Saturday, September 22, 2018

உண்மை அறிவாளி கள் தேவையில்லை போலும்.

இன்றைய கல்வியைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்து கொள்ளாமல் இங்கு பலர் பதிவிடுகின்றனர். தங்கள் குழந்தைகள் 90% 95% 98% என மார்க் வாங்கி இருப்பதாக பல பெற்றோர்கள் பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் 30% வாங்கக் கூட தகுதி இல்லாதவர்கள் என்பது புரிவதில்லை. நான் சின்ன உதாரணம் சொல்கிறேன், பாருங்கள்.
தசரதன், மனைவிகள், மகன்கள், மருமகள்கள் என்று ஒரு பாடம் இருப்பதாக கொள்வோம். அந்தப் பாடம் ஒரு நான்கு பக்கங்கள் இருக்கும். பாடத்தின் முடிவில் ஐந்தாவது பக்கத்தில் கேள்வி பதில்கள் இருக்கும். எப்படி இருக்கும்? பாருங்கள்.
1. ராமரின் தந்தையின் பெயர் என்ன?
2. ராமரின் மனைவி பெயர் என்ன?
3. தசரதரின் தலைநகரம் யாது?
இவை கேள்விகள். பிறகு இவ்வாறு இருக்கும்:
1. சீதை __________நாட்டை சேர்ந்தவர்
2. இலக்குவனின் மனைவியின் பெயர் _______
3. பரதனின் தாயார் பெயர் ____________
எங்கள் காலத்தில் பாடத்தை விளக்கமாக நடத்துவார்கள். அதன் பிறகு அந்த பாடத்தில் எந்த வித கேள்விகள் வந்தாலும் நாங்கள் எழுத வேண்டும். சிலது ஒரு மார்க் கேள்விகளாக இருக்கும். சிலது ஐந்து மார்க் கேள்விகளாக இருக்கும். அதற்கேற்றவாறு பதில்களை நாங்களே எழுதுவோம்.
இப்போது அப்படி அல்ல. மேலே சொல்லி இருப்பது போல கேள்விகளும், கோடிட்ட இடத்தை நிரப்புக என்றும் இருக்கும். இந்த மூன்று கேள்விகளுக்கும் ஆசிரியர் பதில்கள் எழுதிப் போடுவார். அதை மாணவர்கள் எழுதிக் கொள்ள வேண்டும். பிறகு கோடிட்ட இடத்தில் என்ன வரும் என்றும் எழுதிப் போடுவார். அதையும் மாணவர்கள் எழுதிக் கொண்டு, படித்து மனப்பாடம் செய்ய வேண்டும்.
பரீட்சைகளில் இதே கேள்விகள், இதே மாதிரிதான் வரும். எழுதிப் போட்ட பதில்களை மட்டுமே எழுத வேண்டும். உடனே நூற்றுக்கு நூறு மார்க் கிடைத்து விடும். வேறு மாதிரி கேட்டால் மாணவன் அவுட். உதாரணமாக,
1. இலக்குவனின் மனைவியின் பெயர் என்ன?
2. ராமனின் தம்பிகள் எத்தனை பேர்? அவர்களின் பெயர்களை எழுதுக.
3. தசரதரின் மனைவிகள் யாவர்?
என்று கேள்விகள் வந்தால் உடனே “Out of Syllabus” என்கிற கூக்குரல் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலிக்கும். அது கூட வேண்டாம். கோடிட்ட இடத்தை நிரப்புக என்பன கேள்விகளாகவும், கேள்விகள் கோடிட்ட இடத்தை நிரப்புக என்று மாற்றி வந்தாலும், உடனே மாணவர்கள் மயக்கம் அடைந்து விடுவார்கள். ஆசிரியர்கள் தடுமாறுவார்கள் (ஏன்னா அவங்களுக்கே ஒண்ணும் தெரியாது). உடனே முதலமைச்சர், கவர்னர் எல்லோருமே கருணை கூர்ந்து அந்த கேள்விகளை அப்படியே எழுதி இருந்தால் கூட முழு மதிப்பெண்கள் உண்டு என அறிவித்து விடுவார்கள்.
நான் சொல்வதில் துளியும் கற்பனை கலப்பு இல்லை. முழுவதும் உண்மை. உங்கள் குடும்பத்தில் படிக்கும் குழந்தைகள் இருந்தால் நான் சொல்வது சரியா இல்லையா என்று இப்பொழுதாவது கண்டறிந்து கொள்ளுங்கள்.
பள்ளிப் படிப்பு மட்டுமல்ல, டிகிரி வரை இதே கூத்துதான். இப்படியே கடைசி வரை படிக்கிறார்கள். பிறகு இந்த தேசம் எப்படி உருப்படும்? இந்த லட்சணத்தில் என் மகன் இஞ்சினியர். ஆனால் அவனுக்கு வேலையே கிடைக்கவில்லை என்கிற ஒப்பாரி வேறு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...