Wednesday, September 14, 2016

நான் ஒரு தமிழச்சி.................

1972 ஆம் ஆண்டு அன்றைய பிரபல வார இதழில் ஜெயலலிதா ஒரு கன்னடர் என்ற தொனியில் ஓர் கட்டுரை எழுதப்பட்டிருந்தது. சர்ச்சைக்குள்ளான இந்த கட்டுரைக்கு அந்த இதழுக்கு ஜெயலலிதா மறுப்புக்கடிதம் எழுதியிருந்தார். அடுத்த சில வாரங்களில் பிரசுரமான அந்த கடிதத்தில் பல்வேறு ஆதாரங்களுடன் தான் தமிழச்சியே என உறுதிபட தெரிவித்திருந்தார்.
இந்த இதழ் வெளியான சமயம், ஜெமினி கணேசனுடன் அவர் இணைந்து நடித்த கங்கா கவுரி என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக மைசூரில் உள்ள பிரபல பிரீமியர் ஸ்டுடியோவில் இருந்தார். அங்குள்ள பத்திரிகைகள் அவரிடம் பேட்டி எடுத்தன. அப்போது முந்தைய மறுப்புக்கடிதத்தை சுட்டிக்காட்டி ஒரு நிருபர், 'நீங்கள் கன்னடியர்தானே' என கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஜெயலலிதாவிடம் மற்றொரு நிருபர், 'நீங்கள் மைசூரில் தானே பிறந்தீர்கள்' என்று கேட்டார். ஆம் என்று தெரிவித்த ஜெயலலிதா, 'நான் தமிழ் குடும்பத்தில் பிறந்தவள். என்னுடைய தாய்மொழி தமிழ், நான் ஒரு தமிழச்சி' என்று பதிலளித்தார்.
மறுநாள் இந்த பேட்டி கன்னட இதழ்களில் வெளியானபோது பெரும் சர்ச்சை எழுந்தது அங்கு. கன்னட மொழி உணர்வாளர்கள் கத்தி, வாள், கம்பு போன்ற ஆயுதங்களுடன் படப்பிடிப்பு நடைபெற்ற பிரிமியர் ஸ்டூடியோ வளாகத்திற்கு திரண்டு வந்தனர். படத்தின் தயாரிப்பாளர் பி.ஆர்.பந்தலு, நடிகர்கள் ஜெமினி கணேசன், அசோகன் உள்ளிட்டவர்கள் அங்கு இருந்தனர். கிட்டதட்ட ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாதபடி ஸ்டுடியோ முற்றுகையிடப்பட்டது. 'கன்னட துரோகி ஜெயலலிதாவே மன்னிப்பு கேள், கன்னடர் என்பதை ஒப்புக்கொள்' என்ற கோஷங்களால் அந்த இடம் பரபரப்பானது.
பயந்துபோன படப்பிடிப்புக் குழு அஞ்சி நடுங்கிய நிலையில் போராட்டக்காரர்களில் சிலர் உள்ளே நுழைந்துவிட்டனர். ஜெயலலிதாவிடமே, 'கன்னடியர் ஆகிய நீ, தமிழச்சி என்று எப்படி பேட்டி கொடுக்கலாம். நீ கன்னடியர் தான் என்று சொல்' என மிரட்டினார்கள். விஷயம் விபரீதமாகிக்கொண்டிருப்பதைக் கண்ட படப்பிடிப்புக்குழுவினர் எப்படியாவது பிரச்னையை சமாளிக்க ஜெயலலிதாவை சமாதானப்படுத்தி அவர்கள் கூறுவதுபோல் மன்னிப்பு கேட்கச் சொல்லி வற்புறுத்தினர்.
ஆனால் ஜெயலலிதா தன் முந்தைய கருத்தில் உறுதியாக இருந்தார். “மிரட்டுகிறார்கள் என்பதற்காக இல்லாத ஒன்றை சொல்லமாட்டேன்“ என உறுதியாக தெரிவித்துவிட்டார். இந்த பதிலால் ஜெயலலிதாவை தாக்க முனைந்தனர் சிலர். 'என்ன நடந்தாலும் சரி... நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்' என அப்போதும் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார் அவர். இறுதியாக 'குறைந்தபட்சம் கன்னடத்திலேயாவது பேசு' என அவர்கள் மிரட்டினர். 'எனக்கு எத்தனை மொழிகள் தெரிந்திருந்தாலும் அதை என் தேவைக்காக மட்டுமே பேசுவேன். நீங்கள் மிரட்டி என்னை பேசவைக்கமுடியாது' என விடாப்பிடியாக மறுத்தார்.
படப்பிடிப்புக்குழுவினர் சிலர் தந்திரமாக வெளியேறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் எந்த பலனும் கிட்டவில்லை. காவல்துறை சம்பவ இடத்துக்கு வரவில்லை. பிரச்சனை கட்டுப்பாட்டை மீறிக் கொண்டிருந்ததையடுத்து பந்துலு உடனடியாக இதை சென்னையில் இருந்த பிரபலம் ஒருவருக்கு தெரிவித்தார். சென்னையிலிருந்து அவர் தன் பிரபல்யத்தைப் பயன்படுத்தி, கர்நாடக முதல்வரை தொடர்புகொண்டு விஷயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அடுத்த சில நிமிடங்களில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து கலகக்காரர்களை விரட்டி ஜெயலலிதா உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரை மீட்டுவந்தது. இப்படி, உயிருக்கு பிரச்னை ஏற்பட்ட நிலையிலும் மற்றவர்கள் சொல்வதை ஏற்காமல், சர்ச்சைக்குரிய மண்ணில், தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் தான் தமிழச்சிதான் என உறுதிபட நின்றவர் ஜெயலலிதா.
கர்நாடக மண்ணில் எழுந்த மொழி உணர்வின் வெளிப்பாடு இப்போதும் காவிரிப்பிரச்னையில் வேறு வடிவில் வெளிப்படத்துவங்கியிருக்கிறது. ஒரு நடிகையாக கர்நாடகத்தினரை சமாளித்த ஜெயலலிதா ஒரு முதல்வராக இந்த பிரச்னையை எதிர்கொண்டு தமிழகத்திற்கு வெற்றியை தேடித் தரவேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...