தான் விரும்பிய படிப்பு கிடைக்காவிட்டாலோ, எதிர்பார்த்த வேலையை அடையாவிட்டாலோ, நேசித்த பெண்ணைத் திருமணம் செய்யமுடியாவிட்டாலோ சோர்ந்துவிடும் இளைஞர்கள் பலர் இங்கே உள்ளனர்.
தங்களின் மகிழ்ச்சி, ஒரே மண்டலத்தில் மையம் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்துகொள்கிற வாழ்க்கை வானியல் நிபுணர்கள் அவர்கள்; எல்லா இடங்களிலும் ஏற்கெனவே பெய்துகொண்டிருக்கும் பருவமழையை ரசிக்கமுடியாதவர்கள்.
இறந்தகாலத்தின் சக்கைகளை அசைபோடுபவர்களுக்கு, நிகழ்காலத்தின் சாரத்தைச் சுவைக்கமுடியாமல் போய் விடும். எதிர்பார்த்தவை நிறைவேறாவிட்டாலும் வாழ முடியும். ஆனால், வாழ்க்கையே பறிபோய்விட்டால், எதையுமே சாதிக்கமுடியாமல் போய்விடுமே?!
எத்தனையோ வகைகளில், நம் வாழ்வைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக்கொள்ள முடியும். அது, குறிப்பிட்ட படிப்பு, பணி, மனைவி என நிர்ணயிக்கப்படுவதில்லை!
இலக்கை மனதில் வைத்து இயக்கத்தை மேற்கொள்வது நல்லதுதான். ஆனால், அது நிறைவேறாதபோது, அதற்குத் துணையான இலக்கை ஏற்கெனவே மனதில் தயார் செய்திருப்பது அவசியம். அப்போதுதான் சிறிதும் கவனம் பிசகாமல், நம் ஆற்றலை நேர்வழியில் செலுத்தமுடியும்.
'இன்ன பணியில்தான் உட்காருவேன்' என எல்லோரும் முடிவெடுத்தால், இந்த உலகம் சுழல்வது வெகு விரைவில் நின்றுபோகும். பணியின் உயர்வு, அர்ப்பணிப்பில் அடங்கியிருக்கிறதே தவிர, ஆர்ப்பரிப்பில் அர்த்தப்படுவதில்லை.
சாதாரணப் பணிகளைக்கூட, சாமர்த்தியமாகவும் அசாதாரணமாகவும் செய்து முடிக்கிற விற்பன்னர்கள் இருக்கிறார்கள். அவர்கள், தயிர் கடைவதைக்கூட வீணை வாசிப்பதைப் போல் அக்கறையுடன் செயலாற்றுவார்கள். ஒரு சிலர், கடம் வாசிப்பதைக்கூடக் கடனே என்று செய்கிறார்கள்.
பிரச்னைக்கான தீர்வு, வெளியே இருந்து வரும் என எதிர்பார்ப்பதாலேயே மகிழ்ச்சி பறிபோய்விடுகிறது. எல்லாப் பிரச்னைகளும் நம்மிடம் இருந்தே தொடங்கியவை. எனவே, அவற்றுக்கான தீர்வுகளும் நம்மிடம்தான் இருக்கின்றன.
No comments:
Post a Comment