில் ஏற்படும் விளைவுகள்

|| செயலாற்ற ஆறு விதிமுறைகள்

ஒரு செயலை செய்வதற்கு முன்னர், 'இதை நான் ஏன் செய்கிறேன்?' என்று தன்னிடம் கேட்டுக் கொள்வதன் மூலமாக ஒரு செயலின் காரணத்தை நாம் அறியலாம். அந்த காரணம் ஆறு விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். அவை:

அ) தர்மமுடைய செயல்

ஆ) பிறர் பொருளை அபகரிக்காத செயல்

இ) சுயநலமற்ற செயல்

ஈ) தனக்கும் மற்ற அப்பாவி உயிர்களுக்கும் தீமை விளைவிக்காத செயல்

உ) விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்ட செயல்

ஊ) பிறருக்கு நன்மை பயக்கும் செயல்

*விதிமுறைகள் என்பவை ஒரு நாட்டின் சட்டத் திட்டங்களைக் குறிக்கும்

இவ்வாறு ஆறு விதிமுறைகளுக்கும் உட்பட்ட செயலை காலம் தாழ்த்தாமல் மன உறுதியுடன் செய்ய வேண்டும்.

உதாரணமாக, நம் தேசத்தைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள் தீவிரவாதிகளைக் கொல்கிறார்கள். கொல்வது தீவினை என்ற பட்சத்தில் அவர்களை தீவினை சூழ்வதில்லை. 'தீயவரை அழிப்பதே வீரனுக்கு அறம்' ஆகும். நம் நாட்டு மக்களைக் காக்க வேண்டிய நன்நோக்கத்தில், சுயநலமின்றி, தியாக மனப்பான்மையுடன் நம் இராணுவ வீரர்கள் செயல்படுகின்றனர். நாட்டைக் காப்பதும் கொடியவர்களை அழிப்பதும் அவர்களின் கடமையாகும். கடமையை செய்வதால் அவர்கள் கர்ம வீரர்களாகின்றனர்.

|| மூன்று வகை கர்மா

ஒரு செயலின் விளைவுகள் பெரும்பாலும் உடனுக்குடனே விளைவதில்லை. பல பிறவிகளுக்கு பின் கூட விளையலாம். ஒருவன் பல பிறவிகளில் செய்த செயல்களின் மொத்த விளைவுகள் 'சஞ்சித கர்மா' எனப்படுகின்றன. இப்பிறவியில் புதிதாக சேர்க்கும் விளைவுகள் 'ஆகாமி கர்மா' எனப்படுகின்றன. ஒருவன் தற்போதைய பிறவியில் அனுபவிக்கும் விளைவுகள் 'பிராரப்த கர்மா' எனப்படுகின்றன.

ஒரு பழமரத்தின் விதையை விதைத்த உடனே கனி கிடைத்துவிடாது. விதை முளைத்து செடியாகி, செடி மரமாகி, மரம் பூத்து அதன்பின்னரே கனி வரும். அதுபோல ஒரு செயலை செய்தவுடன் அதற்கான விளைவு, காலம் தாழ்த்தினாலும் கண்டிப்பாக விளையும். ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்பதுன்பங்களுக்கு பெரும்பாலும் அவனின் முந்தைய கருமங்களே முக்கிய காரணமாகும்.

|| செயல் சுதந்திரம்

தாவரங்கள், மிருகங்கள் போன்ற மற்ற உயிரினங்களுக்கு செயல் சுதந்திம் கிடையாது. அவை தன்னுடைய மரபணுவில் பதிவு செய்யப்பட்டிருக்கும் 'விதிக்கப்பட்ட செயல்களை' ஆற்றிவிட்டு உடலிலிருந்து விடைபெறும். இதனால் மற்ற உயிரினங்களை கர்மநியதி சீண்டுவதில்லை. ஆனால், மனிதர்களுக்கு செயல் சுதந்திரம் உள்ளது. மனிதனுக்கு தன் விருப்பப்படி செயல்பட சுதந்திரம் இருக்கின்றது. அளவற்ற அறிவுத்திறன் உடைய மனிதன் பலவிதமான செயல்களை செய்கிறான். மனிதன் தன் அறிவுக்கூர்மையைப் பயன்படுத்தி ஆக்கமுடைய செயல்களை ஆற்றவேண்டுமே தவிர அழிவை ஏற்படுத்தும் செயல்களை அல்ல. மனிதனுக்கு செயல் சுதந்திரம் இருந்தாலும் செயலின் விளைவுகளை மாற்றும் வலிமை கிடையாது. இதை தான் 'விதியை மாற்ற முடியாது' என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றான். மனிதனுக்கு 'விதி' என சொல்லப்படும் கர்ம விளைவுகளை மாற்றிட ஆற்றல் இல்லை; ஆனால் மனிதன் ஆன்மிக ஈடேற்றம் அடைந்து ஆன்மநிலை எய்துவிட்டால் கர்ம விளைவுகளை தன் பக்குவநிலையின் சக்தியால் 'சாம்பலாக்கிவிடும்' வல்லமையை அடைவான்.

பக்தி, யோகம், தியானம், ஞானம் - ஆகிய நான்கு வழிகளைப் பின்பற்றுவதால் ஒருவன் கர்மவிளைவுகளிலிருந்து மீளலாம். எப்போதும் தவறாமல் இந்த நான்கையும் பயிற்சிப்பதே கர்மவிளைவுகளிலிருந்து மீள்வதற்கான வழியாகும்.

"ஞானம் எனும் தீயில் கர்மவிளைவுகள் எல்லாம் சாம்பலாகிவிடும்" (பகவத் கீதை)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...