Wednesday, August 30, 2017

கையிலே வெச்சிருக்கிற லைசன்ஸ் ஒரிஜினல் தானான்னு டேட்டா பேஸில் ஸ்பாட் செக் செய்யும் ஆப்ஷன் இல்லாத வரையில் இதெல்லாம் வேஸ்ட் தான்.

”ஒரிஜினல் லைசன்ஸைக் கையில் கொண்டு செல்வதில் என்ன பிரச்னை?” என்று வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு சிலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். “எல்லா நாட்டுலேயும் இதான் ரூல்” என்றும் சப்பைக்கட்டு.
எல்லா நாட்டிலேயும் ஒரு ரூல் இருக்கிறது என்பதற்காக அது இங்கேயும் இருக்க வேண்டும் என்பதில்லை. அப்படி எல்லா நாட்டிலேயும் அப்படித்தான் என்பதும் உண்மையில்லை என்பது வேறு விஷயம்.
இங்கே லைசன்ஸ் எடுப்பது சாதாரண விஷயமில்லை. அதை விட லைசன்ஸ் தொலைந்து போனால் திரும்பவும் duplicate லைசன்ஸ் எடுப்பது அதை விட மிகக் கடினமான விஷயம் வேறொன்றுமில்லை.
நானும் பல வெளிநாடுகளுக்குப் போய் வந்தவன் தான். எனவே ‘அங்கெல்லாம் இருக்குதே’ன்னு டகால்டியெல்லாம் இங்கே வந்து விட வேண்டாம்.
நான் தாய்லாந்திற்குச் சென்ற புதிதில் என்னிடம் இந்திய ட்ரைவிங் லைசன்ஸ் இல்லை. ஏனென்றால் நான் கல்லூரிக் காலத்தில் சைக்கிள் தான் ஓட்டிச் சென்றிருக்கிறேன். சைக்கிளுக்கு லைசன்ஸ் தேவை இல்லாததால் அதை இங்கே எடுக்கவில்லை. கல்லூரிப் படிப்பு முடித்து சென்னையில் சில மாதங்கள் இருந்த போதும் பேருந்துப் போக்குவரத்து தான். எனவே இங்கே லைசன்ஸ் என்ற வஸ்துவே எனக்குத் தேவைப்படவில்லை. அதை எடுப்பதற்கான அவசியமே எனக்கு ஏற்படவில்லை.அது இருந்திருந்தால் அதை வைத்து தாய்லாந்தில் லைசன்ஸ் எடுப்பது எளிது. அதே போல அமெரிக்காவிற்கு பணி நிமித்தம் செல்லும் போதெல்லாம் அங்கே நம் இந்திய அல்லது தாய்லாந்து நாட்டின் லைசன்ஸைக் காட்டியே ஏர்போர்ட்டில் வாடகைக் கார் எடுப்பதும், காவலர்களிடம் தேவைப்பட்டால் காட்டவும் செய்திருக்கிறோம். பிரச்னை எழுந்ததில்லை. இண்டர்நேஷனல் ட்ரைவிங் லைசன்ஸ் கட்டாயத் தேவையாக இருந்ததில்லை.
இந்திய லைசன்ஸ் இல்லாவிட்டால் இந்திய தூதரகத்தில் நாம இந்தியர் தான், தாய்லாந்தில் பணி நிமித்தமோ அல்லது டூரிஸ்டாகவோ வந்திருக்கிறோம் என்ற சான்று ஒன்றைப் பெற வேண்டும். அதை எடுத்துச் சென்று அங்குள்ள லைசன்ஸ் வழங்கும் அதாரிடியிடம் சென்றால் ஒரு புத்தகத்தைக் கொடுத்து போக்குவரத்து விதிமுறைகளைப் படிக்கச் சொல்வார்கள். படித்து முடித்து சென்று கம்ப்யூட்டர் தொடு திறையில் தேர்வினை முடிக்க வேண்டும். ஆம் / இல்லை பாணி கேள்விகள் தான். ஆனால் 20-க்கு குறைந்தபட்சம் 16 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.
என்னை அந்தத் தேர்வுக்கு என்னுடைய குருவான நண்பர் Sathik Hanifa தான் அழைத்துச் சென்றார்.
இதில் தோல்வியடைந்து விட்டால் பிறகு மறுநாள் தான் மீண்டும் தேர்வு அனுமதி கொடுப்பார்கள்.
முதல் தடவை 15 மார்க்.. இரண்டாவது தடவை 14 மார்க்.. மூன்றாவது தடவை 19 மார்க். மூன்றாவது நாள் தான் தேர்வானேன். வெயிட்டீஸ்.. உடனே லைசன்ஸ் கிடைத்து விடவில்லை.
இது முடிந்த பிறகு வண்டி ஓட்டிக் காட்டச் சொல்வார்கள். நம்மூர் மாதிரி 8 போட்டுக் காட்ட வேண்டாம். ஆனால் ஒரு குட்டி மைதானத்தில் மேடு, பள்ளமெல்லாம் இருக்கும். பத்து, பதினைந்து பைக், நான்கைந்து கார் என்று ஒரே சமயத்தில் ஆட்களை ஓட்டச் சொல்வார்கள். கார் என்றால் சரியான வேகத்தில் இண்டிகேட்டர் எல்லாம் போட்டு, சீட் பெல்ட் எல்லாம் போட்டு ஓட்ட வேண்டும். பைக் என்றால் காருக்குப் பின்னாலிருந்து ஓவர் டேக் செய்யும் போது ஹார்ன் அடித்து, திருப்பங்களில் கை காட்டி, காலைக் கீழே ஊன்றாமல் ஓட்ட வேண்டும்.
முதல் தடவை எனக்கு முன்னால் போன பிரகஸ்பதி காரினை நட்ட நடுவில் நிறுத்தி விட்டு திரும்ப எடுக்கத் தெரியாமல் தடவிக் கொண்டிருந்ததால் நான் பின்னால் நிற்க வேண்டியதாகிப் போய் விட்டது.
போச்சா? என்னையும் சேர்த்து ஃபெயிலாக்கி விட்டார்கள். பிறகு மறுநாள் சென்று சரியாக ஓட்டிக் காட்டி லைசன்ஸ் பெற்று வந்தேன்.
பிறகொரு சமயம் இந்தியாவிற்கு வந்த போது ஊரிலேயே அந்த லைசன்ஸை வைத்து விட்டுச் சென்று விட்டேன். நேரே சென்று லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் எழுதிக் கொடுத்தேன். அதற்கு 20 தாய் பாட் (நம்மூர் கணக்குக்கு 40 ரூபாய்) கட்டணம். அதற்கு ரசீது உண்டு. என்னிடம் அன்று 500 பாட் நோட்டாகத் தான் கையில் இருந்தது. “சரி சரி.. அடுத்த தடவை லைசன்ஸ் தொலைஞ்சிச்சுன்னு புகார் கொடுக்க வரும் போது சேர்த்து தரவும்” அப்படின்னு போலீஸ் ஸ்டேஷனில் காசே வாங்காமல் வழி அனுப்பினார்கள்.
தாய்லாந்து நாட்டில் போலீஸ் ஸ்டேஷனில் சென்றால் ஏதோ சமூக விரோதியைப் பார்ப்பது போலெல்லாம் லுக் விட மாட்டார்கள். கனிவான வரவேற்பு இருக்கும். அங்கேயும் லைசன்ஸ் இல்லாமலோ அல்லது வேறு தவறாகவோ வண்டி ஓட்டி மாட்டினால் லஞ்சம் கொடுத்து தப்பிக்கலாம் தான். ஆனால் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும் என்று கட்டாயமில்லை.
அவர்கள் எழுதிக் கொடுத்ததை எடுத்துக் கொண்டு
லைசன்ஸ் அலுவலகத்தில் கொடுத்தால் 50 பாட் கட்டணம் செலுத்தினால் போதும். அடுத்த சில நிமிடங்களில் டூப்ளிகேட் லைசன்ஸ் கையில் கிடைத்து விடும். 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த தாய்லாந்து லைசன்ஸ் இன்னமும் புத்தம் புதிது போலவே என்னிடம் இருக்கிறது. ப்ளாஸ்டிக் தான். ஆனால் கனமான ப்ளாஸ்டிக் கார்டு. மடங்காது. உடையாது.
லைசன்ஸ் வழங்கும் அலுவலகத்திலும் கூட கும்பலாக ட்ரைவிங் செண்டர் ஆட்கள் கூடி நின்று கும்மியடிக்கும் வேலையெல்லாம் இருக்காது. உள்ளே நுழையும் போதே டோக்கன் நம்பர் கொடுத்து உட்கார வைத்து விடுவார்கள். லைசன்ஸ் வழங்கும் அலுவலகம் நான்கைந்து மாடிகள் கொண்ட விசாலமான கட்டடம். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு பகுதி. லைசன்ஸ் வழங்குவதற்கு மட்டும் சுமார் 30 பேர் இருப்பார்கள். டோக்கன் நம்பர் படி தான் அழைக்கப்படுவோம். உள்ளே ஃபேன், நாற்காலி, படிக்க பேப்பர், பார்க்க டிவி, சுத்தமான குடிநீர் என்று சகல வசதிகளும் வருகையாளர்களுக்கு இருக்கும். கேண்டீன் கூட உண்டு. என்ன தான் கூட்டம் என்றாலும் நீண்ட நேரமெல்லாம் காத்திருக்க நேராது.
”இப்போ அப்ளை பண்ணிட்டு ஈவினிங் வா” கதையெல்லாம் கிடையாது.
“காலையிலே 9.30யிலேருந்து 11 மணி வரைக்கும் தான் அப்ளை செய்ய முடியும்” என்றெல்லாம் கதை கிடையாது. வேலை நாட்களில் நாள் முழுவதும் எப்போதும் உண்டு.
“குறிப்பிட்ட நாளன்று லைசன்ஸ் அலுவலகத்திலிருந்து 2 கிலோ மீட்டர் ஒதுக்குப் புறத்தில் வந்து 8 போட்டுக் காட்டு” என்ற சங்கதி கிடையாது.
“நீ நேரடியா வந்தியா, ட்ரைவிங் ஸ்கூல் வழியா வந்தியா?” என்ற கேள்வியெல்லாம் கிடையாது.
பாக்கெட்டில் வைத்தாலே வளைந்து, நெளிந்து, உடைந்து போகுமளவிற்கு கேவலமான ப்ளாஸ்டிக்கில் அச்சடித்துத் தரப்படுவது கிடையாது.
இதையெல்லாம் விட... லைசன்ஸை மறந்து வீட்டில் வைத்துச் சென்று விட்டால் கையில் இருக்கும் வேறு அடையாள அட்டை எதையும் காட்டி எழுதி வாங்கி வந்து பிறகு சென்று அதனைக் காவல் நிலையத்தில் காட்டலாம். பாஸ்போர்ட், வொர்க் பர்மிட் எல்லாம் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே கையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் தான். வைத்திருக்கத் தான் செய்தேன். இப்போது இங்கேயும் என் காரில் ஒரிஜினல் லைசன்ஸ் எப்போதும் இருக்கும் தான். ஆனால் நான் கையில் ஒரிஜினல் தான் வைத்திருக்கிறேன். எல்லோரும் கையில் ஏன் வைத்துக் கொள்ளவில்லை என்று அடிப்படை பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் அசட்டுத் தனமாக நான் கேள்வி எழுப்ப மாட்டேன்.
எனக்கு லைசன்ஸ் காணாமல் போனால் மீண்டும் நயா பைசா லஞ்சம் கொடுக்காமல் லைசன்ஸ் எடுக்கத் தெரியும். ஏனென்றால் முதல் தடவை லைசன்ஸ் எடுத்த போதே அப்படிச் செய்தவன் தான் நான். முதல் தடவை அலைக்கழிக்கப்பட்டு தான் லைசன்ஸ் வாங்கினேன். அந்தக் கதையை அப்போதே எழுதியிருக்கிறேன்.
லைசன்ஸ் எடுப்பதையும், அதன் நகல் எடுப்பதிலேயும் நடைமுறைச் சிக்கல்களையெல்லாம் நீக்கப்பட வேண்டும். எளிமையாக்கப்பட வேண்டும்.
லைசன்ஸையும் ஸ்மார்ட் கார்டாக மாற்ற வேண்டும்.
அதையெல்லாம் விட டிஜிலாக் என்ற மொபைல் செயலியில் நமது லைசன்ஸை நம் ஸ்மார்ட் ஃபோனில் தரவிறக்கிக் கொள்ளும் வசதில் இருக்கிறதே. ஆனால் அப்படி தரவிறக்கம் செய்யும் ஈ-லைசன்ஸை ஏன் ஒரிஜினல் என்று ஏற்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் இருக்கிறதா?
ஆதார் அட்டையையே ஈ-ஆதார் என்று ஏற்றுக் கொள்ளும் போது இதனை ஏன் ஏற்கக் கூடாது?
லைசன்ஸ் செக் செய்யும் காவல் அதிகாரிகள் கையில் ஒரு ஸ்மார்ட் ஃபோனைக் கொடுத்து நாம் ஈ-லைசன்ஸ் காட்டினால் அது உண்மையா,நம் புகைப்படம் தான் இருக்கிறதா என்று அவர்கள் சரி பார்க்க வசதி செய்து கொடுக்கலாமே?
அப்படி முடியாதென்றால் என்ன கூந்தலுக்கு ஈ-லைசன்ஸ், எறும்பு லைசன்ஸ் என்றெல்லாம் மக்கள் வரிப்பணத்தில் வடிவமைத்து வைத்திருக்கிறார்கள்?
இதெல்லாம் தான் கேள்விகள். இதை எல்லாம் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சரிடமும் கேட்டேன். (அவருடைய பதில் நாளை செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகும் புதிய தலைமுறை வார இதழில் வெளியாகும்). வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சிலரிடம் நேரில் சென்றும் கேட்டேன். அதையே தான் இங்கேயும் கேட்கிறேன்.
எனவே அடிப்படை விபரம் புரியாமல், “ஒரிஜினல் லைசன்ஸ் கையில் வைத்திருந்தால் என்ன பிரச்னை?” என்றெல்லாம் கமெண்ட்ட வேண்டாம்.
நான் நம்மூரில் லைசன்ஸ் எடுத்த காதை :
இதன் ஃபாலோ-அப்பாக நான் கோவை வந்து முகவரி மாற்றத்திற்குக் கொடுத்த போது அதற்கு ஒரு தனி பஞ்சாயத்து நடந்தது. ”சென்னையிலே NOC வாங்கணும். அங்கே போய் வாங்க முடியலைன்னா இங்கே 600 ரூபாய் தாங்க. நாங்க முடிச்சுத் தரோம்” அப்படின்னு வெளியில் இடைத்தரகர்கள் சொன்னார்கள். ‘போங்கடாங்...’ அப்படின்னுட்டு இதற்காகவே சென்னைக்குச் சென்று அங்கே NOC வாங்கி வந்து இங்கே முகவரி மாற்றம் செய்தேன். போக்குவரத்து, தங்குமிடச் செலவு ரூ. 2,000. அதுவும் நான் 9 மணிக்கே சென்று போராடி நின்றும் 2 மணி நேரம் காக்க வைக்கப்பட்டு, “நாளைக்கு வாங்க” என்று பதில் வந்து மேலே உள்ள எனது ஃப்ளாஷ் பேக் இணைய இணைப்பை மொபைல் ஃபோனில் எடுத்துக் காட்டியவுடன் 5 நிமிடங்களில் NOC கொடுக்கப்பட்டது தனிக்கதை.
அவனவன் பாஸ்போர்ட்டையே அச்சு அசல் மாதிரி டூப்ளிகேட் அடிக்கிறான். லைசன்ஸ் ஹாலோகிராமெல்லாம் போட்டு டுபாகூர் அடிக்கிறது செய்ய மாட்டானுங்களா என்ன?
கையிலே வெச்சிருக்கிற லைசன்ஸ் ஒரிஜினல் தானான்னு டேட்டா பேஸில் ஸ்பாட் செக் செய்யும் ஆப்ஷன் இல்லாத வரையில் இதெல்லாம் வேஸ்ட் தான்.
ஆகவே.. மீண்டும் சொல்கிறேன்..
எனக்கு லைசன்ஸ் காணாமல் போனால் மீண்டும் நயா பைசா லஞ்சம் கொடுக்காமல் லைசன்ஸ் எடுக்கத் தெரியும். சட்டப்பூர்வமாகச் சென்று தான் வாங்குவேன். எதிர்க்குரல் எழுப்புவேன். ஆனால் எத்தனை பேரால் இது முடியும் என்பது தான் கேள்வி. அப்படி முடியாதபட்சத்தில் மக்களை இன்னலுக்குள்ளாகும் இந்த அவசரச் சட்டம் தேவையா என்பதே கேள்வி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...