Thursday, September 22, 2016

COD - Cash On Delivery

ஃப்ளிப்கார்ட்டில் தொடர்ந்து பொருட்களை வாங்கி வந்தவன் தான் நான். ஆனால் மிகச் சமீப காலமாக அவ்ர்களின் செயல்பாடுகளில் கடும் அதிருப்தி. அதன் காரணங்களை ஆராய்ந்த போது தான் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது புரிந்தது.
”ஃப்ளிப்கார்ட் ஒரு கர்நாடக நிறுவனம். அதனை நிராகரிப்போம்” என்றெல்லாம் தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. ஆனாலும் அதையெல்லாம் நான் கண்டு கொண்டதில்லை. ஆனால் அவர்களிடம் கஸ்டமர் சர்வீஸ் என்பது துளிக்கூட இல்லை என்பதை பல்வேறு நண்பர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து தெரிய வந்தது எனும் போது தான் இந்தப் பதிவு அவசியமாகிறது.
நாம் பொருட்களை வாங்கும் போது 10 நாட்களுக்குள் நீங்கள் திருப்பித் தரலாம் என்றொரு வாக்குறுதி அளிக்கிறார்கள். இப்போது ஒரு சில பொருட்களுக்கு அந்த வாக்குறுதி இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த தெளிவான அறிவுறுத்தல் இல்லை. எப்போதும் போல என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம்.
F-Assured என்றொரு badge பல பொருட்களின் பக்கத்தில் போடப்பட்டிருக்கும். அதாவது பொருட்களை அனுப்புவதற்கு முன்பு அதனை முழுவதும் பரிசோதித்து விட்டு தான் அனுப்புவோம். 2 முதல் 4 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும் என்பது வாக்குறுதி.
ஆனால் ஃபோனுக்கு பதில் செங்கல் வைத்து அனுப்பப்பட்ட கதையெல்லாம் இருக்கிறது. கேட்டால் எங்கள் லாஜிஸ்டிக் பார்ட்னர் தரப்பில் தவறு என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அந்த எழவெடுத்த லாஜிஸ்டிக் பார்ட்னரும் ப்ளிப்கார்ட்டின் பினாமி நிறுவனம் தான்.
2 முதல் 4 நாட்கள் டெலிவரி என்பதும் பல சமயங்களில் இல்லை. கேட்டால் அப்போதும் ‘லாஜிஸ்டிக் பார்ட்னர் டிலே செய்து விட்டார்கள்’ என்கிறார்கள். 2 முதல் 4 நாட்களில் ஷிப்பிங் செய்து விடுவோம் என்று உறுதி அளித்திருந்தால் அவர்கள் கூற்று ஓகே. ஆனால் 2 முதல் 4 நாட்களில் டெலிவரி என்று சொல்லி விட்டு அதனைச் செய்யாவிட்டால் அது அப்பட்டமான விளம்பரக் கண் துடைப்பு இல்லையா?
10 நாட்களுக்கு ரிட்டர்ன் என்று கூறுகிறார்கள். பொருள் பிடிக்காத பட்சத்தில் அல்லது பிரச்னை என்ற போது 10 நாட்களுக்குள் ரிட்டர்ன் அனுப்ப முயலும் போது அவர்களாக வந்து தான் எடுத்துக் கொள்வார்கள். அதையும் உடனடியாகச் செய்வதில்லை. வேண்டுமென்றே கொஞ்சம் தாமதப்படுத்தி விட்டு வந்து எடுத்துக் கொள்கிறார்கள். அதனைக் கொண்டு போய் அவர்கள் கம்பேனியிலேயே சேர்ப்பித்து அவர்கள் பரிசோதித்த பிறகே ரீஃபண்டு தருவார்களாம். இதே சலுகை அவர்கள் பொருளைக் கொண்டு வந்து தரும் போது பாக்கெட்டை பிரித்து பரிசோதித்து வாங்கிய பிறகே பணம் தருவோம் என்று நாம் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். உள்ளே செங்கல்லையோ அல்லது வேறு எந்த கண்ராவியையோ வைத்து அனுப்பி நம்மை ஏமாற்றும் போதும் நாம் பணம் கட்டி வாங்கி விட்டு பிறகு தான் அவர்களைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் நம் பணத்தைத் திரும்பப் பெற.
பத்து நாட்கள் ரிட்டர்ன் கேரண்டியில் ஒருவழியாக அவர்கள் லாஜிஸ்டிக் பார்ட்னர் வந்து பொருளை எடுத்துச் சென்றாலும், அந்த ரிட்டர்னை அவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவற்றை ரிஜக்ட் செய்து உங்களுக்கே மீண்டும் திருப்பியும் அனுப்பி விட வாய்ப்புண்டு. மீண்டும் தொடர்பு கொண்டால் “10 நாட்களுக்கு மேலாகி விட்டது. எங்கள் ரூல்ஸ்படி ரிட்டர்ன் பெற்றுக் கொள்ள முடியாது” என்று கூறப்படும். முன்பு அனுப்பியதை ஏன் திருப்பி அனுப்பினீர்கள் என்று கேட்டால் சரியான பதில் வராது.
எந்தவொரு நிறுவனத்திலும் ரீஃபண்டு பிராசஸ் செய்யும் போது அது செய்த தேதி, நேரம் ஆகியவற்றைத் தெரிவிப்பார்கள். கூடுதல் தகவலாக ரெஃபரன்ஸ் கோடு கேட்டாலும் தெரிவிப்பார்கள். ஆனால் ஃப்ளிப்கார்ட்டைப் பொறுத்தவரையில் அதெல்லாம் கிடையாது. அவர்களாக ரீஃபண்டு செய்து விட்டோம் 8 நாட்களாகலாம் என்று சொல்வார்கள். 8 நாட்களில் வந்து விட்டால் நீங்கள் செய்த பூர்வ ஜன்ம புண்ணியம் என்று அர்த்தம்.
எதாவது ஒரு பிரச்னை என்று அவர்களைத் தொடர்பு கொள்ள இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று... அவர்கள் கொடுத்துள்ள டோல் ஃப்ரீ டெலிஃபோன் நம்பர். இரண்டாவது மின்னஞ்சல்.
இரண்டில் எது வழியாகத் தொடர்பு கொண்டாலும் உங்கள் பிரச்னைக்காக ஒரு Incident ID என்று உருவாக்கித் தருவார்கள். “48 மணி நேரத்தில் உங்கள் பிரச்னை சரி செய்வோம்” என்று எப்போதும் போல ஒரு மின்னஞ்சல் வரும். ஜப்பான்காரன் தோத்தான் போங்கள்.. 48 மணி நேரம் கழித்து மணி, நிமிடம் உட்பட டைம் குறித்து அனுப்பியிருப்பார்கள் அந்த மின்னஞ்சலில். ஆனால் அந்த நேரத்தில் ஒரு கண்ராவி பதிலும் வந்திருக்காது. “என்னாங்கடா ஆச்சு?” என்று ஃபோன் செய்து கேட்டால் போதும். நீங்கள் ஃபோனை வைப்பதற்குள்ளாகவே அது மீண்டும் ஒரு 48 மணி நேரத்துக்கு நீட்டிக்கப்பட்டு மின்னஞ்சல் வந்து விடும். இப்படி நீங்கள் எத்தனை முறை அழைத்தாலும் அத்தனை 48 மணி நேரங்கள் நீங்கள் அழைத்த நேரத்திலிருந்து நீட்டிக்கப்பட்டு விடும்.
இதையெல்லாம் விட COD-யில் ஆர்டர் செய்தால் பார்சல் ஓரளவு சரியாக வந்து விடும். கவனிக்க.. பார்சல் தான் சரியாக வரும். உள்ளே பொருள் சரியாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமல்ல. செங்கல்லாகவும் இருக்கலாம். ஆனால் பணம் கட்டி வாங்குபவர்களுக்கு கடந்த சில வாரங்களாக எதாவது காரணம் சொல்லி தாமதப்படுத்துகிறார்கள். அல்லது பொருளை சும்மா நேக்கு போக்கு காட்டி வேறு ஊரு எங்காவது தவறுதலாகப் போய் விட்டது என்று கூறி தானாகவே கேன்சல் செய்து விடுவார்கள். இதுவும் கூட நீங்கள் பல நூறு தடவை அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டு நச்சரித்த பிறகே தெரிய வரும். அப்போதும் கூட, “உங்கள் பொருள் தவறுதலாக பெல்லாரிக்குச் சென்று விட்டது. அதனை கேன்சல் செய்து விட்டோம். உங்களுக்கான தொகை அந்தப் பொருள் எங்கள் கைகளுக்கு வந்த பிறகு திருப்பி தரப்படும்” என்பார்கள்.
அடேய்களா.. நீங்க செஞ்ச தப்புக்கு நாங்க ஏன்டா வெயிட் செய்யணும். இன்னும் என் கைக்கே பொருள் வரவில்லை எனும் போது எதுக்காக இந்த டிலே ரீஃபண்டுக்கு என்று கேட்டால், “ஸாரி சார்.. அது எங்க லாஜிஸ்டிக் பார்ட்னர் மிஸ்டேக் தான். ஆனாலும் எங்க கம்பேனி ரூல்ஸ்படி பொருள் திரும்ப எங்ககிட்ட வந்தப்புறம் தான் ரீஃபண்டு தருவோம்” என்று பதில் வரும்.
உங்க லாஜிஸ்டிக் பார்ட்னர் திரும்பவும் அதை வேற எங்கயாவது அனுப்பித் தொலைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் வராது.
இதையெல்லாம் மீறி டெலிவரி நபர் ஒருவர் COD மூலம் பொருளை கொண்டு வந்து கொடுக்கும் போது பணத்தை வாங்கிக் கொண்டு பொருளைக் கொடுத்து கையெழுத்து போடச் சொல்லி கவனத்தைத்திசைத் திருப்பி அந்த நேரத்தில் நாம் கொடுத்த பணத்திலிருந்து ஒரு 500 ரூபாயை தனியே எடுத்துப் பதுக்கி விட்டு, “500 ரூபாய் குறைவாகக் கொடுக்கிறீர்களே” என்று கேட்டுப் பெற்றுச் சென்ற சம்பவமும் சமீபத்தீல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. வாடிக்கையாளர் ஒருவர் வீட்டில் சிசிடிவி கேமராவுக்கு முன் நடந்த சம்பவம் இது.
ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவதில் எவ்வளவுக்கெவ்வளவு செளகரியம் இருக்கிறதோ.. அவ்வளவுக்கவ்வளவு அசெளகரியங்களும் உள்ளது.
இவ்வளவு பிரச்னைகள் குறித்தும் ஃப்ளிப்கார்ட் தரப்பு பதிலை எதிர்நோக்கி அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சச்சின் பன்ஸால் முதற்கொண்டு பலருக்கும் மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன். ஒரே ஒரு டோல் ஃப்ரி எண்ணைத்தவிர வேறு தொடர்பு எண்களே கிடையாது அவர்களிடம்.48 மணி நேரத்தில் தொடர்பு கொள்கிறோம் என்ற வழக்கமான டெம்ப்ளேட் பதில் வந்தது. பிறகு தொடர்பு கொண்ட போது இன்னொரு 48 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. இந்தப் பதிவு பகிரும் வரை பதிலே இல்லை.
முடிந்தவரை இந்தப் பதிவை பகிர்ந்து மேற்படி நிறுவனத்தின் பொருட்களை வாங்குபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட உதவி புரியுங்கள். மீறி வாங்குவதாக இருந்தால் COD - Cash On Delivery-யில் வாங்குங்கள். நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...